Published:Updated:

''கொழும்பில் நடப்பது குடும்ப ஆட்சி''

அ.மார்க்ஸ்

##~##

ரு வாரங்களுக்கு முன், மஹிந்த ராஜபக்‌ஷே திருப்பதியில் பேட்டி அளித்துக்​கொண்டிருந்த அதே நேரத்தில், நான் இலங்கை​யில் பயணம் மேற் கொண்டு இருந்தேன். மறைந்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் நா.சண்முகதாசனின் 20-ம் நினைவு நாள் பேருரை ஆற்றுவதற்காக அவர் பெயரால் இயங்கும் கல்வி வட்டம் ஒன்றால் நான் அழைக்கப்பட்டு இருந்தேன். 

ராஜபக்‌ஷேவின் வருகைக்கு எதிராகத் தமி ழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகளுக்குப் பதில் சொல்லும் முகமாக அவர், 'இலங்கைக்கு நேரில் வந்து பார்த்துவிட்டுப் பிறகு பேசுங்கள்’ என்றார். நான் அங்கிருந்த 10 நாட்களில் நேரில் கண்ட, இதழ்களில் வாசித்த செய்திகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.

''கடந்த 23 ஆண்டுகளாக வெளியேற்றப்​பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படாத சுமார் 30,000 தமிழ் மக்களை அங்கேயே குடியமர்த்தக் கோரி தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயம் முன்பாகப் பெருந்திரளாக மக்கள் உண்ணாவிரதப் போராட்டம். இதன் இறுதியில் கூட்டத்தில் தாக்குதல் நடத்திக் குழப்ப முயன்ற நால்வரில் ஒருவரை உண்ணாவிரதம் இருந்தோர் மடக்கிப்பிடித்தனர். வடபகுதி ராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்ருசிங்க பொறுப்பில் இயங்கும் ரகசியக் கூலிப்படையே இதைச் செய்துள்ளது என, போராட்டத்தில் பங்கு பெற்றோர் குற்றச் சாட்டு.''

''கொழும்பில் நடப்பது குடும்ப ஆட்சி''

''கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு வருகை தந்த ரணில் மற்றும் சேனாதிராஜா முதலான தலைவர்களின் காலில் விழுந்து, காணாமல்போன தன் மகனைக் கண்டுபிடித்துத் தர வேண்டுமென ஒரு தமிழ்ப் பெண் கதறிய காட்சி எல்லோர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.''

''தமிழ் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பைப் பரப்பி வன்முறையைத் தூண்டிவரும் 'பொதுபல சேனா’

''கொழும்பில் நடப்பது குடும்ப ஆட்சி''

எனும் அமைப்பு, காலம் காலமாக இருந்துவரும் விற்​பனைப் பொருட்களுக்கு 'ஹலால்’ முத்திரை அளிக்கும் வழக்கத்தை நிறுத்த, ஒரு மாத கால எல்லை விதித்து எச்சரிக்கை.'

'திருமலையில் பிப்ரவரி தொடக்கத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்​டங்களை அடுத்து, 13 தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் எனக் குற்றம்சாட்டிக் கைது செய்யப்​பட்டுள்ளதையும், அவர்கள் இப்போது பூசா கடுங்காவல் சித்ர வதை முகாமில் அடைக்கப்பட்டுள்ளதை அங் குள்ள மனித உரிமை அமைப்பு ஒன்று உறுதி செய்துள்ளது.'

'வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட காத்தான்குடிச் சிறுவன் மீட்பு.'

'தலைமை நீதிபதி ஷிராணி பண்டார நாயகா பதவி இறக்கப்பட்டது சட்டபூர்வமானது அல்ல என, பாகிஸ்தான் தலைமை நீதிபதி கருத்து.'

'இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய, சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் குறித்து ஆராயத் தனி ஆணையம் உருவாக்க வேண்டும் முதலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மனித உரிமைப் பேரவை ஆணையர் நவநீதம் பிள்ளை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் அளித்தார்.'

