மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

ஆசாத் இந்தியா ரேடியோ  

##~##

இதைஅடுத்து, பம்பாயில் 'ஹாம் ரேடியோ’ நடத்தி அனுபவம் பெற்றிருந்த பிரின்டரின் உதவியை நாடினார் உஷா. பிரின்டர் அரசியல் ஈடுபாடு அற்றவர். ஆனாலும், தனது கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதால், உஷாவுக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டார். அதன்படி, மும்பையில் உள்ள சிகாகோ அண்ட் கோ-வில் இருந்து ஹெச்.எஃப். டிரான்ஸ்மீட்டர், மைக்ரோஃபோன் ஆகிய கருவிகளை வாங்கி, ஒரு ரேடியோ ஒலிபரப்பு அமைப்பை உருவாக்கினார். பம்பாயில் உள்ள சௌபாத்தி பகுதியின் உயரமான கட்டடம் ஒன்றில் ரகசியமாக ஒளித்துவைக்கப்பட்ட இந்த ஒலிபரப்புக் கருவிகளைக்கொண்டு, 1942-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி  காங்கிரஸ் ரேடியோ தனது ஒலிபரப்பைத் தொடங்கியது. இது, 42.34 அலைவரிசையில் ஒலிபரப்பாகும் ரேடியோ. இந்தியாவில், பெயர் குறிப்பிடப்படாத ஓர் இடத்தில் இருந்து ஒலிபரப்பு செய்யப்படுகிறது என்று உஷா மேத்தாவின் குரல் இந்த உலகுக்கு சுதந்திர ரேடியோ ஒலிபரப்பை அறிமுகம் செய்தது.

ரேடியோ ஒலிபரப்புக்காக தேசத் தலைவர்​களின் சொற்பொழிவுகள், தகவல்கள் மற்றும் பாடல்கள் ரகசியமாகப் பல இடங்களில் பதிவுசெய்து கொண்டு வரப்​பட்டு ஒலிபரப்பு செய்யப்​பட்டன. தினமும் காலை 8.30 மணிக்கும் இரவு 8.45 மணிக்கும் இந்த ரேடியோ செய்திகளை வழங்கியது. தேசமெங்கும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் எவ்வாறு தீவிரமாகப் பரவி வருகிறது என்பதை இந்த ரேடியோ தெளிவாக உலகுக்கு எடுத்துச் சொல்லியது.

எனது இந்தியா!

இதனால், ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் காவல் துறை இதை முடக்கத் திட்டமிட்டது. இந்த ரேடியோ எங்கே இருந்து ஒலிரப்பாகிறது என்பதைக் கண்டுபிடிக்க உளவாளிகள் நியமிக்கப்பட்டனர். அந்த உளவாளிகளின் கண்ணில் படாமல் தினமும் ஒரு இடத்தில் இருந்து மாறிமாறி ரேடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்படியும் காவல் துறை அவர்களைப் பின்தொடர்ந்து வரவே, கோயில் ஒன்றின் உள்ளே இருந்த மடப்பள்ளியில் இருந்தும், மடாலயம் ஒன்றில் இருந்தும் ரேடியோவை இயக்கினர். காங்கிரஸ் ரேடியோவுக்கு பொதுமக்களிடம் பலத்த வரவேற்பு ஏற்பட்டது. காந்தியின் சிந்தனைகள், நேருவின் சொற்பொழிவுகள், அடக்குமுறையை எதிர்கொள்ளும் விதம் என்று, இந்த ரேடியோ மக்களிடம் மிகுந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தின. இதனால், பிரிட்டிஷ் அரசு கடும்கோபம் அடைந்தது.

1942-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, காங்கிரஸ் ரேடியோ பற்றி கண்காணிக்க சிறப்பு புலனாய்வுக்

எனது இந்தியா!

குழு அமைக்கப்பட்டது. போலீஸ் ஸ்டெனோகிராபர்கள் ரேடியோவில் ஒலிபரப்பாகும் செய்திகளை வரிவிடாமல் எழுதி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பினர். ஒரு பிரிட்டிஷ் உளவாளி, பிரின்டரை பின்தொடர்ந்து சென்று அவரது செயல்பாடுகளைக் கண்காணித்தார். அவர்தான் காங்கிரஸ் ரேடியோவை உருவாக்குவதில் முன்நின்றவர் என்பதை உறுதிசெய்தவுடன் பிரின்டரைக் கைதுசெய்து, தலைகீழாகத் தொங்கவிட்டு சித்ரவதை செய்தனர். உடலில் துணி இல்லாமல் ஐஸ் கட்டியில் படுக்கவைக்கப்பட்டார். வலி தாங்க முடியாமல் கதறிய பிரின்டர், ரேடியோவை இயக்குபவர்களைக் காட்டிக்கொடுக்க சம்மதித்தார். பிரின்டர் கொடுத்த தகவல்களைக்கொண்டு உஷா மேத்தா மற்றும் அவரோடு சேர்ந்து இயங்கிய அச்சு​தராவ் பட்வர்தன், புருஷோத்தம் தாஸ் போன்​றோர் கண்காணிக்கப்பட்டனர். சரியான நேரத்தில், அவர்களை வளைக்க பிரிட்டிஷ் போலீஸ் காத்திருந்தது. பம்பாயில் உள்ள ரத்தன் மகால், அஜித் வில்லா, லாப்பேர்னம் ரோடு, லட்சுமி பவன், பருக்வாடி கட்டடம், கிர்காம் ரோடு, மகாலட்சுமி கோயில், பாரடைஸ் பங்களா என்று காங்கிரஸ் ரேடியோ தினம் ஒரு இடமாக மாறிக்கொண்டே இருந்தது.

