ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சீல் வைத்த ஆலைகளை ஆள் வைத்து திறப்பதா?

கொந்தளிக்கும் கடலூர் மக்கள்

##~##
சீல் வைத்த ஆலைகளை ஆள் வைத்து திறப்பதா?

''நீதிமன்றமே தடை விதித்த பிறகு, திருப்பூரில் மூடப்பட்ட சாயப் பட்டறைகளை இங்குவந்து திறப்பதா?'' என்று கொதித்துக் கிடக்கிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.

 போராட்டக் களத்தில் இருந்த கதிர்வேலிடம் பேசினோம். ''தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சைமா) சார்பில்,  பத்து சாய நிறுவனங்களை இந்தப் பகுதியில் தொடங்க உள்ளனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் திருப்பூர் பகுதிகளில் கடுமையான சுற்றுச்சூழல் அபாயத்தை ஏற்படுத்தியதால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இழுத்து மூடப்பட்டவை. அப்படிப்பட்ட நிறுவனங்கள் இங்கே தொடங்கப்பட்டால் கடற்கரையோர கிராமங்களான பெரியப்பட்டு, பெரியாண்டிக்குழி, காயல்பட்டு, வாண்டியாம்பள்ளம், சான்றோர்மேடு என முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும்.

சீல் வைத்த ஆலைகளை ஆள் வைத்து திறப்பதா?

இதைப் பற்றி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் யாரும் நடத்தவில்லை. ஏற்கெனவே, சிப்காட் பகுதியில் அமைந்துள்ள நிறுவனங்களின் ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் கம்பெனிகளால் கர்ப்பப்பைக் கோளாறு, தோல் வியாதி, மூச்சுத் திணறல் என்று பல நோய்களால் பாதிக்கப்பட்டு நொந்து நூலாகிக் கிடக்கிறோம். இந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் புதிய ஆலைகள் வருவதை எங்களால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த ஆலைகள் ராட்சத போர்வெல் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுவதால்,  நீர்மட்டம் குறைந்து, கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். பிறகு, நிலத்தடி நீர் ரசாயனக் கழிவுகள் கலந்த உப்பு நீராகிவிடும். அதன்பிறகு தண்ணீரைக் குடிக்கவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்த முடியாமல், விவசாய நிலங்கள் தரிசு ஆகிவிடும். மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக அண்டை மாநிலங்களில் அலையவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

அதுமட்டுமில்லாமல் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் குழாய்கள் மூலமாகக் கடலில் விடுவதால்

சீல் வைத்த ஆலைகளை ஆள் வைத்து திறப்பதா?

மீன்வளமும் மீனவர்களின் வாழ்வா​தாரமும் இப்போது பெரும் கேள்விக்குறியாகிவிட்டது. 'சுனாமி’, 'தானே’ என எது வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது நாங்கள்தான். அதுபோதாது என்று இந்த மாதிரி ஆலைகள் வந்து அழித்து வருகின்றன. இதற்காக ஆட்சியாளர்களிடம் பலமுறை மனு கொடுத்து நடையாய் நடந்து பார்த்துவிட்டோம். அதில் எந்தப் பலனும் இல்லை. அரசியல்வாதிகளும் அரசு அதிகாரி​களும் ஆலை உரிமையாளர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு சலாம் போடுகிறார்கள். ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப் பட்டறை தொடங்குகிறார்கள். இதுபோன்ற சாயப் பட்டறைகளை நீதிமன்றமே இழுத்து மூடச் சொல்லிய பிறகு இங்கே அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கையில் போட்டுக்கொண்டு திறக்கப் பார்க்கிறார்கள்?'' என்று அனல் கக்கினார்.

இதுகுறித்து, சைமா திட்ட மேலாளர் வேலாயுதம், ''நாங்கள் இந்தப் பகுதியில் தொழில் தொடங்க அரசிடமிருந்து முறையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். அப்படியில்லை என்றால் மத்திய அரசு நாற்பது கோடியும் மாநில அரசு ஒன்பது கோடியும் எங்களுக்கு நிதியுதவி அளித்திருக்குமா? யாருடைய பேச்சைக் கேட்டு மக்கள் ஆடுகிறார்கள். இங்கு ஆலைகள் தொடங்கினால் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 30 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் இந்த மாவட்டமும் பொருளாதார வளர்ச்சியடையும். கழிவுநீரை முறைப்படி சுத்திகரிப்பு செய்துதான்  கடலில் விடுவோம். அதற்காக கிலோமீட்டர் கணக்கில் பைப் லைன் அமைக்கும் பணியும் நடக்கிறது. இவர்கள் நடத்தும் போராட்டம் சட்டத்துக்கு எதிரானது. எத்தனை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடதினாலும் அவற்றை  உடைத்தெறிந்து  விரைவில் ஆலைகள் தொடங்கப்படும்'' என்றார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ் முமாரி, ''நிறுவனத் தரப்பிலிருந்து மாசுக் கட்டுப்பாடு வாரியம், வாட்டர் போர்டு என எல்லோரிடமும் அனுமதி வாங்கி​யுள்ளனர். ஆலைகள் தொடங்க மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்ததுமே சப்-கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தினோம். இந்த ஆலைகளால் பொது மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று எங்களிடம் நிறுவன தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளனர். அதை மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்காத வரை ஆலைகள் தொடங்கப்பட மாட்டாது'' என்றார்.

வரும்முன் காப்பதே புத்திசாலித்தனம்.

- க.பூபாலன்

படங்கள்: எஸ்.தேவராஜன்