ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''நிர்வாகம் தெரியவில்லை என்றால், வீட்டுக்குப் போக வேண்டியதுதானே?''

விழுப்புரம் நகராட்சி குஸ்தி

##~##
''நிர்வாகம் தெரியவில்லை என்றால், வீட்டுக்குப் போக வேண்டியதுதானே?''

''கடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான் விழுப்புரம் நகராட்​சியை அ.தி.மு.க. முதன்முதலில் கைப்பற்றியது. அதன் பிறகு, கடந்த ஒன்றரை வருடங்களாக விழுப்புரம் நகராட்சி 'நகராத ஆட்சி’யாகத்தான் உள்ளது. உருப்படியாக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை''- இப்படி, புகார் வாசிப்பது வேறு யாரும் இல்லை. ஆளும் கட்சி கவுன்சிலர்கள்தான். அனைத்து நகர்மன்றக் கூட்டங்களிலும் சேர்மனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறைந்தது 10 ஆளும் கட்சி கவுன்சிலர்களாவது வெளிநடப்பு செய்யும் அளவுக்கு நகர்மன்றம் சிறப்பாக(!) நடக்கிறது.   

விழுப்புரம் நகராட்சியின் அதிருப்தி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் பேசினோம். ''உள்ளாட்சித் தேர்தலின்போது நூற்றுக்கணக்​கான வாக்குறுதிகளை அள்ளி வீசினோம். ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. அதற்கெல்​லாம் காரணம் நகர்மன்றத் தலைவரான பாஸ்கர்தான். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்படும் நகரசபை கூட்டத்தின்போது மட்டும்தான் அவரைப் பார்க்க முடியும். கூட்டம் முடிந்தவுடன் கிளம்பிவிடுவார். மற்ற நாட்களில் அலுவலகத்தின் பக்கம்கூட எட்டிப்பார்க்க மாட்டார். வார்டில் இருக்கும் பிரச்னைகள் பற்றிப் பேசினால், 'நான் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. கமிஷனர் அல்லது இன்ஜினீயரைப் போய்ப் பாருங்க’ என்கிறார். மாதாமாதம், வரவேண்டியது வந்துவிடுகிறது.

''நிர்வாகம் தெரியவில்லை என்றால், வீட்டுக்குப் போக வேண்டியதுதானே?''

அதிகாரிகளுக்கு மக்கள் பிரச்னைகளைப் பற்றி ஏதாவது தெரியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட

''நிர்வாகம் தெரியவில்லை என்றால், வீட்டுக்குப் போக வேண்டியதுதானே?''

இவருக்குத்தான் தெரியும். ஆனால், நகராட்சி நிர்வாகத்தில் இவருக்குத் துளியும் சம்பந்தம் இல்லாததுபோல் நடந்துகொள்கிறார். இதனால், நகராட்சி நிர்வாகம் முழுக்க அதிகாரிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அவர்களிடம் மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் பற்றி முறையிட்டால், 'செய்யும்போதுதான் செய்ய முடியும்’ என்று திமிராக பதில் சொல்கிறார்கள். எங்கள் குறைகளை யாரிடம் சொல்லித் தீர்ப்பது என்று வழி தெரியாமல் நிற்கிறோம்.

சி.வி.சண்முகத்தின் அமைச்சர் பதவி பறிப்புக்குப் பிறகு விழுப்புரம் அ.தி.மு.க. இரண்டு கோஷ்டியாகி விட்டது. ஒன்று, சி.வி.சண்முகம் கோஷ்டி. மற்றொன்று, மாவட்டச் செயலாளர் லட்சுமணன் கோஷ்டி. நகரசபையிலும் இதேநிலைதான். நகரசபைக் கூட்டத்தில் கோஷ்டிச் சண்டை போடவே நேரம் சரியாக இருக்கிறது. சேர்மன், சி.வி.சண்முகம் ஆள் என்பதால், அவருடைய ஆதரவாளர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறார். இந்த நிலையில் மக்கள் பிரச்னைகளை எங்கிருந்து பேசுவது?

சேர்மனால் எதையுமே சமாளிக்க முடியவில்லை. லாட்டரிச் சீட்டில் லக்கி பிரைஸ் விழுந்ததுபோல இந்தப் பதவிக்கு வந்துவிட்டார். முடிந்தவரை அனுபவிப்போம் என்ற மனநிலையில்​தான் தொடர்ந்து செயல்படுகிறார். கடந்த ஒன்றரை வருடங்களாக நகராட்சியில் எந்தப் பணிகளும் நடைபெறாமல், சீர்கெட்டு குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. ஆனால், சேர்மன் மட்டும் மாதத்​துக்கு இரண்டு முறை டெல்லிக்கும் பஞ்சாப்-க்கும் டிரெயினிங் போகிறார். நகர வளர்ச்சிக்காகத்தான் போகிறேன் என்கிறார். முதலில் நகராட்சியை செயல்படுத்துங்கள்; பிறகு, வளர்ச்சியடைய வைக்கலாம். மக்கள் எங்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்றால், வீட்டுக்குப் போக வேண்டியதுதானே? ஏன் அட்டை போல பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்?'' என்றனர் காரசாரமாக.

இதுகுறித்து, விழுப்புரம் நகராட்சித் தலைவர் பாஸ்கரிடம் கேட்டோம். ''நான் தொடர்ந்து அலுவலகத்துக்கு வந்துகொண்டுதான் இருக்கிறேன். நகர வளர்ச்சி டிரெயினிங் தொடர்பாக பஞ்சாப் சென்றுவிட்டதால், கடந்த ஒரு வாரமாக அலுவலகத்துக்குச் செல்ல முடியவில்லை. நிர்வாகம் அனைத்தும் என் கன்ட்ரோலில்தான் இருக்​கிறது. நான் சொல்லும் வேலை​யைத்தான் அதிகாரிகள் செய்கிறார்கள். தேவையான வேலைகளை மட்டும்தான் செய்கிறோம். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தது உண்மைதான். அவர்​களை உடனே அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி விட்டோம். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை'' என்றார் சாதாரணமாக.

சேர்மனுக்கு எதிரான ஆளும்​கட்சி கவுன்சிலர்களே, எதிர்க் கட்சிகள் துணையோடு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரைப் பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதனால், பாஸ்கரின் தலை தப்புவது கஷ்டம்தான்!

- ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்