மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

சாந்தி நிகேதன்!  

##~##

இந்தியக் கல்வி முறை குறித்து அதிகம் ஆதங்கப்பட்டவர் மகாகவி ரவீந்திரநாத் தாகூர். திண்ணைப் பள்ளிகளும், உருதுப் பள்ளிகளும் ஒன்றிரண்டு ஆங்கில வழிப் பள்ளிகளும் மட்டுமே இருந்த வங்காளத்தில் புதியதொரு கல்விமுறையை அறிமுகம் செய்துவைத்து மக்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்று தாகூர் கனவு கண்டார். அவர் மிகப் பெரிய நிலப்பிரபுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878-ல் இங்கிலாந்து அனுப்பிவைக்கப்பட்டார். அவருக்குச் சட்டம் படிக்க ஆர்வம் இல்லை. இலக்கியம், இசை, நாடகம் என்று தான் விரும்பியதைக் கற்று 'பார் அட் லா’ பட்டம் பெறாமலேயே இந்தியாவுக்குத் திரும்பினார்.

ஆனால், இங்கிலாந்தில் இருந்த நாட்களில் அங்குள்ள கல்விமுறை குறித்து தாகூர் நிறைய அறிந்துகொண்டார். குறிப்பாக, அடிப்படைக் கல்வி குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுத்தரப்படுகிறது? எது போன்ற பாடமுறையைக் கையாளுகின்றனர் என்பதை நேரடியாக அறிந்துகொண்டார். இந்தியா, கல்வித் துறையில் முன்னோடியான நாடு. இந்தியாவுக்கு என்றே பிரத்யேகமான கற்பிக்கும் முறைகள் இருக்கின்றன. இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் பௌத்தமும் சமணமும்  மிக முக்கியப் பங்கு வகித்து இருக்கின்றன.  இங்கிலாந்துப் பல்கலைக் கழகங்கள் புகழ்பெறுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியிருக்கிறது. இந்த நிலையில், கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தாமல், மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்த முடியாது என தாகூர் நம்பினார். ஆகவே, ஒன்றிணைந்த கல்விமுறை ஒன்றைப் பற்றி அவர் திட்டமிடத் தொடங்கினார். அதாவது, மேற்கு உலகைப் போல விஞ்ஞானம், இலக்கியம், நுண்கலை, தத்துவம், வரலாறு எனத் தனித்தனியாகப் பிரித்துவைக்காமல், ஒரே வளாகத்தில் எல்லா அறிவுத் துறைகளும் இணைந்து இருக்கும்படியான ஓர் கல்வி நிலையத்தை உருவாக்கிவிட்டால் அது இந்தியர்களின் அறிவு வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று தாகூர் உறுதியாக நம்பினார்.

எனது இந்தியா!

படைப்பாற்றல் மிக்க கவிஞராகவும், ரசனை மிக்க ஆளுமையாகவும், தேசப்பற்றுகொண்ட இளைஞராகவும் இருந்த தாகூர் மனதில், தன் கனவுப்படி ஓர் கல்வி நிலையத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கனன்றது.

பள்ளி என்பது இயற்கையான சூழலில் அமைய வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க வருவதை சந்தோஷமான செயலாகக் கருத வேண்டும். தண்டனை இல்லாத, எளிய, தனித்துவமான கற்றல் முறையை அறிமுகம்செய்யத் திட்டமிட்டார். அதற்காக அவர் நிறுவியதே சாந்திநிகேதன். பொருளாதார மேதை அமர்த்தியா சென் இதன் மாணவர்களில் ஒருவர். தனது கடந்த காலம் பற்றி நினைவு கூறும் சென், ''நான் சாந்தி நிகேதனில் பிறந்தவன். எனக்கு பெயரிட்டதே தாகூர்தான். அவர்தான் எனது ஆசிரியர். சாந்திநிகேதனில் கல்வி கற்றது மகிழ்ச்சியான அனுபவம். அங்கே வகுப்பறைகள் இயற்கையோடு இணைந்த வெட்டவெளியில் நடக்கும். மாணவர்கள் ஆசிரியருடன் கலந்து பேசி விவாதிக்கலாம். குறிப்பாக அங்கு தேர்வுகள் கிடையாது. ஆளுமையை உருவாக்குவதுதான் கல்வியின் முக்கியம் என்பதை அறிந்திருந்தனர். சீனா மற்றும் ஜப்பானியக் கலைகளைப் போதிக்க ஜப்பானியர் மற்றும் சீன ஆசிரியர்கள் இருந்தனர். பன்னாட்டு ஆசிரியர்கள் பணியாற்றும் இடம் என்பதால், சாந்திநிகேதன் தனித்துவமிக்க கல்வி நிலையமாக விளங்கியது'' என்கிறார்.

