வைஸ் சேர்மன் VS எம்.எல்.ஏ.
##~## |

''புரட்சித் தலைவி அம்மாவை தலைவியாகக்கொண்ட எங்கள் கட்சியில், பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. எங்களைச் சுதந்திரமாக செயல்படவிடாமல் ரௌடிகளை வைத்து மிரட்டுகிறார். உள்ளாட்சி டெண்டர்களை மொத்தமாக வாரிச்சுருட்டிக் கொண்டு போகிறார்'' என்று, மதுரை மேற்கு ஒன்றிய வைஸ் சேர்மனும் நான்கு பெண் கவுன்சிலர்களும் புகாரைக் கிளப்ப, மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான தமிழரசனின் தலை ஏகத்துக்கும் உருளுகிறது.
ஒரே கட்சிக்குள் ஏன் இந்த குஸ்தி? யூனியன் வைஸ் சேர்மன் கலைவாணியிடம் கேட்டோம். ''நான் 18 வருடங்களா அ.தி.மு.க-வில் இருக்கேன். எம்.ஏ. பட்டதாரியான நான், அம்மாவைப் பின்பற்றி மக்களுக்கு நல்லது செய்யணும்னுதான் அரசியலுக்கு வந்தேன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலரா ஜெயிச்ச எனக்கு, சேர்மன் ஆகுறதுக்கான வாய்ப்பு அனைத்தும் இருந்தது. ஆனா, படிச்சவங்க சேர்மனா இருந்தா நமக்கு அடங்கிப்போக மாட்டாங்கன்னு நினைச்ச எம்.எல்.ஏ. தமிழரசன், கையெழுத்தே சரியா போடத் தெரியாத பழனியம்மாளை சேர்மனாக்கி, என்னை துணை சேர்மன் ஆக்கினார். கட்சி முடிவை விமர்சிக்கக் கூடாதுனு ஏத்துகிட்டேன். கிடைச்ச பதவியை வெச்சு, நமக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்லதை செய்வோம்னு நினைச்சேன். ஆனா, நானும் சரி, என்னை மாதிரி ஜெயிச்ச மற்ற பெண் கவுன்சிலர்களும் சரி, மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியலை. காரணம், எம்.எல்.ஏ. தமிழரசன்தான்.

மேற்கு யூனியனுக்குள்ளே மூன்று சட்டசபைத் தொகுதிகள் வந்தாலும், தமிழரசனுக்குதான் அதிகமான கவுன்சில்கள் வருது. ஆனா, தன்னோட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு பைசாவைக்கூட, ஒன்றியத்துக்கு செலவு பண்றது இல்லை. சரி போகுதுனு இருந்தா, கவுன்சிலர்களுக்கான பொது நிதியிலயும் கை வைக்கிறாரு. எந்த டெண்டரா இருந்தாலும், அவரு சொல்ற ஆளுங்களுக்குதான் கொடுக்கணும்னு சொல்றாரு. எங்களோட நிதியை எங்களுக்குத் தெரிஞ்ச நல்ல கான்ட்ராக்டருக்குக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டோம். அப்பதான் வேலை சிறப்பா இருக்கும். ஆனா, எம்.எல்.ஏ-வோ, தன்னோட பினாமிகளை கான்ட்ராக்டரா அனுப்பி, அநியாயம் பண்றார்.
கடந்த 18-ம் தேதி அப்படித்தான், யூனியன் பொது நிதியில் இருந்து டெண்டர் விடப்பட்டது. எம்.எல்.ஏ. ஆளுங்க திமுதிமுனு நுழைஞ்சு, 'எங்களைத் தவிர வேற யாரும் டெண்டர் போடக் கூடாது’னு, மத்த கான்ட்ராக்டர்களை எல்லாம் வெளியே அனுப்பிட்டாங்க. ஏன்னு கேட்ட என்னையும் மற்ற பெண் கவுன்சிலர்களையும் அசிங்கமா திட்டினாங்க. 'பொட்டச்சிங்க வாயைப் பொத்திக்கிட்டு கம்முனு இருக்கணும். மத்த விஷயத்தில் எல்லாம் தலையிடக் கூடாது. எம்.எல்.ஏ-வை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது. பேசினா, ஆளைக் காலி பண்ணிடுவோம்’னு மிரட்டினாங்க.
