ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

இருண்டுபோன கண்கள்... குறி சொன்ன இளம்பெண்.. காணாமல் போன ஆதிக் கல்..

உடல் முழுக்க ரத்தக் கீறல்கள்

##~##
இருண்டுபோன கண்கள்... குறி சொன்ன இளம்பெண்.. காணாமல் போன ஆதிக் கல்..

தாவது பொருளைக் காணவில்லை என்றால் சாமியிடம் முறையிடலாம். ஆனால், சாமியையே காணவில்லை என்றால், யாரிடம் முறையிடுவது? 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள வேம்பனேரி ஸ்ரீஐயனாரப்பன் கோயில் மிகப்பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் நடக்கும் சித்திரைத் திருவிழாவுக்கு பல மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். கோயிலின் மூலவர், உள்ளங்கை அளவுக்கு உருண்டையாக இருக்கும் கல். இந்தக் கல்லைத்தான் இரண்டு வருடங்களாக காணவில்லை. இதனால், கோயில் திருவிழாவை நடத்தாமல், கல்லைத் தேடி அலைகிறார்கள். அதையட்டி பல வினோத சம்பவங்களும் நடப்பதால், சுற்று வட்டார ஏரியாவே பரபரப்பாக இருக்கிறது.    

கோயில் பூசாரிகளில் ஒருவரான வெள்ளிவேல், ''இந்தக் கோயில் ஏழு ஊர்களுக்குச் சொந்தமானது. இந்தக் கோயிலுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வரும். அதனால், அரசே இந்தக் கோயிலை எடுத்துக்கொண்டது. வெடிக்கண்ணன் பூசாரி, கூழப்பூசாரி, குஞ்சான் பூசாரி என மூன்று குடும்ப வகையறாக்கள் கொண்ட 10-க்கும் மேற்பட்ட பூசாரிகள் பூசை செய்கிறோம். இந்தக் கோயிலின் கருவறையில் மூலவராக இருக்கும் கல்லை ஆதிக்கல் என்போம். இது நீலம், பச்சை கலந்த நிறத்தில் இருக்கும். தங்கம், வைரம், வைடூரியம் போன்று விலை உயர்ந்தது.

இருண்டுபோன கண்கள்... குறி சொன்ன இளம்பெண்.. காணாமல் போன ஆதிக் கல்..

அண்ணாமலை பூசாரி முறையின்போதுதான் இந்தக் கல் காணாமல் போனது. தர்ம​கர்த்தா ரத்தினவேல் சொன்னதன் பேரில் அண்ணாமலை, கோபால் ஆகிய பூசாரிகள்தான் கல்லை எடுத்திருப்பார்கள். எங்களை பழி​வாங்கும் நோக்கத்தில்தான் கல்லை எடுத்திருக்​கிறார்கள். விசாரணையில், கல்லை எடுத்ததாக கோபால் ஒப்புக்கொண்டார். கல்லை எடுத்துத் தருவதாகச் சொன்னவர் நெஞ்சு வலிக்கிறது என்று, மருத்துவமனையில் சேர்ந்தார். அவர்கள் அனைவரும் அ.தி.மு.க-காரர்கள். அந்த செல்வாக்கில் காவல் துறையின் விசாரணையில் இருந்து தப்பித்துக் கொண்டனர். காவல் துறையும் கண்டுகொள்ளவில்லை.

போன வாரம் சென்னையில் இருந்து வந்த 12 வயதுச் சிறுமி, 'கோயில் கிணற்றில் சாமி இருப்பதாக

இருண்டுபோன கண்கள்... குறி சொன்ன இளம்பெண்.. காணாமல் போன ஆதிக் கல்..

கனவு கண்டேன்’ என்றாள். உடனே, நாங்கள் மூன்று மோட்டார் பம்ப் செட்டுகளை வைத்து விடிய விடிய தண்ணியை இறைத்தோம். கிணற்றுக்குள் இறங்கி பார்த்தால், எங்கள் கண்கள் இருண்டு விட்டன. எங்கள் உடம்பு முழுக்க ரத்தக் கீறல்கள். ஆனாலும் சாமியைக் கண்டு​பிடிக்க முடியவில்லை'' என்றார் பரிதாபமாக.  

இன்னொரு பூசாரியான அண்ணா​மலையிடம் பேசினோம். ''என்னுடைய முறையில்தான் சிலை காணாமல் போனது என்பது உண்மை. ஆனால், நான் சிலையை எடுக்கவில்லை. கல்யாண பூசை செய்ய கோபால் பூசாரி கருவறைக்குள் சென்றார். அதற்கு பிறகுதான் அந்தக் கல்லை காணவில்லை. உடனே போலீஸில் புகார் கொடுத்தோம். நான் தனிப்பட்ட முறையில் 15 ஆயிரம் வரை செலவுசெய்து, வயதுக்கு வராத ஏழு கன்னிப் பெண்களை பள்ளியில் இருந்து அழைத்துவந்து, கிணற்றடியில் மஞ்சள் நீரில் குளிப்பாட்டி, புதுப்பாவாடை சட்டை கொடுத்தேன். உடுக்கை அடித்ததும் ஏழு பெண்களும் சாமி வருவதைப்போல தலையை ஆட்டினர். உடனே, யாரோ சாமியின் வாயை கட்டிவிட்டனர்'' என்று வருத்தப்பட்டார்.  

பூசாரி கோபாலிடம் பேசியபோது, ''அந்தக் கல் எங்கேயும் போகவில்லை. அங்கேயேதான் இருக்கிறது. கோயில் நிலத்தை ஏலம் விட தர்மகர்த்தா முடிவு செய்தார். அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சில பூசாரிகள் செய்யும் சதி வேலைதான் இது. கருவறை இருட்டாக இருப்பதால், பூசாரிகளுக்கே கல் சரியாக தெரியாது. அவர்கள் சொல்வதைபோல், அது விலை உயர்ந்த கல் கிடையாது. சாதாரணக் கல்தான்'' என்றார் அலட்டிக்கொள்ளாமல்.

எடப்பாடி எஸ்.ஐ-யான நந்தகுமார், ''பூசாரிகளுக்குள் இரண்டு கோஷ்டிகள் இருக்கின்றன. ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்கிறார்கள். பூசாரி​களைத் தவிர அந்தக் கல்லை வெளியாட்கள் யாரும் எடுக்க வாய்ப்பு இல்லை. கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவோம். மற்றபடி இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை'' என்றார்.

அடப்போங்கப்பா!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்