எனது இந்தியா!

சாந்தி நிகேதனில் கட்டணம் இல்லாத கல்விமுறைதான் நடைமுறையில் இருந்தது. தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையை மாணவர்களின் கல்வி நலனுக்காக செலவிட்டார் தாகூர். ஒன்றிரண்டு புரவலர்களும் தாகூரின் நண்பர்கள் சிலரும் இந்தக் கல்வி நிலையத்துக்குத் தேவையான நிதி உதவி செய்தனர். இந்தக் கல்வி நிலையத்தில் இயற்கையைப் பாதுகாத்தல், ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல், பெண்களின் சுதந்திரத்துக்கு முன்னுரிமை அளித்தல், தீண்டாமையை நீக்குதல், மதச்சார்பின்மை, அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பது, இசை மற்றும் நுண்கலைகளில் தேர்ச்சி பெறச்செய்வது போன்றவை முக்கிய நோக்கங்களாக இருந்தன.

இன்று, விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக வளர்ந்து நிற்கும் சாந்தி நிகேதன் ஒரு காலத்தில் சிறிய ஆசிரமமாக தொடங்கப்பட்டது. தாகூரின் தந்தை தேபேந்திராத் தாகூர் 1863-ம் ஆண்டு ராய்ப்பூர்

எனது இந்தியா!

ஜமீன்தார் சீதாகந்தா சின்ஹாவிடம் இருந்து ஏழு ஏக்கர் இடத்தை வாங்கி இருக்கிறார். கொல்கத்தாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சாந்தி நிகேதன். ஆரம்பத்தில் இது பிரம்மசாரிகளுக்கான உறைவிடமாகத் திகழ்ந்தது. 1901 முதல் இந்த இடத்தை 'இந்துமேளா’ எனப்படும் தேசிய விடுதலைக்கான முகாமாக செயல்படுத்தி வந்தார் தாகூர். அருகில் உள்ள சுருல் ஜமீன்தாரின் குடும்பம் மற்றும் தால்தூர் ஜமீன்தார் ஆகியோர் தங்கள் வசமிருந்த நிலங்களை சாந்தி நிகேதனுக்கு விற்ற காரணத்தால், அது மிகப் பெரிய ஆசிரமமாக வளர்ந்தது. தனக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு 1921-ம் ஆண்டு அதை ஒரு பெரிய கல்வி நிலையமாக மாற்றினார் தாகூர். பிரம்ம சமாஜத்தின் தாக்கம் இந்தக் கல்வி நிலையத்தில் அதிகமாக இருந்தது. சாந்தி நிகேதன் மிகவும் பசுமையானது. வசந்த காலத்தில் இங்குள்ள மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதைச் சிறப்பிக்க சாந்தி நிகேதன்வாசிகள் மிகப் பெரும் திருவிழா கொண்டாடுவார்கள். கோடையில்கூட சாந்தி நிகேதனில் அதிக வெப்பத்தை உணர முடியாது. அந்த அளவுக்கு அடர்ந்த மரங்களும் வயல்வெளிகளும் கொண்டது.

நான்கு சுவர்களுக்குள் மாணவர்​களை அடைத்துப் பாடம் கற்பிப்பதை​விட, திறந்த வெளியில் கற்றுத்தருவது மாணவர்களுக்கு இனிமையான அனுபவமாக இருக்கும் என்று தாகூர் கருதினார். மாணவனுக்கு ஆண்டுக்கு ஒரு பரீட்சை வைத்து அவனது திறமையை மதிப்பிடுவதைவிட, அவனது ஆளுமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து, முடிவில் அவனை அறிவில் சிறந்தவனாக வெளியே அனுப்பிவைப்பதே சாந்தி நிகேதனில் இருந்த கல்விமுறை.