பிரிட்டிஷ் உளவுத் துறை பின்தொடர்வதை அறிந்த உஷா மேத்தா, ஒருவேளை தான் கைது செய்யப்பட்டால், தனக்குப் பிறகு இந்தப் பொறுப்பை ராம் மனோகர் லோகியா மற்றும் விதால்தாஸ் மாதவ்ஜி காகர் ஆகியோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ரேடியோ எங்கிருந்து செயல்படுகிறது என்பதைக் குறித்த பிரின்டரின் நம்பகமான தகவலை பெற்றுக் கொண்ட பிரிட்டிஷ் போலீஸ், உஷா மேத்தா மற்றும் அவரது கூட்டாளிகளை சுற்றிவளைத்து கைது செய்தது. உஷா மேத்தா அதற்கு எல்லாம் பயப்படவில்லை. ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் சகல அவமரியாதைகளையும், தண்டனைகளையும் ஏற்றுக்​கொண்டார் உஷா. ஆனாலும், அவர் தனது கூட்டாளி​களைக் காட்டிக் கொடுக்கவில்லை.

சிறப்பு நீதிமன்ற விசாரணையின்போது வழக்​கறிஞர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் உஷா பதில் சொல்லவில்லை. அவர் தெரிந்தே குற்றம் செய்தார் என்று கருதிய நீதிபதி, அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். உஷாவோடு கைது செய்யப்பட்டவர்கள் ஓர் ஆண்டு தண்டனை பெற்றனர். ரேடியோவை இயக்கியவர்களைக் காட்டிக்கொடுக்க உதவியதற்காக, நாரிமன் பிரின்டர் விடுவிக்கப்பட்டார். சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக்கொடுத்த துரோகி என்று அவரை பார்சிகளே கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆகவே, மும்பையில் இருந்த தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு தலைமறைவான பிரின்டர், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட உஷா மேத்தா, மிகவும் கடுமையாக நடத்தப்பட்டார். அவருக்கு மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டன. இதனால், மெலிந்து நோயாளி ஆனார். உயிர் காக்கும் சிகிச்சை வேண்டி அவர் விண்ணப்பிக்கவே, பம்பாய் ஜே.ஜே. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்​​பட்டார். மருத்துவமனையிலும் நான்கு காவலர்​கள் அவரை இரவு பகலாகக் காவல் காத்தனர். உடல்நலம் தேறியதும் மீண்டும் எரவாடா சிறைக்குக் கொண்டுவரப்பட்டார். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் காங்கிரஸ் தலைவர்களைக் காட்டிக்கொடுத்தால், வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க உதவி செய்​வதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறினர். ஆனால், உஷா மறுத்துவிட்டார்.

1946-ம் ஆண்டு இந்தியாவில் அமைக்கப்பட்ட தற்காலிக இந்திய அரசாங்கம் உஷா மேத்தாவை விடுதலை செய்தது. உடல்நலம் குன்றிப் படுக்கையில் கிடந்தபோதும் உஷா மனம் தளரவில்லை. அவர், டாக்டர் பட்ட ஆய்வு செய்து பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். காந்திய சிந்தனைகள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த உஷா மேத்தாவுக்கு,

எனது இந்தியா!

'பத்மவிபூஷண்’ பட்டம் அளித்துக் கௌரவித்தது இந்தியா. 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி இறந்தபோது உஷாவுக்கு வயது 80. காங்கிரஸ் ரேடியோவை உருவாக்கி நடத்தியது தனது வாழ்நாளின் சாதனை என்று உஷா தனது நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார். இவரது அரிய சேவை காங்கிரஸ் கட்சியின் வரலாற்றுப் பதிவுகளில் கண்டுகொள்ளப்படவே இல்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய உண்மை.

