பிரணாப் தலையும் உருளும்?
##~## |
இந்தியாவை உலுக்கும் ஊழல் விவகாரங்கள் என்றால், அதில் இத்தாலிக்கும் தொடர்பு இருப்பது என்ன பொருத்தமோ?
உலக நாடுகளுக்கு ராணுவத் தள வாடங்களை சப்ளை செய்யும் இத்தாலி நிறுவனம் ஃபின் மெக்கானிகா. இந்த நிறுவனம் பல மில்லியன் யூரோ அளவுக்கு உலகம் முழுவதும் ஊழல் செய்வதாகத் தகவல் வரவே... அதன் அலுவலகங்களில் ரெய்டு நடத்தினர் இத்தாலிப் போலீஸார். அதில், இந்திய விமானப் படையின் பாதுகாப்புத் துறையும் சிக்கி இருக்கிறது. ஜனாதிபதி உள்ளிட்டோர் பயணிக்கும் உயர்ரக ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கும் ஆர்டரை, ஃபின் மெக்கானிகாவின் கிளை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட், 3,546 கோடி ரூபாய்க்கு எடுத்தது. அதற்கு 355 கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுக்க பேரம் பேசப்பட்டது. இப்போது அம்பலமாகி இருக்கிறது.
அதிநவீன சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவெடுத்தது அப்போதைய பி.ஜே.பி. அரசு. இந்திய அரசு வெளியிட்ட டெண்டரில் இருந்த சில முக்கிய விதிமுறைகளின்படி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் கம்பெனியால் அந்தப் போட்டியில் பங்குபெற முடியாது. அதனால் அந்த நிறுவனம் இந்தியப் பாதுகாப்புத் துறையில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி டெண்டர் வரைமுறைகளை முழுமை அடையவிடாமல் இழுத்தடித்தனர்.

இந்நிலையில் அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்துக்குச் சாதகமாக களத்தில் இறங்கினார் எஸ்.பி.

தியாகி. இவர், இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதியாக 2005-2007 காலங்களில் இருந்தவர். இவர், தன் உறவினர்களான ஜூலி, டாக்சா, சந்தீப் ஆகியோரை இடைத்தரகர்களாக நியமித்தார். பின், டெண்டர் விதிமுறைகளையே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தயாரிக்கும் 'அகஸ்டா வெஸ்லேண்ட் 101’(AW 101) ஹெலிகாப்டர்களுக்கு ஏற்ப மாற்றினார். அதற்காக, லஞ்சப் பணத்தில் முன்பணமாக 87 கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றார் என்பதே இப்போதைய ஊழல் புகார். அந்தக் காலக்கட்டத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் இப்போதைய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி. மாற்றப்பட்ட டெண்டர் விதிமுறைகளையும் விவரங்களையும் அப்படியே 2010-ல் அங்கீகரித்த மத்திய அரசு, ஆர்டர் செய்யப்பட்ட 12 ஹெலிகாப்டர்களில் மூன்றைக் கொள்முதலும் செய்துவிட்டது.
இத்தாலியில் கைது செய்யப்பட்ட ஃபின் மெக்கானிகா நிறுவனத்தின் சி.இ.ஓ. கொஸ்ஸிப்பே ஒர்சி, பல தகவல்களை ஒப்புக்கொண்டுள்ளார். 'டெண்டர் விதிமுறைகளை அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு ஆதரவாக மாற்றினார்’ என எஸ்.பி.தியாகியைக் குற்றம்சாட்டி இருக்கிறது இத்தாலி போலீஸ். 18 ஆயிரம் அடிகள் உயரம் பறக்கும் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து இருந்ததை அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு சாதகமாக 15 ஆயிரம் அடிகளாக மாற்றியது, அந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்று இன்ஜின்கள் கொண்ட ஹெலிகாப்டர்களைக் காரணம் காட்டி முன்னுரிமை அளித்தது... என விதிமுறைகள் மீறப்பட்டது என்கிறது இத்தாலி போலீஸின் குற்றப்பத்திரிகை. ஆனால், ''நான் பணியில் இருந்து விலகிய பிறகுதான், அந்த டெண்டர் முழுமை பெற்றது. ஃபின் மெக்கானிகா ஊழியர்கள் யாரையும் நான் சந்தித்ததே இல்லை. என் உறவினர்களை இடைத்தரகர்களாகப் பயன் படுத்தியதாக சொல்லப்படுவதும் சுத்தப்பொய்'' என் கிறார் தியாகி.

இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர்களில் ஒருவரான கியூடோ ரால்ஃப் ஹஷ்கே, ''என் பார்ட்னர் கார்லோ ஜெரோசாவின் நண்பரான தியாகியை அவரது இடத்திலேயே ஆறு முறை டெண்டர் விஷயமாகப் பார்த்துப் பேசி இருக்கிறேன். மொத்த டெண்டர் தொகையில் 10 சதவிகிதம் லஞ்சமாகக் கொடுக்க அப்போதே முடிவு செய்யப்பட்டது'' என்று விசாரணையில் சொன்னாராம்.
விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்படும் என்று சொல்லி இருக்கும் மத்திய அரசு, சி.பி.ஐ. அதிகாரிகளை இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. ஆர்டர் செய்யப்பட்ட 12 ஹெலிகாப்டர்களில் மேற்கொண்டு வரவேண்டிய ஒன்பது ஹெலிகாப்டர்களின் இறக்குமதியையும் நிறுத்தி வைத்து உள்ளது.
கடந்த ஆண்டே இதுபற்றி பி.ஜே.பி. கேள்வி எழுப்பியபோது, பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, ''முழு விசாரணை நடத்தப்படும்'' என்றார். ஆனால், எதுவும் நடத்தவில்லை. இப்போது, இத்தாலிப் போலீஸாரின் நடவடிக்கைகளுக்குப் பிறகு விசாரணை, போராட்டம் என இரண்டு கட்சிகளும் கோதாவில் குதித்து இருக்கின்றன.
காங்கிரஸும் பிரணாப் முகர்ஜியும் இதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்று பார்ப்போம்!
- ஆ.அலெக்ஸ் பாண்டியன்