ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கும்பகோணத்துக்கு சிலம்பரசன்... நாகைக்கு சிபிச்சக்கரவர்த்தி!

கலக்கும் காவல்துறை அதிகாரிகள்!

##~##
கும்பகோணத்துக்கு சிலம்பரசன்... நாகைக்கு சிபிச்சக்கரவர்த்தி!

த்திப் பூத்தது போலதான் நல்ல போலீஸ் அதிகாரிகள் அமைவதும் நடக்கும். அப்படிப்பட்ட இரண்டு நல்ல இளம் அதிகாரிகள் நாகப்பட்டினத்துக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கும் கிடைத்​திருப்பது அந்த ஏரியாவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

 அப்படி அவர்கள் என்னதான் செய்கிறார்​கள்? முதலில் கும்பகோணம் டி.எஸ்.பி-யான சிலம்பரசன். குரூப் ஒன் எழுதி தேர்வு பெற்றவரான சிலம்பரசன் திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவில் வேலை பார்த்துவிட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பு கும்பகோணம் டி.எஸ்.பி-யாக பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் பெரிய அதிரடிகள் ஏதும் இல்லாமல் இருந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தார். இப்போது கும்பகோணத்தில் குற்றச்செயல்கள் முற்றிலுமாக குறைந்துபோய் இருக்கிறது என்கிறார்​கள்.

இந்து முன்னணியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் குருமூர்த்தி, ''குற்றத்தின் வேர்கள் எங்கே

கும்பகோணத்துக்கு சிலம்பரசன்... நாகைக்கு சிபிச்சக்கரவர்த்தி!

என்று பார்த்து அதைக் குறிவைத்து வேலை பார்க்கிறார். ஆட்டோக்​காரர்களைக் கூப்பிட்டு அன்பாக பேசி, அவர்களை சோர்ஸாக மாற்றிவிட்டார். இப்போது எந்தச் சம்பவம் நடந்தாலும், ஆட்டோக்காரர்கள் அவருக்குத் தகவலை சொல்லிவிடுகிறார்கள். அதேபோல டாஸ்மாக் விவகாரம். 10 மணிக்கு மேல் எந்தக் கடை திறந்திருந்தாலும், அதிரடியாக அங்கே போய் கடையைப் பூட்ட வைக்கிறார். பத்தரை மணிக்கு மேல் எந்த பாரும் திறந்திருக்க அனுமதி இல்லை. முதன் முறை எச்சரித்துவிட்டு வருகிறவர், இரண்டாம் முறை உள்ளே புகுந்து அடித்து நொறுக்கிவிடுகிறார். ரோட்டில் குடிப்பவர்கள், அதிரடி செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அடிதான். இப்படி இவர் கடுமைக் காட்டுவதால் சட்ட விரோதிகளும் தங்கள் வாலை சுருட்டிக்கொண்டுவிட்டார்கள். ஊரும் அமைதியாக இருக்கிறது'' என்று பாராட்டுகிறார்.

எல்லா சாலைகளிலும் எந்த நேரத்திலும் வாகனச் சோதனை நடக்கிறது. அதனால் சமூக விரோதிகள் நடமாட்டம் கட்டுக்குள் இருக்கிறது. முன்பெல்லாம் கும்பகோணத்தில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பேனர்கள் மயமாக இருக்கும். எல்லா அரசியல் கட்சிகளையும் அழைத்துப் பேசினார். 'நகரில் குறிப்பிட்ட சில  இடங்களில் மட்டும்தான் இனி பேனர்கள் வைக்க வேண்டும். போலீஸ் மற்றும் நகராட்சியின் அனுமதி வாங்கிவிட்டுத்தான் பேனர்கள் வைக்கப்பட வேண்டும்’ என்று கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார். கட்சிகளும் ஏற்றுக்கொண்டன.

இப்படி பல தரப்பினரும் இவரது நடவடிக்கைகளை வரவேற்றாலும், காவல் துறைக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்புகின்றன. காலை 8 மணிக்கு வருகிறவர்களை இரவு வரை ஓய்வு இல்லாமல் பணிபுரிய வைக்கிறார் என்பது பிரதான குற்றச்சாட்டு. டிராஃபிக்கிலும் அதிக நேரம் வரை போலீஸை நிறுத்தி பணிபுரிய வைக்கிறார் என்று புலம்புகிறார்கள். ஆளும் கட்சியினரும் இவர் மேல் காட்டமாக இருக்கிறார்கள். சமீபத்தில் பத்தரை மணிக்கு மேல் பார் நடத்திய ஒரு வார்டு செயலாளரை இவர் பிடித்துக்கொண்டு போய்விட, மாவட்ட அளவிலான பிரமுகர்கள் பேசியும் அவரை விடவில்லையாம். அதனால் இவரை எப்படியாவது மாற்ற முடியுமா என்று சந்தர்ப்பத்துக்காக காத்திருக்​கிறார்கள்.

