மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

டோக்கியோ கேடட்ஸ்!  

##~##

இந்திய வரலாற்றில் எழுச்சிமிக்க சுதந்திரப் போராளியாக மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவரது மரணம் குறித்த புதிர் இன்றும் முழுமையாக விலகவில்லை. 'நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்’ என்ற நம்பிக்கை இன்றும் மக்கள் மத்தியில் இருக்கிறது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் ஒரு முன்னோடி அமைப்பு. அது உருவாக்கப்பட்ட விதம், பல்கிப் பெருகிக் கட்டுக்கோப்புடன் செயல்பட்ட விதம், அடைந்த வெற்றிகள் என அதன் வரலாற்றைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. இந்திய தேசிய ராணுவத்தில் மிக முக்கியப் பங்கை வகித்தவர்கள் தமிழர்கள். பெருமைக்குரிய நினைவுகளுடன் வாழும் ஐ.என்.ஏ. வீரர்கள் இன்றைய சமகால அரசியல் மோசடிகளைக் கண்டு கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.  

இந்தியத் தேசிய ராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி​வைக்கப்​பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.  

விமானத்தில் சென்று குண்டு வீசுவது, திடீர்த் தாக்குதல்கள் நடத்துவது ஆகியவற்​றில் இந்த

எனது இந்தியா!

டோக்கியோ கேடட்ஸ் பிரிவு சிறப்புப் பயிற்சி பெற்றது. பிரிட்டிஷ் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.

மேலும், பல்வேறு தாக்குதல் முறை​களில் சிறப்புப் பெற்றிருந்த இந்தியத் தேசிய ராணுவம், வான் படைத் தாக்குதலுக்கு தன்னை உயர்த்திக்​கொள்ள முயன்றது. ஆனால், அதற்கான விமானங்களை வாங்கப் போதுமான நிதி இல்லை. மேலும், இதற்கான விமானப் பயிற்சித்தளங்கள், திறமையான ராணுவப் பயிற்சியாளர்களும் இல்லை. ஆகவே, ஜப்பானிய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் தேர்வுசெய்யப்பட்ட வீரர்களுக்கு வான் படைத் தாக்குதல் பயிற்சி அளிக்க நேதாஜி திட்ட​மிட்டார்.

இதற்காக, இந்தியத் தேசிய ராணுவத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். அதில், ஆர். எம்.அண்ணாமலை, முகமது அத்தர், அனுப் குமார் சிங், ஆர்.எஸ்.பெனி​சார்னிடோ, பிஷன்சிங், பீமாரூ, வி.கே.சட்டர்ஜி, ஜி.என்.சௌத்ரி, டி.தாசன், கே.துரைசாமி, என்.கருப்பையா, கே.டி.மேனன், பி.கே.மித்ரா, என்.சி.முகர்ஜி, வி.தாராநாத், சி.பி.நாராயண், ஆர்.பி.நயாதேவ், ஏ.ஆர்.தத்தா, வி.கணபதி, மோதிநாத், காந்திநாக், ஏ.கே.கோஷ், காந்திதாஸ், ஏ.கே.குப்தா, ரமேஷ்பெனகல், ஹிரான்சு குமார்சிங், எஸ்.காமா, கிருஷ்ணன், கே.ரபீந்திரநாத், எம்.கே.ராம்குமார், ரஞ்சித், ஆர்.கே.சேகர், எஸ்.பி.சர்மா, எஸ்.வி.சர்மா, அக்தர் அகமது, கரம்கர், பிமல்தேவ் ஆகியோரைத் தேர்வுசெய்து 1944-ம் ஆண்டு டோக்கியோ நகரத்துக்கு அனுப்பிவைத்தார்.

யுத்தச் சூழலுக்கு நடுவில் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் டோக்கியோ செல்வது ஒரு சவாலாக இருந்தது. பர்மாவில் இருந்து காட்டு வழியாகதீ பயணம்செய்து சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து அங்கிருந்து படகு வழியாகத் தப்பிச் சென்று பழைய கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அலைகளில் சிக்கித் தவித்து முடிவில் ஜப்பானின் கியூசு தீவை அடைந்தனர். அந்தத் தீவு, கடற்படையின் வசம் இருந்தது. அங்கே, கடற்படைக்கான பயிற்சிகள் நடைபெற்றன.

இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 45 வீரர்களையும் ஜப்பானியக் கடற்படைத் தலைவர் வரவேற்று, உள்ளூரில் ஒரு ஹோட்டலில் தங்கவைத்தார். அது, கடுமையான பனிக் காலம். தொடர் பனிப்பொழிவு காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. சிங்கப்பூரிலும் பர்மா​விலும் பார்த்த ஜப்பானிய ராணுவ வீரர்களுக்கும், கியூசு தீவில் இருந்த ஜப்பானிய வீரர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. கெம்பித்​தாய் என்னும் ஜப்பானிய போலீஸ் படை முரட்டுத்தனமானது. அதுபோலவே, பர்மாவில் இருந்த சிங்கப்பூர் ராணுவ வீரர்களும் இருந்தனர். ஆனால், கியூசு தீவில் இருந்தவர்கள் பெரும்பாலும் கடற்படையை சேர்ந்தவர்கள். ஜப்பானில் படித்தவர்கள். ராணுவத்தில் பணியாற்றுவதைவிட கடற்படையில் பணியாற்றுவதை கௌரவமாகக் கருதினர். ஆகவே, கடற்படை வீரர்கள் மற்ற ராணுவ வீரர்களை​விட கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன் காரணமாக, இந்தியத் தேசிய ராணுவத்தினரை இன்முகத்​துடன் வரவேற்றனர். கியூசு தீவு பழமையான வீடுகளைக்​கொண்டது. சிறிய அழகான வீதிகளைக்கொண்ட ஊர் மிகவும் சுத்தமாக இருந்தது. அந்த ஊரில் உணவகங்​களைப் பார்க்க முடியவில்லை. ஒன்றி​ரண்டு கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. ஆனால், அங்கேயும் உணவுப் பொருட்​கள் எதுவும் கிடைக்கவில்லை. உணவுப் பொருட்களுக்கு ரேஷன் முறை அமலில் இருந்தது. பசியும் தாகமும் குளிருமாக இந்திய வீரர்கள் கியூசு தீவில் சுற்றி அலைந்தனர். இரவில் பனி அதிகமாக இருந்தது. கடும் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இந்திய வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த விடுதி மரத்தால் ஆனது. சிறு இடைவெளி வழியாக குளிர் காற்று உள்ளே புகுந்தது. தேச சேவைக்​காக வந்திருக்கிறோம் என்ற எண்ணம், அந்தக் குளிரைப் போக்கி அவர்களுக்குத் தைரியத்தை ஏற்படுத்தியது.

எனது இந்தியா!

கியூசு தீவில் இருந்து மறுநாள் அவர்கள் டோக்கியோ நகரத்துக்கு ரயிலில் சென்றனர். டோக்கியோ நகரம் பனிப்பொழிவின் ஊடே மயக்கும் அழகுடன் அவர்களை வரவேற்றது. இம்பீரியல் ராணுவத்தின் பயிற்சிக்கூடம் என்பது ஒரு தனி உலகம். அங்கே, வான் படைப் பயிற்சியில் சேருவதற்கு முன், ஆரம்ப நிலை பயிற்சிகளில் தேர்ச்சிபெற வேண்டும். அதில் தேறியவர்களுக்கு மட்டுமே வான் படையில் இடம் அளிக்கப்படும். இந்த ஆரம்ப நிலைப் பயிற்சிக்காக, குவா தூ குஹேன் என்னும் டோக்கியோ ராணுவப் பயிற்சி மையத்தில் 45 பேரும் அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கட்டடம் ப வடிவத்தில் இருந்தது. இரண்டு தளங்கள்கொண்ட அந்தக் கட்டடத்தின் ஒரு தளத்தில் 50 அறைகள் இருந்தன. இந்தப் பயிற்சிக்கு தலைவராக இருந்தவர் மாரூ. அவருடன் இரண்டு அதிகாரிகள் பயிற்சி உதவியாளர்களாக இருந்தனர். ஒவ்வொரு பயிற்சி வீரனுக்கும் ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அறையில் ஒரு படுக்கையும் கம்பளிப் போர்வையும், அணிந்துகொள்ள வேண்டிய சீருடை மற்றும் உடற்பயிற்சிக் காலணிகள், சிறப்பு உடைகள் தரப்பட்டன. அத்துடன், ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வதற்கான புத்தகங்கள் இரண்டும் வழங்கப்பட்டன. ராணுவப் பயிற்சிகள் முழுமையாக ஜப்பானிய மொழியில் மட்டுமே அளிக்கப்படுகிற காரணத்தால், மொழியைக் கற்றுக்கொள்ளாமல் வான் படைப் பயிற்சிக்கு அனுமதிக்க முடியாது என்பதில் கறாராக இருந்தனர். மொழியை அறிந்துகொள்வதற்காக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்​​பட்டது.

காலை 5 மணிக்கு எழுந்து மூன்று மைல் தூரம் ஓட வேண்டும். அப்போது, குளிர் பூஜ்யத்துக்கு கீழே இருக்கும். உதடுகள் வெடித்து வலி தாங்க முடியாது. பனிப் புகை படர்ந்த மைதானத்தில் ஓடுவார்கள். மூன்று மைல் தூரம் ஓடியதும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு. அதன் பிறகு, அதே மூன்று மைல் தூரம்

எனது இந்தியா!

