மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

ரகசிய ரேடியோ  

##~##

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு துணையாக நின்ற எத்தனையோ மனிதர்கள், இயக்கங்கள், நிகழ்ச்சிகள் இன்றும் வரலாற்றின் இருண்ட பகுதிக்குள் புதையுண்டு இருக்கின்றன. அதில் ஒன்று​தான், காங்கிரஸ் ரேடியோ எனப்படும் ரகசிய ரேடியோ ஒலிபரப்பு. கடுமையான தணிக்கைகளும் அடக்கு​முறைக​ளும் இருந்த பிரிட்​டிஷ் இந்தியாவில், சுதந்திர எழுச்சியை மக்​களுக்கு ஊட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய ஒலிபரப்பு நிலையமே காங்கிரஸ் ரேடியோ. 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டபோது காந்தி உள்ளிட்ட அத்தனை முக்கியத் தலைவர்​களும் கைது செய்யப்பட்ட நிலையில், மக்களுக்கு உண்மைச் செய்திகளை தெரிவிக்க இந்த ரேடியோ நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ரேடியோ ஒலிபரப்பை உருவாக்கியவர் உஷா மேத்தா. மும்பையைச் சேர்ந்த இவர், பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்று, 'ஹாம் ரேடியோ’ எனப்படும் தனிநபர் ஒலிபரப்புக் கருவிகளை வாங்கி இந்த ரகசிய ஒலிபரப்புச் சேவையை நடத்தினார். இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் ராம் மனோகர் லோகியா, விட்டல்பாய் ஜவேரி, சந்திரகாந்த் ஜவேரி மற்றும் பாபுபாய் தாகூர். 88 நாட்கள் மட்டுமே செயல்பட்ட இந்த சுதந்திர ரேடியோவின் கதை மிக சுவாரஸ்​யமானது.

ரகசிய ரேடியோ ஒலிபரப்பு உருவாக்கப்பட்டதன் பின்புலத்தை அறிந்துகொள்வதற்கு முன், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உருவானதை அறிவது மிக அவசியம்.

எனது இந்தியா!

1942-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு முழுமை​யான விடுதலை வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்​பட்டது. அதன் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி அறிவித்தார். காந்தி​யின் இந்த முடிவை ஏற்க, பலர் மறுத்தனர். கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், காந்தி தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பையில் உள்ள குவாலியா டேங்க் மைதானத்தில் நடந்த மாநாட்டில் பேசிய காந்தி, இந்தியாவுக்கு உடனே சுதந்திரம் வழங்கக் கோரி 'வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை ஆரம்பித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய காந்தி, 'உலகப் போர் தொடங்கியபோது பிரிட்டன் மீது எனக்கு ஏற்பட்ட அனுதாபம் இப்போது முற்றிலும் அகன்றுவிட்டது. இனி, பிரிட்டிஷாரின் உத்தரவுகளைப் பின்பற்றாமல் ஒரு சுதந்திர தேசத்தைப் போல் மக்கள் நடந்துகொள்ள வேண்டும். இந்தப் போராட்டக் களத்தில் காங்கிரஸார் ஒவ்வொருவரும் தங்களைப் போர் வீரர்களாக எண்ணிக்கொண்டு கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். அதாவது, 'செய் அல்லது செத்து மடி’ என்பதே நமது நிலைப்பாடு. இது, காங்கிரஸ்​காரர்கள் ஒவ்வொருவருக்கும் நான் இடும் கட்டளை’ என்று காந்தி கூறினார்.

இந்த அறிவிப்பின் விளைவாக மறுநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி காந்தி கைதுசெய்யப்பட்டு புனேயில் உள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். காந்தியின் மனைவி கஸ்தூரி பாயும் மும்பையில் கைதுசெய்யப்பட்டு, பூனா கொண்டுவரப்பட்டார். அவரும் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். அபுல்கலாம் ஆசாத், பண்டித நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியும், அதன் சகலவிதமான துணை அமைப்புகளும் தடை செய்யப்பட்டு இருப்பதாக, ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இந்தத் தொடர் கைது சம்பவங்களைக் கண்டித்து, இந்தியா முழுவதும் கிளர்ச்சி நடந்தது. பல இடங்களில் வன்முறைகள் நடந்தன. ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தவிடாமல் கலைப்பதற்கு போலீஸும் ராணுவமும் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும், சில இடங்களில் கலவரம் பரவியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வளவு நெருக்கடி கொடுத்தும் சுதந்திர எழுச்சியை பிரிட்டிஷ் அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடிய​வில்லை. தமிழகத்தில் காமராஜர், கக்கன், ம.பொ.சி. உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மிக மோசமாக நடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்களுக்கு கசை​யடியும் கடுமையான தண்டனைகளும் தரப்பட்டன. உணவில் மூத்திரத்தைக் கலந்து கொடுத்து கைதிகள் அவமதிக்கப்பட்டனர்.

எனது இந்தியா!
எனது இந்தியா!

இந்தச் சூழலில் காந்தியின் போராட்ட வழிகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், இந்தியா முழுவதும் நடந்த மக்கள் எழுச்சி குறித்த தகவல்களை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளவும் ஒரு ரேடியோ தேவைப்பட்டது. ஆனால், இன்று இருப்பதுபோல அந்தக் காலங்களில் ரேடியோ தொழில்நுட்பம் நவீன வளர்ச்சி அடைந்து இருக்கவில்லை. 1921-ம் ஆண்டு தனியார் பயன்பாட்டுக்கான ரேடியோ சாதனங்களைக்கொண்டு 'ஹாம் ரேடியோ’வை முதன்முதலாக அமைத்தவர் அமரேந்திரநாத் சந்தர். அவரைத் தொடர்ந்து, முகுல்போஸ் தனக்கெனப் பிரத்யேக ஒலிபரப்பு முறையை அமைத்து ஹாம் ரேடியோவை இயக்கிவந்தார். 1923-ம் ஆண்டில் இந்தியா முழுவதுமே இதுபோல 20 ஹாம் ரேடியோக்​கள்தான் இருந்தன.  

