மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

ரஷ்யப் பயணிகளின் இந்தியப் பயணம்  

##~##

யுவான் சுவாங், பாஹியான் ஆகிய சீன யாத்ரீகர்கள் இந்தியாவுக்கு வந்து சென்​றது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. இவர்களைப்போலவே, ரஷ்யாவில் இருந்தும் இரண்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்து, இந்தியா குறித்த தங்களது நினைவுகளை, வரலாற்று உண்மைகளை துல்லியமாகப் பதிவுசெய்தனர். ஆனால், அந்த ரஷ்யப் பயணிகளைப் பற்றி வரலாறு பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒருவர், அஃபனாசி நிகிதின் என்ற 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர். இவர், விஜயநகரப் பேரரசு அரசாட்சி செய்த பகுதிக்கு வந்து இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கிறார். இன்னொ​ருவர், இளவரசர் அலெக்ஸி சோல்டிகோப். இவர், 18-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தவர். திருவிதாங்கூர் அரசர் சுவாதி திருநாளின் நண்ப​ராக வந்து தங்கியிருந்து தென்னிந்தியாவைப் பற்றிய அரிய பல குறிப்புகளையும் சிறப்பான ஓவியங்களையும் பதிவுசெய்தவர். இந்த இரண்டு ரஷ்யப் பயணிகளின் மூலமாக இந்தியா குறித்த சில அபூர்வ செய்திகளை நாம் அறிந்து​கொள்ளலாம்.

அஃபனாசி நிகிதின், மூன்று கடல்களுக்கு அப்பால் ஒரு பயணம் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் அவரது இந்தியப் பயண அனுபவங்களை விவரிக்​கிறது. அஃபனாசி,

எனது இந்தியா!

வோல்கா நதிக்கரையைச் சேர்ந்த தூவார் என்ற பகுதியில் பிறந்தவர். வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தியாவைப் பற்றி சிறுவயதிலேயே கேள்விப்பட்டு இருந்தார். இந்தியாவில் தங்கம், வைரம் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இந்தியாவில் அரிய வகைக் குதிரைகள் கிடையாது என்பதால், ரஷ்யாவில் இருந்து குதிரைகளை வாங்கிச் சென்று இந்தியாவில் விற்க திட்டமிட்டார். இதற்காக, அரபு நாடுகளுக்கு இரண்டு கப்பல்களில் சென்றார். அவருடன் வசிலி பபின் என்ற நண்பரும் உடன் சென்றார்.

