மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

பிரம்ம சமாஜம்  

##~##

இந்திய சமூக வரலாற்றில் பிரம்ம சமாஜத்தின் தாக்கமும் பங்களிப்பும் தனித்துவம் கொண்டது. இந்தச் சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ராஜாராம் மோகன் ராய். மூன்று முக்கியக் கவனங்களைக் கொண்டிருந்தது பிரம்மசமாஜம். மூடநம்பிக்கைகளை களைந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது போன்ற ஒருமித்த, எளிய, சடங்குகள் அற்ற ஆன்மிகத்தை முன்வைப்பது இதன் முதல் கவனம். அடுத்தது, இந்தியச் சமூகத்தில் காலம் காலமாக மறுக்கப்பட்ட பெண் கல்வி, விதவை மறுமணம், பால்ய விவாகத்தை தடுப்பது, ஜாதி பேதமின்றி சமவேலை, சம ஊதியம் போன்ற சமூக மாற்றங்களை முதன்மைப்படுத்துவது.  மூன்றாவது, தேசிய உணர்வைஊட்டி இந்திய அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவது. இந்த மூன்று தளத்திலும் பிரம்ம சமாஜத்தின் செல்வாக்கும் வளர்ச்​சியும் குறிப்பிடும்படி இருந்துள்ளது.

இந்திய தேசியக் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் பலர் வங்காளிகளே. இவர்களில் பிரம்ம சமாஜத்தை சேர்ந்தவர்கள் அதிகம். குறிப்பாக, விபின் சந்திர பால், அரவிந்தர், சி.ஆர். தாஸ் போன்றோர் பிரம்ம சமாஜ உறுப்பினர்களே. இவர்களைப் போலவே, வங்காளத்தில் அறிவுஜீவிகளாக அறியப்பட்ட ஈஸ்வர சந்திரர், தாகூர், மற்றும் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ், பிரபுல்ல சந்திர ராய் ஆகியோர் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்கள்தான். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே கூட பிரம்ம சமாஜ உறுப்பினர்தான்.

எனது இந்தியா!

பிரம்ம சமாஜம் கி.பி.1828-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே, முதல் சீர்திருத்த இயக்கம். ராஜாராம் மோகன் ராய் கி.பி. 1772-ல் வசதி படைத்த வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர். ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன், ஹீப்ரூ, கிரேக்கம், சமஸ்​கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளைக் கற்றறிந்த இவர், ஆங்கில வழிச் சிந்தனையில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்துக்குச் சென்று இருக்கிறார்.

'ஒற்றைத் தெய்வ’ வழிபாட்டைத்தான் பிரம்ம சமாஜிகள் பின்பற்ற வேண்டும். இதை பிரம்ம சமாஜ ஆவணத்தில் ராஜாராம் மோகன் ராய்  தெளிவுபடுத்தி இருக்கிறார். கடவுளை வணங்கும்போது நமது இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். குறிப்பாக, நம்மில் உள்ள 'தான்’ என்ற அகந்தையை அகற்றிவிட்டு நமது ஆத்மாவை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இதனால், மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதை உணர முடியும் என்பதை ராஜாராம் மோகன் ராய் வலியுறுத்தினார்.

எனது இந்தியா!

பௌத்தம், சமணம், கிறிஸ்தவம் என எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் பேதம் காட்டாமல் ஒருமித்து அறிந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பரந்த உணர்வுடன் செயல்பட்டது பிரம்ம சமாஜம். இந்து மதத்தின் ஞானவழியை முதன்மையாகக் கருதியது இந்த இயக்கம். ஆகவே, அறிவார்ந்த செயல்பாட்டுக்கான களமாக தன்னை வடிவமைத்துக்  கொண்டது. பிரம்ம சமாஜமே வங்காளத்தில் நிலவிய சாதிய ஒடுக்கு முறைகளை அகற்றி, மானுட நேசத்தை வளர்த்து இருக்கிறது. பிரம்ம சமாஜம், 19-ம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமானது. இந்திய வரலாற்றில் 19-ம் நூற்றாண்டு மிகவும் முக்கியமானது. இந்த நூற்றாண்டில்தான் பல பண்பாட்டு மாற்றங்கள், அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இன்று நாம் காணும் நவீன இந்தியா என்பதே, 19-ம் நூற்றாண்டு இந்தியாவின் குழந்தைதான் என்று நேரு கூறி இருக்கிறார்.