1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, பிரிட்டிஷ் அரசு ஹாம் ரேடியோக்களின் லைசென்ஸ்களை நிறுத்தியதோடு உபகரணங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அப்போது, 50-க்கும் குறைவாகவே ஹாம் இயக்குனர்​கள் இந்தியாவில் இருந்தனர். இவர்களில் முக்கியமானவர் நாரிமன் அப்ரபாத் பிரின்டர். இவர், பம்பாயில் ஹாம் ரேடியோ நடத்திவந்த பார்சிக்காரர். லண்டனில் படித்த பிரின்டர், தொழில்நுட்பக் கல்லூரி நடத்திவந்தார். ஆகவே, அவரால் இந்தியாவில் கிடைக்கும் தொழில்நுட்பக் கருவிகளைக்கொண்டு தரமான ஹாம் ரேடியோவை உருவாக்க முடிந்தது.

ஹாம் ரேடியோ எனப்படுவது தனியார்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒலிபரப்பு செய்துகொள்ளும் தன்னார்வ சேவை. புயல் மற்றும் இயற்கைச் சீற்றத்தின்​போது இந்த ஹாம் ரேடியோக்கள் தகவல் பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவும். மேலும், ராணுவத்தின் செயல்பாடுகளுக்கே இதுபோன்ற ரேடியோக்கள் பெரிதும் பயன்படுத்தப்​பட்டன. இந்த ரேடியோவை உருவாக்க அதிகப் பொருட்செலவு கிடையாது. ஆகவே, பிரின்டர் இதுபோன்ற ஒரு ரேடியோவை உருவாக்கி எளிதாக நடத்திவந்தார். இவரைப் போலவே, தானா என்பவர் 'ஆசாத் ரேடியோ’ என்ற பெயரில் ஒரு ரகசிய ரேடியோவை உருவாக்கி, அதில் சுதந்திர கீதங்களையும் தடை செய்யப்பட்ட சொற்பொழிவுகளையும் ஒலிபரப்பிவந்தார். இது, 1940-களில் நடந்தது. தானாவின் இந்தச் செயல்பாடு கண்டறியப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து தொழில்நுட்பக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில்தான், வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவு தருவதற்கான ரேடியோவை உருவாக்கும் பணி தொடங்கியது. பிரிட்டிஷ் உளவாளிகளின் கண்களுக்குத் தப்பி இதை எப்படி செய்வது என்பதற்கு, ஒரு ரகசிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில், உஷா மேத்தா இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உஷா மேத்தா, குஜராத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா பிரபல நீதிபதி. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த

எனது இந்தியா!

உஷா, தனது பள்ளி வயதில் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்தார். காந்திய வழியில் நாட்டம்கொண்டதுடன் ஆசிரமப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சைமன் கமிஷன் வருகையின்போது, அதை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட உஷா, தனது உரத்த குரலில் சைமனே திரும்பிப் போ என்று முழக்க​மிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கதர்த் துணி நெய்வதிலும், கள்ளுக்கடை மறிய​லிலும் ஆர்வம் காட்டிய உஷா, தன் வாழ்நாள் முழுவதும் கதர்ப் புடவைகளை மட்டுமே அணிந்தார். காந்தியச் சிந்தனைகளால் தூண்டப்பட்ட உஷா, தேச சேவைக்காக பெரிய காரியம் செய்ய வேண்டும் என்ற தீவிர மனப்பாங்குடன் வளர்ந்தார். நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற உஷா மேத்தாவின் அப்பா, சூரத்தில் இருந்து பம்பாய்க்கு இடம் மாறினார். இதனால், உஷா பம்பாயில் கல்வி பயிலும் சூழல் ஏற்பட்டது. படிக்கும் காலத்திலேயே சுதந்திரச் சொற்பொழிவுகளைக் கேட்பது, கையேடுகள் மற்றும் வெளியீடுகளை மாணவர்கள் மத்தியில் வினியோகம் செய்வதுபோன்ற பணிகளில் உஷா ஈடுபட்டார்.

படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்த உஷா, தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றதோடு, தந்தையைப் போல சட்டம் படிப்பதற்காக சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், சுதந்திரப் போராட்ட எழுச்சி காரணமாக தனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார். இந்த நிலையில்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றியது. இந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்திய உஷா, அதற்காக ஒரு ரேடியோ நிலையத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அதற்காக, அரசியல் ஈடுபாடுகொண்ட ஒலிபரப்புக் கலைஞர்கள் எவராவது இருக்கிறார்களா என தேடினார். அப்போதுதான் தானாவைப் பற்றி அறிந்தார். தானா ஒரு தீவிரமான காந்தியவாதி என்பதால், ஒரு சுதந்திர ரேடியோவை உருவாக்கிவிட முடியும் என்று முயற்சிசெய்தார். இதை அறிந்த பிரிட்டிஷ் உளவாளிகள் அவருக்கு ஒலிபரப்புச் சாதனங்களை சப்ளை செய்வதுபோல ஒரு பிரிட்டிஷ் இன்ஜினீயரை நடிக்கவைத்து, முடிவில் அவரைக் கைதுசெய்து அந்த முயற்சியைத் தோற்கடித்தனர்.

தொடரும் பயணம்...