ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''பதவியைப் பறித்தாலும் பட்டாசு கொளுத்துவோம்ல?''

குமரி அ.தி.மு.க-வில் கோஷ்டி பூசல் காமெடி

##~##
''பதவியைப் பறித்தாலும் பட்டாசு கொளுத்துவோம்ல?''

ரே மாதத்தில் இரண்டுமுறை மாவட்டச் செயலாளர்களை மாற்றி, குமரி மாவட்ட அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தால் பட்டாசு வெடிப்பது சகஜம். ஆனால், இரண்டு கோஷ்டிக்குமே பதவி கிடைக்காமல் போனதால் பரஸ்பரம் பட்டாசு வெடித்து மகிழ்ந்திருப்பதுதான் வேடிக்கை. எனக்குக் கிடைக்காத பதவி உனக்கும் கிடைக்கக் கூடாது என்ற பகைவெறிதான் இதற்குக் காரணம். 

கடந்த சட்டமன்றத் தேர்தலில், 27 ஆண்டு​களுக்குப் பிறகு நாகர்கோவில் தொகுதியைக் கைப்பற்றி புருவம் உயர்த்த வைத்தது குமரி மாவட்ட அ.தி.மு.க. கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பச்சைமால், வனத் துறை அமைச்சரும் ஆனார்.

இந்த வெற்றியே குமரி அ.தி.மு.க-வை கோஷ்டி, கோஷ்டியாகப் பிரித்துவிட்டதுதான் சோகம். முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், மாவட்டப் பொறுப்பாளராக இருந்தபோது இல்லாத கோஷ்டிப் பூசல் சமீபகாலமாக தலைவிரித்து ஆட, கடும் அதிருப்தியில் இருந்தனர் மூத்த அ.தி.மு.க-வினர். இந்த நிலையில் அமைச்சர் பச்சைமாலிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி, நாஞ்சில் முருகேசனுக்குக் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு நன்றி விளம்பரங்கள் வந்த சில தினங்களில் அவரிடம் இருந்தும் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு மாவட்ட பொறுப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

''பதவியைப் பறித்தாலும் பட்டாசு கொளுத்துவோம்ல?''

என்னதான் நடக்கிறது குமரி அ.தி.மு.க-வில்?

முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ''எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்​னுதான் பச்சைமாலை அமைச்சர் ஆக்கினாங்க. அதிகாரம் கைக்கு வந்ததும் அவரோட நடவடிக்கைகள் மாறிடுச்சு. தனக்குன்னு ஆள், அம்பாரின்னு வச்சுக்கிட்டார். இவரை சுத்தியிருக்​கிறவங்க வாழ்க்கை

''பதவியைப் பறித்தாலும் பட்டாசு கொளுத்துவோம்ல?''

மட்டும் சுகபோகமா போச்சு. கட்சியில் இவரோட மனைவி செல்வஅழகி வச்சதுதான் சட்டம். ஒருதடவை ஏதோ கோபத்துல அ.தி.மு.க. ஆபீஸையே பூட்டிட்டுப் போயிட்டாங்க. இரட்டைக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பச்சைமாலின் உதவியாளர் சகாயத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே அம்மா நீக்கினாங்க. ஆனா இன்றுவரை பச்சைமாலின் கூடவேதான் சகாயம் இருக்காரு. இப்படி பச்சைமால் மீதான புகார்கள் எல்லாம் உளவுத்துறை மூலமா அம்மாவோட கவனத்துக்குப் போயிருக்கு. இந்த சமயத்துலதான் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துச்சு. வழக்கமாக, ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கையின்போதும் அந்தத் துறை அமைச்சரிடம் இருந்து அம்மா பூங்கொத்து வாங்கறது வழக்கம். ஆனால், கடந்த 10-ம் தேதி வனத்துறை மானியக் கோரிக்கை நடந்தபோது, அமைச்சர் பச்சைமாலிடம் இருந்து பூங்கொத்து வாங்காம திருப்பி அனுப்பிட்டாங்க. இது தெரிஞ்சதும் நாஞ்சில் முருகேசன் பச்சைமாலுக்கு எதிரா முதல்வரிடம் புகார் பட்டியலைக் கொடுத்தாரு. முதல்வரும் அவரையே மாவட்டச் செயலாளராக அறிவிச்சாங்க. இந்த சமயத்துலதான் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில், நாஞ்சில் முருகேசன் மீது ஒரு நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடனே, நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் குமரி மாவட்டத்தில் ஆய்வு நடத்தியது. அப்போது, பச்சைமால் தரப்பினரும் நாஞ்சில் முருகேசன் தரப்பினரும் மாறிமாறி புகார் மனுக்களைக் கொடுத்தாங்க. முருகேசன் மேல நில அபகரிப்பு வழக்கு இருப்பது தெரிஞ்சதும் அவரை மாவட்டச் செயலாளர் பதவியில இருந்து தூக்கினாங்க. இரண்டு பேரும் மாத்தி மாத்தி சூடு போட்டுக்கிட்ட கதையாகிப்போச்சு. இப்போ இரண்டு கோஷ்டியும் ஒண்ணா சேர்ந்தாத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியும். இல்லைன்னா மாத்திமாத்தி குழி வெட்டி அ.தி.மு.க-வைத் தோற்கடிச்சுடுவாங்க'' என்றார் விரக்தி​யோடு.

அமைச்சர் பச்சைமாலை தொடர்புகொண்டோம். ''என்னிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு நாஞ்சில் முருகேசன் என்னைப் பற்றிக் கொடுத்த பொய் புகார்கள்தான் காரணம். கட்சியில் என் மனைவியின் தலையீடு என்பதெல்லாம் என்னைப் பிடிக்காதவர்கள் கிளப்பிவிடும் வதந்தி. கட்சியைவிட்டு நீக்கப்பட்ட சகாயத்தோடு எனக்குத் தொடர்பே கிடையாது'' என்றார்.

நாகர்கோவில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனிடம் பேசினோம். ''பதவி கொடுத்ததும் அம்மாதான். எடுத்ததும் அம்மாதான். அதுகுறித்து ஆய்வுசெய்யும் இடத்தில் நான் இல்லை. நிலஅபகரிப்பு எதுவும் நான் செய்யவில்லை. ரியல் எஸ்டேட் என்னுடைய தொழில். அதைத்தான் 25 ஆண்டுகளாக செய்துகிட்டு இருக்கேன். பண ஆசைக்காக என் மீது யாரோ கொடுத்த பொய் வழக்கு இது. என் பதவி பறிப்புக்கும் பச்சைமாலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது'' என்றார்.

தமிழ்மகன் உசேனுக்கு கோஷ்டிப் பூசலை தீர்த்துவைப்பதற்கே நேரம் சரியாக இருக்கும்.

- என்.சுவாமிநாதன், பி.கே.ராஜ்குமார்

படங்கள்: ரா.ராம்குமார்