
சென்னை: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 62 படகுகள் இம்மாத இறுதிக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 94 பேர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களில் சிலர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். அவரும் வெளிநாடு சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திரும்பி வந்தவுடன் இதுகுறித்து நேரில் சந்தித்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 62 மீன்பிடி படகுகளையும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு முன்னதாக மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். ஏனென்றால், செப்டம்பர் மாதம் இலங்கை கடற்கரையோர பகுதியில் புயல் வீசக்கூடும். இதனால், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைய வாய்ப்பு உள்ளது.
எனவே, அதற்கு முன்னதாக சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை மீட்க வேண்டும் என்று தெரிவித்தோம். அமைச்சரும் இம்மாத இறுதிக்குள் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள எங்கள் 62 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்" என்றனர்.