திரும்பி ஓடி வர வேண்டும். அது முடிந்தவுடன் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி. அதன் பிறகு, 10 நிமிடங்கள் ஓய்வு. பிறகு​தான் சிறப்புப் பயிற்சிகள். அதை முடித்துக்கொண்டு அவசரமாக குளித்துத் தயாராகி வர வேண்டும். காலை உணவாக வேகவைத்த சோறு ஒரு கோப்பையும் சோயாக் குழம்பும் தருவார்கள். அதை முடித்துக்கொண்டு வகுப்புக்குச் செல்ல வேண்டும்

காலை 9 மணிக்கு தொடங்கும் வகுப்பு மதியம் 1 மணிக்கு முடியும். மதிய உணவில் மீன் கிடைக்கும். ஆனால், அதில் காரம், சுவை எதுவும் இருக்காது. பிறகு, மதிய வகுப்பு இரண்டு மணி நேரம் நடக்கும். அதை முடித்துக்கொண்டு மாலை விளையாட்டு ஒன்றரை மணி நேரம். அது முடிந்தவுடன் தேநீர் வழங்கப்படும். அதில் சர்க்கரை இருக்காது. அந்த நாட்களில் சீனி கிடைப்பது அரிது என்பதால், ஜப்பானிய மன்னரின் பிறந்த நாள் மற்றும் விஷேச நாட்களில் மட்டுமே ராணுவ வீரர்களுக்கு சிறப்புச் சலுகை​யாக ஒரு தேக்கரண்டி சர்க்கரை வழங்கப்படும்.

மாலை 6.30 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். அதன் பிறகு, இரவு 8 மணி வரை எழுத்துப் பயிற்சி. அது முடிந்த பிறகு, இரண்டு மணி நேரம் ஓய்வு. அந்த நேரத்தில் பரஸ்பரம் பேசிக்கொள்ளவும் ஊருக்குக் கடிதம் எழுதவும் தங்களைப் போல பயிற்சி பெற வந்துள்ள தாய்லாந்து இளை​ஞர்களுடன் கலந்து பேசுவது போன்றவை நடக்கும். இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். ஞாயிறு ஒரு நாள் விடுமுறை. அன்று, துணி துவைப்பது, அறையைச் சுத்தம்செய்வது போன்றவற்றைச் செய்வார்கள். பொதுவிடுமுறை என்பதே கிடையாது.

இதுபோன்ற கடும் பயிற்சி காரண​மாகவும், குளிர் தாங்க முடியாமலும் வீரர்கள் சோர்வடைந்தனர். அதில், பிஷன்சிங் என்ற இளைஞர் உடல்​நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். அந்த சோகம் மற்ற இந்தியத் தேசிய ராணுவத்​தினரை உலுக்கியது. அவருக்குப் பதிலாக பயிற்சி மேற்கொள்ள அக்தர் அகமது என்பவரை பர்மாவில் இருந்து அனுப்பிவைத்தனர்.

இந்தப் பயிற்சி முகாமைப் பார்வையிடுவதற்காக, நேதாஜி ஒருநாள் வரப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியத் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள், தங்களது அறைகளை சிறப்பாக அலங்கரித்தனர். குறிப்பிட்ட நாளில், நேதாஜி வந்தார். தங்களுடைய தலைவரை நேரில் பார்த்த வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ஒவ்வொரு வீரருடனும் தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நேதாஜி, அவர்களது குடும்ப உறுப்​பினர்கள் பற்றியும் விசாரித்தார். அது, ராணுவ வீரர்களுக்கு மிகுந்த உத்​வேத்தை ஏற்படுத்தியது. மேலும், ராணுவ வீரர்கள் மத்தியில் சிறப்பானதோர் எழுச்சி உரையை நிகழ்த்தினார் நேதாஜி.

நேதாஜி வருகையை ஒட்டி சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விருந்தில் வழக்கமான ஜப்பானிய உணவுகளுடன் ஆட்டி​றைச்சி, பூரி, வடை, அப்பளம், ஊறு​காய் ஆகியவையும் வழங்கப்பட்டன. பயிற்சியில் இருந்த தமிழர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு, அன்றுதான் திருப்தியாக சாப்பிட்டனர். நேதாஜி​யின் உத்தரவுப்படிதான் அந்தச் சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்த வீரர்கள், ஒரு தலை​வன் தனது தொண்டர்களின் பசியறிந்து ருசியான உணவுகளை தந்த அக்கறையை வெகுவாகப் போற்​றினர். அந்தப் பயிற்சி முகாமைப் பார்வையிட்டுச் சென்ற நேதாஜி, ஒவ்​வொரு வீரனையும் வாழ்த்தி, தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் அனுப்பினார். அதில், பின்னாளில் இந்திய வான் படை அதிகாரியாக பணியாற்றிய ரமேஷ் பெனகலுக்கு ஒரு தனிப் பெருமிதம். அவருக்கு அதுவரை வீட்டில் இருந்து ஒரு கடிதம்கூட யாரும் அனுப்பியது இல்லை. அவர் பெற்ற முதல் கடிதம் நேதாஜியின் வாழ்த்துக் கடிதம் மட்டுமே. அதை தன் வாழ்நாளின் அரிய பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வருகிறார் ரமேஷ் பெனகல்.

எனது இந்தியா!