'பொலனறுவைச் சேர்ந்த சித்திரவேல் சுந்தரலிங்கம் எனும் தமிழர் ஒரு பெண் குழந்தை உட்படத் தன்னுடைய நான்கு குழந்தைகளை வறுமை காரணமாக விகாரை ஒன்றுக்கு இட்டுச் சென்று பௌத்த பிக்குகளாக்கியுள்ளார். வீட்டு வேலை செய்ய நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு சென்ற மனைவி கலாபூரணியின் கதி என்ன ஆனது என அறியாத நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்...'

'இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடத்திக் கொல்லப்பட்ட இதழாளர் லசந்த விக்ரமசிங்க வின் 'சண்டே லீடர்’ இதழின் இப்போதைய உதவி ஆசிரியரும் பத்தி எழுத்தாளருமான சௌகத் அலி, சில மர்ம நபர்களால் இரவில் வீடு புகுந்து சுடப்பட்டார்..'

- ஒரு மேலோட்டமான பார்வையில் என் கண்ணில் பட்ட இந்தச் செய்திகள் இன்றைய இலங்கையின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள உதவும். இதோடு எனக்கு நேர்ந்ததையும் சேர்த்துக் கொள்ளலாம்.

''கொழும்பில் நடப்பது குடும்ப ஆட்சி''

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் என் உரை தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் அங்கு வந்த நான்கு இமிக்ரேஷன் அதிகாரிகள், 'கூட்டங்களில் பேசக்கூடாது’ என்றனர். தங் களுக்குப் புகார் ஒன்று வந்துள்ளதாகவும் அந்த அடிப்படையிலான விசாரணையில் நீங்கள் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினர். டூரிஸ்ட் விசாவில் வந்துவிட்டுக் கூட்டங்களில் பேசக்கூடாது எனக் காரணம் சொன்னார்கள்.

'ஈரோஸ்’ அமைப்பில் செயல்பட்டவரும், 'நிறப்பிரிகை’ தொடங்கி என் எழுத்துக்களைப் படித்து வருபவரும் இப்போது கேபினெட் அமைச்சராகவும் உள்ள பஷீர் சேகு தாவூத், ஐக்கிய மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் முதலானோர் வந்திருந்தும், அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. வருத்தம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது. மேடையில் அமரவும் நான் அனுமதிக்கப்படவில்லை.

அமைச்சர்களின் அதிகாரம் அங்கு அவ் வளவுதான். அதிகாரங்கள் அவ்வளவும் ராஜபக்ஷே குடும்பத்திடம்தான். மகிந்த ஜனாதிபதி. கோத்தபய, சகல அதிகாரங்களும் பொருந்திய பாதுகாப்புச் செயலர். அனைத்து அமைச்சகங்களும் பாதுகாப்புச் செயலகத்தின் ஒப்புதலுடன் மட்டுமே செயல்பட வேண்டும். இன்னொரு சகோதரர் பசில் வசம், நிதித் துறை இருக்கிறது. நாடாளுமன்றத் தலை வராக சமல் ராஜபக்‌ஷே. மஹிந்தவின் மகன் நமல் நாடாளுமன்ற உறுப்பினர். ராஜபக்‌ஷே குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 240 பேர் அரசின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளதாக ஒருவர் குறிப் பிட்டார்.

தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் அதிகரித்து உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பாரம்பரியமான முஸ்லிம் பகுதிகளிலும் இதே நிலைதான். பெரிய அளவில் அங்கு சிங்களக் குடியேற்றம் நிகழ்த்தப்பட்டு, இப்போது தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மை ஆக்கப்படுகின்றனர். தமிழர்களை ஒடுக்கியாகி விட்டது, அடுத்தது, அவர்கள் குறிவைப்பது முஸ்லிம்களைத்தான். 'பொது பல சேனா’, 'ஹெல உருமய’ போன்ற இனவாதப் பிக்குகளின் அமைப்புக்கள் இதில் முன்னணி வகிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 23 முஸ்லிம் தொழுகைத் தலங்கள் தாக்கப்பட்டு உள்ளன. சில நாட்களுக்கு முன், குரு நாகலில் ஒரு பன்றியின் மீது 'அல்லா’ என்று எழுதி பள்ளிவாசல் ஒன்றுக்குள் விரட்டி விட்டுள்ளனர். 'ஹலால்’ சான்றிதழுடன் பொருட்களை விற்பதற்கு எதிராகக் கடும் முஸ்லிம் வெறுப்புப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  