கும்பகோணத்துக்கு சிலம்பரசன்... நாகைக்கு சிபிச்சக்கரவர்த்தி!

அடுத்தவர், நாகப்பட்டினம் டி.எஸ்.பி. சிபிச்​சக்கரவர்த்தி. இவரும் இளமையும் அதிரடியும் கொண்டவர்தான். இவர் டி.எஸ்.பி-யாக பொறுப்பேற்ற நேரத்தில் மாவட்டம் முழுவதும் குற்றச்செயல்கள் கொடிகட்டிப்பறந்தன. களத்தில் குதித்த சிபிச்சக்கரவர்த்தி, கஞ்சாவையும் கள்ளச் சாராயத்தையும் விரட்டி விரட்டி அழித்தார். பேருந்து நிலையத்தில் பரவியிருந்த விபசாரக் கும்பலையும் விரட்டினார்.

நாகையில் பொதுமக்கள் அதிகம் குற்றம்சாட்டுவது ஆட்டோக்காரர்கள் மீதுதான். அதற்கும் வைத்தார் ஆப்பு. ஆறு பேருக்கு மேல் ஏற்றிச் சென்றால், அந்த ஆட்டோ மீது வழக்கு. டிரைவர் இருக்கையில் ஆட்களை ஏற்றிச்

கும்பகோணத்துக்கு சிலம்பரசன்... நாகைக்கு சிபிச்சக்கரவர்த்தி!

சென்றால் வழக்கு. குறிப்பிடாத இடங்​களில் திடீரென்று நிறுத்துவது, தாறுமாறாக ஓட்டுவது என்று எல்லாவற்றையும் சட்ட விதிகளைக் காட்டி அடக்கினார்.

இப்படி இவர் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டுவந்தால், இவர் மீது விரோ​தம் கொண்ட அரசி​யல் புள்ளிகள் சும்மா இருப்பார்களா? வேதாரண்​யத்துக்கு டி.எஸ்.பி-யாக தூக்கியடிக்க வைத்தார்கள். அதனால், நாகையில் சமூக விரோதிகள் துளிர்விட்டனர்.

இந்த நிலையில் நாகை எஸ்.பி-யாக பொறுப்பேற்ற ராம​கிருஷ்ணன், சிபிச்சக்கரவர்த்தி செய்த வேலைகளைக் கேட்டு​விட்டு, அவரை மீண்டும் நாகைக்கு கொண்டுவந்தார். திரும்பவும் எல்லாம் கட்டுக்குள் வந்தது. பை பாஸ் சாலையில் சோதனையைத் தீவிரமாக்கி, கணக்கு வழக்கு இல்லாமல் கடத்திச் செல்லப்படும் காரைக்கால் சரக்கை முற்றிலும் தடுத்துவிட்டார். குடித்துவிட்டு வாகனம் ஒட்டுகிறவர்களைப் பிடித்து அபராதம் விதித்தார். இதனால் அடிக்கடி நடந்த சாலை விபத்துக்கள் இப்போது குறைந்திருக்கிறது.

டாஸ்மாக் பார்களையும் 10 மணிக்கு மேல் திறந்திருக்கக் கூடாது என்பது இவரது  கறார் உத்தரவு. சிபிச்சக்கரவர்த்தி வைத்​திருக்கும் அதிரடிப் படையினர், அவரின் கண் அசைவைப் பார்த்தே களத்தில் இறங்கி அடித்து நொறுக்கிவிடுவார்கள். இந்த அடிக்கு பயந்தே இங்கு அடிக்கடி நடக்கும் மோதல்கள், இப்போது நடப்பது இல்லை. இதைப் பார்த்த மாவட்ட அமைச்சர் ஜெயபால் அதிகாரிகளைக் கூப்பிட்டு, 'இப்ப மட்டும் எப்படிய்யா எல்லாம் சரியா இருக்கு?’ என்று கேட்டாராம்.

கலக்குங்க காவல் அதிகாரிகளே!

- கரு.முத்து