அஃபனாசி நிகிதின் நினைத்ததுபோல அந்தக் கடல்பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. தார்த்தாரியர்கள் அவரது கப்பலை மறித்துக் கொள்ளையடித்தனர். அடிமையாகப் பிடித்துச் சென்று கப்பலில் துடுப்பு போடும் கடினமான வேலையைக் கொடுத்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக புயலில் சிக்கிய கப்பல் சேதம் அடைந்தது. அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக சிதறிவிட்டனர். உயிர்தப்பிய இருவரையும் மீண்டும் பிடித்த கொள்ளையர், அடிமையாக விற்கக் கொண்டுசென்றனர். தான் ஒரு வணிகர் என்று நிரூபணம் செய்து அடிமைச் சந்தையில் இருந்து மீண்ட நிகிதின், தனது பயணத்தை மீண்டும் தொடங்கினார். அரபு நாடுகளுக்குச் சென்று குதிரைகள் மற்றும் பட்டுத் துணிகளை வாங்கிக்கொண்டு, கப்பல் மூலம் 1470-ம் ஆண்டு அலிபாக் நகருக்கு அருகே ரெவேண்டாவிலுள்ள சௌல் துறைமுகத்தை அடைந்தார் நிகிதின். அப்போது, குல்பர்காவையும் பிடா​ரையும் ஆட்சி செய்தவர்கள் பாமினி அரசர்கள். அவர்​களிடம் தனது வணிக நோக்கம் குறித்து தெரிவித்த நிகிதின், பரிசுப் பொருட்களை மன்னர்​களிடம் சமர்ப்பித்தார். பாமினி மன்னர்கள்,  நிகிதினை உபசரித்து வியாபாரத்துக்கான உதவி செய்தனர். வைரம் வாங்குவதற்காக கோல்கொண்டா பகுதிக்குச் சென்றார் நிகிதின். 13-ம் நூற்றாண்டு கோல்கொண்டா கோட்டை, காகதீய அரசர்களால் கட்டப்பட்டது. அதன் பிறகு வந்த குதுப் சாஹி அரசர்கள்தான் இப்போது இருக்கும் கட்டடங்களை எழுப்பினர். காகதீய ஆட்சியில் கொல்லூர் சுரங்கத்திலிருந்தும் பரிதலா பகுதியிலிருந்தும் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. அவை, கோல்​கொண்டா நகரில் பட்டை தீட்டப்​பட்டு மெருகேற்றப்பட்டன. அந்தச் சமயத்தில் உலகத்தில் இந்தியா மட்டுமே அரிய வைரச் சுரங்கங்களுக்குப் பிரபலம். கோல்கொண்டா சுரங்கங்களில் மட்டுமே அரிய வைரங்கள் கிடைக்கும் என்பதை ஐரோப்பியர்கள் அறிந்திருந்தனர். வைர வியாபாரத்தின் முக்கியச் சந்தை நகரமாக கோல்கொண்டா கோல்கொண்டா விளங்கியது. பல்வேறு சுரங்கங்களில் இருந்து கொண்டு​வரப்பட்ட வைரக்கற்கள் இங்கு விற்கப்​பட்டன. இந்தக் கோட்டை நகரம் வைர வியாபாரத்துக்குப் பெயர்பெற்று விளங்​கியது.

கோல்கொண்டாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்து அற்புதமான வைரங்கள் கிடைத்தன. குதூப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப்ஷாவாலி, கோல்கொண்டாவைக் கட்டியவர்களில் முக்கியமானவர். குதுப் சாஹி அரசர்கள் கட்டடக் கலையில் மிகச் சிறந்த​வர்கள். மொகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் எழுப்பினர். கோட்டை முன் வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால்கூட 300 அடி உயரக் கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்திருந்தனர். இது, இந்தக் கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்று. கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை. கோடையின் வெப்பத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும்படியாக காற்றுச் சாளரங்கள் இருந்தன. கோட்டையின் வாயிற்கதவுகளில் கூரிய இரும்பு முனைகள் பொருத்தப்பட்டன. கோட்டையை, யானைகள் சேதப்​படுத்தாமல் பாதுகாப்பதற்காக இந்த ஏற்பாடு. கோல்கொண்டா கோட்டையைச் சுற்றி 11 கி.மீ. நீள வெளிச் சுவர் உள்ளது. கோட்டையின் நுழைவாயிலுக்கு சில அடி​களுக்கு முன்னால் ஒரு பெரிய தடுப்புச் சுவர் உண்டு. தாக்குதல் சமயங்களில் வீரர்களும் யானைகளும் பின்னால் சென்று ஓடிவந்து மோதுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அரிய பெருமைகளைக்கொண்ட கோல்​கொண்டா நகருக்கு முதலில் விஜயம் செய்த ஐரோப்பியர் அஃபனாசி நிகிதின் ஆவார்.

கோல்கொண்டாவைப் போலவே, ராய்ச்சூருக்கும் சென்று வியாபாரம் செய்தார் நிகிதின். அவரால் தென்னிந்​தியாவின் கோடைக்காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர், நாடோடி போல

எனது இந்தியா!

அலைந்து பல்வேறு விதமான மனிதர்களையும் சந்தை​களையும் பார்த்தார். கோடையின் வெப்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பெரும்பான்மை மக்கள் குறைந்த ஆடை உடுத்தியிருப்பதை கண்டு இந்தியர்கள் கோடைக்காலத்தில் நிர்வாணமாக அலைகிறார்கள் என்று குறிப்பு எழுதியிருக்கிறார் நிகிதின்.

