அச்சுறுத்தும் அம்மை.. அலறும் அரியலூர்
##~## |

அம்மை நோய்க்கு இருவர் பலியாகி இருப்பதோடு, 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டும் இருப்பதால் யாருக்கு என்ன ஆகுமோ என்று அச்சத்தில் உறைந்திருக்கின்றனர் வெளிப்பிரிங்கியம் ஊர் மக்கள்.
அரியலூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கிராமம். வேப்பிலையும் திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சள் வேட்டி சேலைகளுமாக தென்பட்டனர். பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10 கிராமத்திலும் இதே நிலைதான்.
அம்மை நோய்க்குப் பலியான இளம்பெண் சத்யாவின் தந்தை பழனிச்சாமியை சந்தித்தோம். ''என் மூத்த பொண்ணை கோயமுத்தூர்ல கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டேன். இன்னொரு பொண்ணுதான் சத்யா. எனக்குப் படிப்பறிவு கிடையாது. கொஞ்ச மாதத்துக்கு முன்பு என்னோட மனைவி இறந்து போச்சு. சரியா பொழைப்பைப் பாக்காததால கடனும் அதிகமாயிடுச்சு. அப்பத்தான் என் சத்யா, 'இப்படியே இருந்தா ஒண்ணும் பண்ண முடியாதுப்பா. வெளியூர்ல வேலை தேடி ரெண்டு பேரும் சேர்ந்து கடனை அடைச்சிடலாம்’னு சொல்லுச்சு. அது கோயமுத்தூர்ல ஜவுளிகடையில வேலைக்குப் போச்சு. நான் கேரளாவுல கட்டட வேலைக்குப் போனேன். கடனையும் அடைச்சோம். இந்த நேரத்தில்தான் சத்யா திடீர்னு போன் செஞ்சு, 'ஊர்ல திருவிழா வருது. 10 நாளுக்கு முன்னாடியே போகலாம்’னு சொல்லுச்சு. இங்க வந்து ஃப்ரண்டுகளோட சேர்ந்து கோயிலுக்குப் போறதும் விளையாடறதுமா சந்தோஷமா இருந்தது.

10 நாட்களுக்கு முன்னாடி சத்யாவுக்கு ஜுரம் வந்திருச்சு. அப்புறம் கட்டி கிளம்புச்சு. ஊர்மக்கள் பாத்துட்டு 'அம்மை போட்டுருக்கு. டாக்டர்கிட்ட போய் ஊசி போடாத’னு சொல்லி வீட்டு வாசல்ல வேப்பிலை சொருகி வெச்சாங்க. வீடு முழுக்க மஞ்சள் தெளிச்சாங்க. ரெண்டு நாள்ல சாப்பாடு சுத்தமா தள்ளிடுச்சு. பின்பு நடுக்கம் அதிகமாயிருச்சு. ஊர் மக்கள் டாக்டர்கிட்ட கொண்டு போனா தெய்வ

குத்தமாகிடும்னு சொல்லவே, நானும் பயந்துபோய் மாரியம்மன் கோயில்ல வேப்பிலை போட்டு படுக்கவெச்சி மஞ்சத் தண்ணிய தெளிச்சோம். ரெண்டு மணி நேரத்துல என் பொண்ணு இறந்துபோச்சு. என் குடும்பக் குலவிளக்கையே அழிச்சிட்டேன்'' தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த மதிவாணனைச் சந்தித்தோம். ''2008-ல் என்னோட மகன் ரவிக்கு அம்மை நோய் தாக்குச்சு. ரொம்ப சீரியஸா இருந்துதான் பொழைச்சு வந்தான். இந்த வருடம் அவனோட மகன் சூர்யாவுக்கு அம்மை தாக்குச்சு. என்னையும் தாக்கிடுச்சு. கட்டி வளர ஆரம்பிச்சு வெயில் ஏற ஏற ஒவ்வொரு கட்டியும் உடையும். அப்ப ரணவேதனையில செத்துப்போயிடலாம்னு தோணும். வீட்டுக்குத் தெரியாம மாத்திரை, மருந்து வாங்கிச் சாப்பிட்டதாலதான் இப்ப உயிரோட இருக்கேன். ஊர் மக்கள் கூடி கூட்டம் போட்டோம். அதில் ஒரு பொண்ணு மேல சாமி வந்து, 'மூன்று வருஷமா என்ன யாரும் கண்டுக்கல. திருவிழா, பால் குடம்னு எடுத்து என்னைக் குளிரவெக்கல. அதனாலதான் என்

கோபத்தை வெளிப்படுத்துறேன்’னு சொல்லுச்சு. அதனால பால்குடம் எடுத்து திருவிழா நடத்தவும் முடிவு எடுத்திருக்கோம்'' என்றார் மதிவாணன்.
சமூக ஆர்வலரான விநாயகமூர்த்தி, ''போன வருஷம் மட்டும் ஐந்து பேர் இறந்தாங்க. இந்த முறை கத்தரி வெயிலே ஆரம்பிக்கல. அதுக்குள்ள ரெண்டு பேர். இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாகும்போல இருக்கு. அரியலூர் மாவட்டத்தில் மட்டும் எட்டு சிமென்ட் பேக்டரிகள் இருக்கு. அதற்கு சொந்தமான 140-க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு குவாரி இருக்கு. சுண்ணாம்புக் கல்லை வெட்டும்போது பல கதிர்களை வெளிப்பட்டு மனிதர்களைத் தாக்குவதால் அம்மை, தோல் நோய், புற்றுநோய்னு பல வியாதிகள் ஏற்படுது. வெளிப¢பிரிங்கியம், நெரிஞ்சித் துறை, புதுப¢பாளையம¢, மண்ணொளி, பெரியநாகலூர், காட்டுப்பிரிங்கம், முனியங்குறிச்சி, கல்லுக்குடி என பத்து பஞ்சாயத்தில 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வருடத்துக்கு முன்பு நானும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டேன். எங்க வீட்டில், 'டாக்டர்கிட்ட காட்டாதீங்க. தெய்வகுத்தாமாகிடும்’னு சொன்னாங்க. ஆனா வீட்டுக்குத் தெரியாம டாக்டர்கிட்ட பார்த்துக் குணப்படுத்தினேன். எங்க ஊரில் படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகம். மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கணும்'' என்றார்.
சுகாதாரத் துறை அமைச்சர் வீரமணியைச் சந்தித்தோம். ''இதுவரைக்கும் என்னோட கவனத்துக்கு வரல. இப்பவே அந்தக் கிராமங்களுக்கு மருத்துவக் குழுவை அனுப்புவதோடு அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடுகிறேன். நோய் தொடராமல் பாத்துக்கொள்கிறோம்'' என்று உறுதியளித்தார்.
அமைச்சர் சொன்னபடியே சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தக் கிராமங்களுக்கு விரைந்துவந்து, யார் யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துச் சென்றுள்ளனர். அடுத்து, ஒவ்வொரு ஊரிலும் மருத்துவ முகாம் நடத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
உடனடி நடவடிக்கைக்கு நன்றி!
- எம்.ராமசாமி