மலையகத்தில் 34,000 ஏக்கர் தோட்டப் பகுதிகளை 'தரிசு நிலம்’ என அறிவித்து, அங்கு ஊனமுற்ற சிங்களப் படை வீரர்களைக் குடியமர்த்தப் போகின்றனர். அங்கே, அரசு ஆதரவுடன் சிறு தோட்டச் செடிகளை வளர்க்க உள்ளனர். ஆனால், மலையகமாயினும், முஸ்லிம் பகுதிகளாயினும் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ராஜபக்‌ஷேவுடன் உள்ளன. சென்ற வாரம் முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ரணில் பேசியபோது அத்தனை முஸ்லிம் அமைச்சர்களும் அரசுக்கு ஆதரவாகப் பேசினர். மலையகத்தில் அரசுக்கு ஆதரவாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இருக்கிறார்.

சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்‌ஷே குடும்பத்தின் செல்வாக்கைக் குறைக்க முடியாது என்றோ’ என்னவோ ரணில் இப்போது முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்துப் பார்க்கிறார்.

போர் இறுதியில் சுமார் இரண்டரை லட்சம் வீடுகள் அழிக்கப்பட்டன என்கிறார்கள். இந்திய அரசு தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்ததால் ஏற்பட்ட கெட்ட பெயரைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு 50,000 வீடுகள் கட்டித் தருவதாக வாக்களித்தது. இப்போது சுமார் 1,000 வீடுகள் தயாராகி உள்ளன. இவை முழுக்க முழுக்க இறுதி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் அழிந்தவர்கள் போக எஞ்சிய மக்களுக்கெனக் கட்டப்பட்ட வீடுகள். இந்தியத் தூதரகமே பயனாளிகளைத் தேர்வு செய்யும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது, இந்த வீடுகளில் 200-க்கும் மேற்பட்டவை புதிதாகக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்கின்றனர். எல்லோருக்கும்தான் ஒதுக்கப்படுகின்றன எனக் காட்டு வதற்காகக் கொஞ்சம் வீடுகள் முஸ்லிம்களுக்கும் ஒதுக் கப்படுகின்றன.

நவநீதம் பிள்ளை அறிக்கை, ஐ.நா. அவையில் கொண்டுவர இருக்கும் தீர்மானம் ஆகியன குறித்து ஒரு கலக்கம் ராஜபக்‌ஷே தரப்பில் ஏற்பட்டுள்ள போதிலும் அதற்காகத் தம் போக்கை எள்ளளவும் மாற்றிக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. தமிழ்ப் பகுதிகளுக்கு அதிகாரப் பரவல் அளிப்பது சாத்தியம் இல்லை என, மஹிந்த இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்ததும், எள்ளளவும் கவலை இன்றி தலைமை நீதிபதி ஷிரானியைப் பதவி இறக்கம் செய்ததும், முஸ்லிம்களின் மத உரிமைகளில் தலையிடுவதும், ஆள் கடத்தல், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுதல் முதலியன தொடர்வதும் இதற்குச் சான்றுகள்.

பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். 'ராஜபக்‌ஷே குடும்பம் பதவியை விட்டு இறங்காது. இறங்க முடியாது. கடாஃபி அல்லது சதாமைப்போல ஏதாவது பொந்துக்குள் ஒளிந்திருந்துதான், கடைசியில் பிடிபடப் போகிறார்கள்.'