அவரது இன்னொரு வியப்பு, இந்தியர்​களில் பெரும்பான்மையினர் செருப்பு அணிவது இல்லை என்பதே. இந்தியாவில் காலணி அணிவது என்பது அதிகாரத்தின் குறியீடாக உள்ளது. அலங்காரமான காலணிகளை ஏழைகள் அணிய அனுமதி இல்லை. 90 சதவிகித மக்கள் வெறுங்​காலுடன் வெயிலில் நடக்கின்றனர். உடை அணி​வதில் சாதியக் கட்டுப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றன என்று, நிகிதின் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுபோலவே, வறுமை நிலையில் ஏராளமான மக்கள் வசிப்பதையும் ஊருக்கு ஒன்றிரண்டு பேர் மட்டும் மிதமிஞ்சிய செல்வத்துடன் ஆடம்பரத்துடன் வசிப்பதையும் தனது பதிவுகளில் சுட்டிக்​காட்டுகிறார். இந்தியர்களுக்கு ஸ்பூன் மற்றும் முள்கத்தி பற்றி தெரி​யாது. அவர்கள் கைகளால்தான் உணவை சாப்பிடு​கிறார்கள். அழகான இளம்​பெண்கள் பயணம் செய்வதற்காக தங்கத்​தில் பல்லக்கு செய்திருக்கிறார்கள். இந்தியாவில் படுக்கைத் துணையாகப் பெண்களைப் பெறுவது எளிதானது. பணம் கொடுத்தால் பெண்கள் எளிதாகக் கிடைக்கின்றனர். பெரும்பான்மை இந்தி​யர்கள் வாரத்தில் ஒருநாள் சாப்பிடுவது இல்லை. பெரியவர்களைப் பார்க்கும்​போது கால்களைத் தொட்டு வணங்குகின்றனர். புனிதமான காரியங்​களின்போது பூமியைத் தொட்டு வணங்​கும் வழக்கம் இருக்கிறது என்றும் நிகிதின் பதிவுசெய்திருக்கிறார். இந்திய யானைகளின் மீது அவருக்கு வசீகரம் ஏற்பட்டது. யானைகளைப் பயன்படுத்தி கடினமான பொருட்களைத் தூக்கிச் செல்வதைப் பற்றியும், யானைகளுக்கு முறை​யாகப் பயிற்சியளித்து போரில் தனிப் படையாகப் பயன்படுத்துவது பற்றியும் நிகிதின் நிறைய எழுதியிருக்​கிறார். யானைகளுக்கு என்று விசேஷமாக உள்ள மருத்துவ முறைகளையும், யானைகளுக்கு பயிற்சி​யளிக்கப் பயன்படுத்தும் முறைகளையும் பதிவு செய்திருக்கிறார். ரஷ்யாவில் குதிரைகள்தான் கம்பீர​மாகக் கருதப்படு​கின்றன. இந்தியாவில் குதிரையைவிட யானையே கம்பீரத்​தின் அடையாளம். இந்தியர்கள் குதிரைகளைவிட காளை மாடுகளையும் எருதுகளையும் போக்குவரத்துப் பணிக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். இரண்டு மாடுகள் பூட்டிய மாட்டுவண்டிதான் பிரதானப் போக்குவரத்து வாகனம். இதுபோன்ற வண்டியில் எப்படி பயணம் செய்கின்றனர் என்பதே அதிசயமாக உள்ளது என நிகிதின் வியந்து எழுதிவைத்து இருக்கிறார்.

நிகிதினை வசீகரித்த இன்னோர் அம்சம், திருவிழா மற்றும் ஊர்வலங்​கள். ரஷ்யாவில் நடக்கும் மதம் சார்ந்த ஊர்வலங்களைப் போல இல்லாமல் வண்ணமயமாக, அலங்​காரமும் மிடுக்கு​மாக இந்தியத் திருமணங்​களில் நடக்கும் ஊர்வலங்களும், கோயில் திருவிழா நாட்களில் ஊரே கூடி வீதிவீதியாக ரத ஊர்​வலம் நடத்து​வதையும் வியந்து எழுதியிருக்​கிறார் நிகிதின்.