பிரம்ம சமாஜம் என்பதற்கு பரம்பொருள் வழிபாட்டுச் சங்கம் என்று அர்த்தம். 'உருவ வழிபாடு கூடாது, ஆனால்  உபநிடதங்கள், வேதங்களை ஆழ்ந்து கற்று அந்த நெறிப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்’ என்று ராஜராம் மோகன் ராய் கருதினார் என்கிறார் தமிழகத்தில் பிரம்ம சமாஜம் நூலை எழுதிய பெ.சு.மணி. ராஜராம் மோகன் ராய், பிரம்ம சமாஜத்தை தொடங்குவதற்கு முன் ஆத்மிய சபா, யூனிடேரியன் சர்ச் எனும் இரண்டு அமைப்புகளை உருவாக்கி இருக்கிறார். 1815-ல் கல்கத்தாவில் ஆத்மிய சபா அமைக்கப்பட்டது. அதில், முற்போக்கு எண்ணம் கொண்ட வங்காளிகள் பலர் சேர்ந்தனர். இந்தச் சங்கம், உடன்கட்டை ஏறுவதை தடை செய்வது, பலதார மணமுறையை ஒழிப்பது, பெண் கல்வியை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தியது. அதேநேரம், ஆங்கிலக் கல்வியை ஆதரிப்பது, ஆங்கில வழிச் சிந்தனையை கொண்டு இந்திய வேதங்களை, மதநம்பிக்கையை ஆராய்வது என்ற செயல்பாட்டையும் முன்வைத்தது. ஆங்கிலம் கற்ற இந்தியர்கள், தங்களின் பூர்வ அடையாளங்கள் ஆங்கிலேயருடன் கலப்பதற்கு தடையாக இருப்பதில் இருந்து விடுபட ஆங்கிலக் கல்வி உதவும் என்று நம்பினர். ஒருவகையில் இது ஆங்கிலேயருடன் எளிதாகப் பழகுவதற்கும் அவர்களோடு சேர்ந்து வாழ்வதற்குமான சாளரமாகக் கருதப்பட்டது.

சமஸ்கிருத நூல்கள் மட்டுமின்றி வங்காளத்தின் சமய நூல்களில் இருந்தும் திரட்டப்பட்ட அறிவை முதன்மைப்படுத்தி விவாதங்கள் இந்தச் சபையில் நடந்தன. அதுபோலவே, கிறிஸ்தவ சமயத்தில் உள்ள டிரினிடேரியனிஷம் என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்து உருவானதே யூனிடேரியனிஷம். இது, அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கியது. ராஜாராம் மோகன் ராய் இந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்டு, 'ஒன்றே தெய்வம்’ என்ற கோட்பாட்டை இந்தியாவிலும் பரப்ப விரும்புவதாகத் தெரிவித்தார். அதன் விளைவாக உருவானதே யூனிடேரியன் சர்ச்.

1823-ம் ஆண்டு ராஜாராம் மோகன் ராய், துவாரக நாத் தாகூர், வில்லியம் ஆதம் ஆகிய மூவரும் இணைந்து 'யூனிடேரியன் சர்ச்’ என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்புக்குச் சென்னையில்

எனது இந்தியா!