காங்கிரஸ் ரேடியோவைப் போலவே ரகசியமாகச் செயல்பட்ட இன்னொரு ஒலிபரப்பு 'ஆசாத் இந்தியா ரேடியோ’. இது, நேதாஜியின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆரம்ப காலங்களில் இந்த ரேடியோ ஜெர்மனியில் இருந்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு, சிங்கப்பூரிலும் ரங்கூனிலும் இருந்து ஆசாத் ரேடியோ ஒலிபரப்பப்​பட்டது.

நேதாஜியின் சொற்பொழிவுகள், பிரிட்டிஷ் எதிர்ப்புப் பிரசாரங்கள் மற்றும் பாடல்களுக்கு முக்கியத்​துவம் கொடுத்து இந்த ரேடியோ செயல்பட்டது. தமிழ், ஆங்கிலம், வங்காளம், உருது, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இந்த ரேடியா செய்திகளை ஒலிபரப்பியது. ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களே இதன் ஒலிபரப்பாளர்கள். அன்று, பிரிட்டிஷ் நடத்திய ரேடியோக்கள் இந்தியாவைப் பற்றிய செய்திகளைக் கடுமையாகத் தணிக்கை செய்த​போது, அதை எதிர்த்து உண்மையை உலகறியச் செய்தது ஆசாத் இந்தியா ரேடியோ. நேதாஜியின் பல முக்கிய உரைகள் இந்த வானொலி வழியாக​வே ஒலிபரப்பாகின. குறிப்பாக, யுத்த காலத்தில் இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டையும் கெரில்லா தாக்குதல் முறையின் அவசியத்தையும் பற்றி நேதாஜி ஆற்றிய உரைகள் மக்களிடம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தின.

ஆசாத் ரேடியோ ஒலிபரப்பை மக்கள் கேட்கவிடாமல் தடுப்பதற்காக வீடுகளுக்குள் புகுந்த போலீஸ், ரேடியோ பெட்டிகளைப் பறிமுதல் செய்தனர். ஆசாத் இந்தியா கேட்பது தண்​டனைக்கு உரிய குற்றமாகக் கருதப்பட்டது.

ஜப்பானிய ராணுவம் டோக்கியோவில் குண்டு மழை பொழிந்த போது, 22 வயதான ஹரி பிரபோ என்ற இளம்பெண் அந்த யுத்த பூமியைக் கடந்து சென்று இந்திய தேசிய ராணுவத்துக்கான ரகசிய ரேடியோ ஸ்டேஷனை அடைந்து, வங்காளத்தில் செய்தியை ஒலிபரப்பினார். 1942 முதல் இரண்டு ஆண்டுகள் நாள் தவறாமல் இவர் செய்தி வாசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோவில் இருந்து சோப் தயாரிப்பதற்காக டாக்கா வந்த டகேடா என்ற ஜப்பானியர் மீது காதல்கொண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் ஹரி பிரபோ. இருவரும் 1912-ல் டோக்கியோ திரும்பினர். தனது ஜப்பானிய வாழ்க்கை பற்றி பிரபோ வங்காளத்தில் எழுதிய 'ஒரு இந்திய மனைவியின் ஜப்பானிய வாழ்க்கை’ என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது.

பிரபோ ஜப்பானிய மொழி கற்றுக்கொண்டதுடன் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உதவி செய்வதற்காக அவர் நேதாஜி பற்றிய செய்திகளைத் தொகுத்து தினமும் ஒலிபரப்பி இருக்கிறார். இவரைப்பற்றி சமீபத்தில் ஒரு ஆவணப் படம் வெளியாகி இருக்கிறது. பிரிட்டிஷ் உளவுத் துறையின் சகல நெருக்கடிகளையும் சந்தித்து ஆசாத் இந்தியா ஒலிபரப்பு இந்திய மக்களிடம் சுதந்திர எழுச்சியை உருவாக்கியது என்பதே உண்மையான வரலாறு.

காங்கிரஸ் ரேடியோவும், ஆசாத் இந்தியா ரேடியோவும் போராடி வளர்த்த இந்திய நாட்டுப்பற்றை இன்றைய பண்பலைகள் தங்களின் சுயலாபத்துக்காகக் காற்றில் பறக்கவிட்டுவிட்டன. பண்பலைத் தமிழ் என்றொரு பண்பாடற்ற தமிழ் பேசும் முறை உருவாகி, மொழியை, தமிழ்ப் பண்பாட்டைத் தொடர்ந்து சீரழித்து வருகின்றன.

உண்மையான சமூக அக்கறைகொண்ட ஊடகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு சுதந்திரப் போராட்டக் காலத்தில் செயல்பட்ட காங்கிரஸ் ரேடியோவும், ஆசாத் இந்தியா ரேடியோவும் சான்றுகள்.

இந்த வழியைப் பின்தொடராமல், சமூகத்தை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்து ஊடகங்கள் தவறும்போது அதன் விளைவுகள் மிக மோசமாகவே இருக்கக்கூடும் என்பதே வரலாறு காட்டும் உண்மை.

 தொடரும் பயணம்...