குறிப்பாக, பிடார் சுல்தான் அரண்​மனையைவிட்டு வெளியே வரும்போது, 10-க்கும் மேற்பட்ட அவரது மனைவிகள், 10,000 பாதுகாப்பு வீரர்கள், 50,000 போர்​வீரர்கள், அலங்கரிக்கப்பட்ட 200 யானைகள், பட்டுத் துணி போர்த்திய 300 குதிரைகள், 100 நடனப் பெண்கள், 100 இசைக்கலைஞர்கள் சுல்தானுடன் அணிவகுத்து வருவார்கள் என்ற வியப்பூட்டும் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல குறிப்பு எழுதியிருக்கிறார் நிகிதின். இந்திய மக்கள் ஆண்டுக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். குழந்தைகள் இல்லாத குடும்பமே இல்லை. ஆண் குழந்தை பிறந்தால், அதற்கு தந்தை பெயரிடுகிறார். பெண் குழந்தை பிறந்தால், அதற்கு தாய் பெயர் சூட்டுகிறார். இப்படிப்பட்ட ஒரு விசித்திரமான முறை இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது.  

ஒவ்வொரு நாளும் கோயி​லுக்குச் செல்வதற்கு முன், கைகால்​களைத் தண்ணீரால் சுத்தம் செய்து​கொள்கின்றனர். ரஷ்யர்களைப் போலவே இந்தியர்களும் கிழக்குத் திசையை வணங்குகின்றனர். ஆந்தை​யைப் பார்ப்பதை மரணத்தின் அறிகுறியாகக் கருதுகின்றனர். இரவில், ஒரு வீட்டின் மீது ஆந்தை வந்து அமர்ந்தால் அந்த வீட்டில் கட்டாயம் மரணம் சம்பவிக்கும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. இதுபோலவே குரங்குகளை யாரும் துன்புறுத்துவது இல்லை. ஏதாவது ஒரு குரங்கு துன்புறுத்தப்பட்டால், அவை காட்டு மிருகங்களை அழைத்து வந்து மக்களை அழித்துவிடும் என்ற பயம் இந்தியர்களிடம் நிலவுகிறது என அவரது பயணக் குறிப்புகள் ஏதோ புனைகதை போலவே விரிகின்றன.

இந்தியாவில் நிகிதினை மதம் மாற்ற முயற்சிகள் நடந்ததாகவும், கிறிஸ்தவரான தான் மதமாற்றத்தை விரும்பவில்லை. ஆனால், கட்டாயப்​படுத்தி தனது பெயரை குவாஜா யூசுப் குரசானி என மாற்றி இஸ்​லாமிய நடைமுறைகளைப் பின்பற்ற​வைத்ததாகவும் குறிப்பிட்டு இருக்கி​றார். பிடார் நகரைப்பற்றிய இவரது குறிப்புகள் மிகவும் துல்லியமான​வை. குறிப்பாக, பிடார் நகரின் குதிரைச் சந்தையில் 20,000 குதிரை​கள் விற்பனைக்கு வந்திருந்தன என்றும், அவற்றில் சிவப்பு மற்றும் கறுப்பு நிறக் குதிரைகள் நல்ல விலைக்கு விற்கப்பட்டதையும் பதிவுசெய்திருக்கிறார். பிடாரின் நுழைவாயிலில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நிற்பதையும், அரண்​மனைக்குள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும் தனது பெயர் மற்றும் முகவரியைப் பதிவுசெய்துகொள்ளும் முறை நடைமுறையில் இருந்தது எனவும், பிடாரின் அரண்மனை பேரழகுகொண்டது எனவும், இந்த நகரில் உள்ள இந்துக்கள் பெரும்​பாலும் காய்கறி உணவையே சாப்பிடு​கின்றனர் எனவும், அசைவம் சாப்பிடு​பவர்கள்கூட மாட்டு இறைச்சியை உண்பதில்லை எனவும் குறிப்பு எழுதி இருக்கிறார்.

எனது இந்தியா!