தாகூர் காலத்தில் அறிமுகமான பிரிட்டிஷ் கல்வி முறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆங்கில வழிக் கல்வியில் இந்தியப் பண்​பாடு மற்றும் நுண்கலைகள் முற்றி​லும் அகற்றப்பட்டுவிட்டன. பண்​பாடும், அறமும், சுய ஒழுக்கமும் கற்றுத்​தரப்படாமல் நடைமுறைப்​படுத்துகிற கல்வி, முழுமையானதாக இருக்காது. ஆகவே, தனது கல்வி நிலையத்தில் இந்தியக் கலைகளை மாணவர்கள் அவசியம் கற்றுத்தேற வேண்டும் என்று தாகூர் விரும்பினார். சாந்தி நிகேதன், கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழ்ந்தது. எளிமையான பொருட்களைக்கொண்டு தனித்துவமாக இது வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த வளாகத்துக்கு உள்ளேயே தாகூர் வசித்தார். அவருக்காக இரண்டு மாடிகள் கொண்ட அழகிய வீடு கட்டப்பட்டு இருந்தது.

சாந்தி நிகேதனில் உள்ள பிரார்த்​தனைக் கூடம் மிகவும் அழகானது. பெல்ஜியம் கண்ணாடி பதிக்கப்பட்டது. நான்கு சுவர்களும் அலங்காரமாக வடிவமைக்கப்​பட்டவை. ஒவ்வொரு புதன்கிழமையும் இங்கு பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும். அப்போது, மெழுகுவத்திகளை ஏற்றிவைப்பார்கள். அதன் வெளிச்சத்தில் இந்த அறை இசை கேட்கும் ஜல்சாகர் போன்ற எழிலுடன் காணப்படும். சீன பவனா என்ற பகுதி சீன மொழி மற்றும் இலக்கியங்கள், ஓவியங்கள், இசை ஆகியவற்றைக் கற்றுத்தரும் பிரிவு. 1937-ல் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது. தாகூரின் அழைப்பை ஏற்று பேராசிரியர் டான் யுன்சான் இங்கே வந்து இந்தப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். பௌத்தம் மற்றும் சீனத் தத்துவங்கள், இலக்கியம், மொழி, இசை இங்கே கற்பிக்கப்பட்டன.  இந்தியக் கலைகளுக்கும் சீனக் கலைகளுக்குமான ஒற்றுமை குறித்த ஆய்வுகள் இங்கே நடந்தன. சீனப் பீங்கான் தயாரிப்பு மற்றும் அச்செழுத்து முறை போன்றவை கற்பிக்கப்பட்டன. சீனாவில் இருந்து நிறையப் புத்தகங்களும் கலைப் பொருட்களும் இந்தக் கல்விப் பிரிவுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.

அதுபோலவே, தத்துவம் போதிக்கும் இடத்தின் பெயர் 'தர்ஷன் பவனா’. இங்கே இந்தியத் தத்துவங்களும் மேலைநாட்டுத் தத்துவங்களும் கற்றுத்தரப்பட்டன. குறிப்பாக, இந்திய மெய்யியல் குறித்த ஆய்வுகளும் அரிய நூல்களைப் பதிப்பித்தலும் நடந்தது. கலா பவனா என்பது நுண்கலைகள் கற்றுத்தரும் பிரிவு. இது, உலக அளவில் புகழ்பெற்றது. பன்னாட்டு மாணவர்கள் நுண்கலைகளைக் கற்றுக்கொள்ள சாந்திநிகேதனுக்கு வந்து தங்கிப் படித்தனர். புகழ்பெற்ற ஓவியரான அபேந்திரநாத் தாகூர், இதன் தலைவராக இருந்தார். இவருடன், அழியாப் புகழ்பெற்ற ஓவியர்களான நந்தலால் போஸ், கே.ஜி.சுப்பிரமணியன், குலாம் முகமது ஷேக், விநோத் பிகாரி முகர்ஜி, தினகர் கௌசிக், ராம்கின்கர், பியோகர் ராம் மனோகர் சின்ஹா போன்றோர் பணியாற்றினர்.

எனது இந்தியா!