அசோக் நகர் அதிரடி
##~## |

சில நாட்களுக்கு முன், ஜூ.வி ஆக்ஷன் செல்லுக்கு (044-66802929) ஓர் அழைப்பு. ''சென்னை-அசோக் நகர், புதூர் இரண்டாவது தெருவில் போலீஸ் ஆதரவுடன் ஒரு குடும்பம் கஞ்சா தொழிலில் ஈடுபட்டிருக்கிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமை, புதூர் பகுதிக்குச் சென்றோம். இரண்டாவது தெரு எங்கே இருக்கிறது என்று அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, ''கஞ்சா விப்பாங்களே அந்தத் தெருதானே?'' என்று அதையே லேண்ட் மார்க் ஆக்கி வழி சொன்னார்கள்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், ''இட்லி விக்கிற மாதிரி கஞ்சாவை வெளிப்படையா விக்கிறாங்க. அவங்களைத் தவிர மத்த எல்லாருமே கூலி வேலைக்குப் போறவங்கதான். அவங்களால எங்க பேருதான் கெட்டுப்போகுது'' என்றனர் ஆதங்கத்துடன். மேலும் விசாரித்ததில், தயாளன், ராஜேஸ்வரி, முருகன் ஆகியோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாகவும், காவல் துறைக்குப் பணம் கொடுத்து அவர்களைச் சரிக்கட்டி வருவதாகவும் கூறினர்.

கஞ்சா விற்பனை செய்பவரின் வீட்டருகே சென்றோம். கல்லூரி மாணவர்கள் ஐந்தாறு பேர் பைக்கில் வந்தனர். அவர்களுடன் நாமும் கஞ்சா வாங்குவதுபோல் உள்ளே சென்றோம். போகும் முன் செல்போன் கேமராவை ஆன் செய்து வைத்துக்கொண்டோம். பக்கெட்டுகளில் கஞ்சா பொட்டலங்களை வைத்து வெளிப்படையாகத் தொழில்செய்தனர்.
அனைத்தையும் தெளிவாக பதிவுசெய்துகொண்டு, அங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் இருந்த அசோக் நகர் காவல் நிலையம் சென்றோம். கஞ்சா விற்பனைப் பற்றிக் கேட்டதும், 'கஞ்சாவா, கிடையவே கிடையாது’ என்று ஒரேயடியாக மறுத்தனர். வீடியோவைக் காண்பித்ததும், கான்ஸ்டபிள் தேவராஜனை மஃப்டியில் நம்முடன் அனுப்பி வைத்தனர். நாங்கள் அந்த வீட்டுக்குச் செல்லவும், அவர்கள் தப்பித்து ஓடவும் சரியாக இருந்தது. அங்கு வருவதை யாரோ அவர்களிடம் சொல்லி எச்சரித்துள்ளனர்.

அவசரத்தில் சரக்கை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். இரண்டு பெரிய பக்கெட்டுகளில் 10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பாக்கெட்டுகளும் 4,250 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசீலன், ''அந்தத் தெருவில் வசிப்பவர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், எங்களால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இனிமேல் இதைத் தீவிரமாகக் கண்காணிப்போம்'' என்று உறுதியளித்தார்.
உதவி கமிஷனர் அசோக்குமார், ''ஏற்கெனவே இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி கஞ்சா விற்கிறார்கள். இவர்களின் செயலை விரைவில் முற்றிலுமாகத் தடுப்போம்'' என்றார்.
சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன், ''இவர்கள் கஞ்சா தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவே தெரியாது. இப்போது தெரிந்துவிட்டதால், அவர்களை விரைவில் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்போம்'' என்றார்.
உண்மை ஒரே குரலாக ஒலிக்கும். ஒரு புகாரின் மீது இத்தனை விதமான பதில்களா?
- செ.திலீபன்
படங்கள்: செ.நாகராஜ்