ஓர் கிளை இயங்கி இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தை அதன் அற்புத நிகழ்ச்சியை விலக்கிவிட்டு தாங்கள் ஏற்றுக் கொள்வதாக ராய் தெரிவித்து இருக்கிறார். ராஜாராம் மோகன் ராய், இளவயதில் பாட்னாவில் இஸ்லாமிய மார்க்கம் குறித்து கற்று அறிந்திருக்கிறார். அதேநேரம், காசியில் இந்து சமய சாஸ்திரங்களை ஆழ்ந்து கற்று இருக்கிறார். பிறகு, கல்கத்தாவில் கிறிஸ்தவ மதநெறிகளை உணர்ந்து கற்று இருக்கிறார். அத்துடன், திபெத்துக்குச் சென்று பௌத்த ஞானத்தையும்,  யூத மத அறநெறிகளையும் ஆராய்ந்து கற்றிருக்கிறார். பல சமயத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து இயங்க ஓர் அமைப்பு தேவை என்பதை, தீவிரமாக உணர்ந்த அவர், பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார். 'என்னுடைய ஆங்கில நண்பர்கள் இந்து சமயத்தின் மூடநம்பிக்கைகளை விமர்சனம் செய்கின்றனர். அது எனக்கும் சரி என்றே தோன்றுகிறது. ஆகவே, அவற்றை விலக்கி தூய்மையான ஞானநெறியை முதன்மைப்படுத்தியே எனது அமைப்பை உருவாக்கினேன்’ என்று ராஜாராம் மோகன் ராய் கூறி இருக்கிறார். சாதி வேறுபாடு மற்றும் ஒடுக்கு முறை காரணமாகவே மக்களிடம் தேசப்பற்று ஏற்படாமல் இருக்கிறது. ஆகவே, சீர்திருத்த இயக்கங்கள் மூலமாக மக்களிடம் தேசப்பற்றை உருவாக்க முடியும் என்று ராய் நம்பினார். தனது சமாஜம் சமய வளர்ச்சியோடு சமூக வளர்ச்சியையும் முதன்மைப்படுத்தி செயல்படும் என்று கூறினார். விவேகானந்தரும் பிரம்ம சமாஜத்தில் இருந்து இருக்கிறார். அவர், ராஜாராம் மோகன் ராயைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவரிடம் வேதாந்தத்தை முதன்மைப்படுத்தும் தன்மையும் தேசபக்தியும் இந்து இஸ்லாமியர்களை சமமாக நடத்தும் மனப்பாங்கும் இருந்தது என்று கூறியிருக்கிறார். பிரம்ம சமாஜம் வங்காளத்தில் புகழ்பெற்று வளரத் தொடங்கியபோது, தங்களின் பிள்ளைகள் எங்கே பிரம்ம சமாஜிகள் ஆகிவிடுவார்களோ என்று, வங்காளத்தில் ஏராளமான பெற்றோர் பயந்து விட்டனர். தாகூர் தனது நாவலில், பிரம்ம சமாஜம் எந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ராஜாராம் மோகன் ராய் தனது அமைப்பை வலுப்படுத்த பத்திரிகைகள் நடத்தியதோடு, சமய விவாதங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தார். ராய் மறைவுக்குப் பிறகு, 'வித்யா வாகீசர்’ சமாஜத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். தேவேந்திரநாத் தாகூர் பிரம்ம சமாஜத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர், 'ஆதி பிரம்ம சமாஜம்’ என்று பெயரை மாற்றினார். இதன் விளைவாக, அமைப்பில் முதல் விரிசல் ஏற்பட்டது.

தேவேந்திரநாத் தாகூர் ஆதரவு உறுப்பினர்கள், வங்காளத்தில்தான் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறியதோடு, கிறிஸ்தவ சமயத்தோடு உள்ள நெருக்கமான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்பதையும் முதன்மைப்படுத்தினர். இது, பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன்விளைவாக,  ஆதி பிரம்ம சமாஜம், இந்திய பிரம்ம சமாஜம், சாதாரண பிரம்ம சமாஜம் என மூன்று அமைப்பாக ஆரிய சமாஜம் பிளவுபட்டது.

பொதுவாக, பிரம்ம சமாஜத்தினர் கூடும் அறையில் ஒரு ஆச்சாரிய பீடம் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் முன், ஒரு திரை தொங்க விடப்பட்டு இருக்கும். திரைக்கு பின்னால் உள்ள ஆச்சார்ய பீடத்தில் ஒரு அந்தணர் வேதம் ஓதி பிரார்த்தனையைத் தொடங்கி வைப்பார். பிறகு, வங்க மொழியில் பிரம்ம சமாஜ பாடல்கள் ஒலிக்கும். இதைஅடுத்து இஸ்லாமிய, யூத, கிறிஸ்தவ ஞானிகளின் சொற்பொழிவு நடக்கும். தேவேந்திரநாத் தாகூர் பிரம்ம சமாஜத்தை பின்னுக்கு கொண்டு செல்கிறார் என்று, வெளிப்படையாகவே கூறிய கேசவ் சந்திர சென் அதை கிறிஸ்தவ நெறிமுறைகளுடன் இணைத்து கைக்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. ஆச்சாரிய பீடத்தில் அமருபவர் சாதிச் சின்னம் அணியக் கூடாது, படித்த, அறிவாளி மட்டுமே அந்தப் பீடத்தில் அமர வேண்டும், துதிப்பாடல்களுக்குப் பதிலாக விரிவான விளக்கவுரைகள் ஆற்றப்பட வேண்டும் என்று, கேசவ சந்திர சென் கூறினார்.

தொடரும் பயணம்...