யூனியன் அதிகாரிகள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க. நாங்க சொன்னதுக்கு அப்புறம்தான் போலீஸுக்குத் தகவல் கொடுத்தாங்க. இந்தப் பிரச்னையில் சம்பந்தமே இல்லாத என் தம்பி செந்தில் மேல, எம்.எல்.ஏ. ஆளுங்க பொய்ப் புகார் கொடுத்துட்டாங்க. நாங்களும் புகார் கொடுத்தோம். ஆனா, நடவடிக்கை எடுக்காம, 'சமாதானமாப் போங்க’னு, தல்லாகுளம் போலீஸ் அதிகாரிங்க எங்களுக்கு அட்வைஸ் செஞ்சாங்க.
பெண்கள் நிம்மதியாகவும் தன்னம்பிக்கையோடும் வாழணும்னு எத்தனையோ திட்டங்களையும் சட்டங்களையும் புரட்சித் தலைவி அம்மா போட்டுக்கிட்டு இருக்கும்போது, மதுரையில எம்.எல்.ஏ. ஒருத்தரே ஆளுங்களை அனுப்பி, கட்சியைச் சேர்ந்த பெண்களிடம் அராஜகம் செய்வதை என்னன்னு சொல்றது? இப்படியே தொடர்ந்து டார்ச்சர் பண்ணிட்டு இருந்தாங்கன்னா, நாங்க எல்லோரும் ராஜினாமா பண்றதைத் தவிர வேறு வழியில்லை'' என்றார் நொந்தபடி. மாணிக்கவள்ளி, கருப்பாயி, கனி ராஜேந்திரன், கொடியரசி ஆகிய நான்கு ஒன்றிய கவுன்சிலர்களும் அதை ஆமோதித்தனர்.
இதுசம்பந்தமாக, எம்.எல்.ஏ-வான தமிழரசனிடம் பேசினோம். ''என்னைப் பத்தி கட்சிக்காரங்களுக்குத் தெரியும். கட்சிக்காரங்களுக்கு தீபாவளி, பொங்கல்னு உதவி செய்றவன். என் தொகுதியில் இருக்குற 421 கிளைச் செயலாளர்களுக்கும் பணம் பட்டுவாடா செய்தவன் நான். என்னைப் போய், யூனியன் ஃபண்ட்டில் கை வைக்கிறேன்னு சொல்றதெல்லாம் அநியாயம். ஆரம்பத்திலேயே, தன்னை சேர்மன் ஆக்கலைனு அந்தம்மாவுக்கு கோபம். கட்சிக்காரர் மனைவியைத்தான் நாங்க சேர்மன் ஆக்கினோம். அவங்க அமைதியானவங்க. ஆனா, வைஸ் சேர்மன் தன்னை பெரிய மகாராணினு நினச்சுக்கிறாங்க. சமீபத்தில், தமிழ்நாட்டில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், காவிரி தீர்ப்பை அரசு கெஜட்டில் கொண்டுவர பாடுபட்ட அம்மாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றினாங்க. இதில் எதிர்க் கட்சிக்காரங்ககூட கையெழுத்துப் போட்டிருக்காங்க. ஆனா, மேற்கு ஒன்றியத்தில் கொண்டுவந்த தீர்மானத்தில், வைஸ் சேர்மன் கையெழுத்துப் போடலை. அம்மாவுக்கு எதிரா இருக்குற இவங்களை எப்படி கட்சி விசுவாசினு ஏத்துக்க முடியும்.
அவங்க கை காட்டுற கான்ட்ராக்டருங்க எல்லோரும் சரியில்லாதவங்க. அதனாலதான், டெண்டர் விஷயத்தில் அவங்களுக்கு எதிரா நடந்துக்கிட்டேன். அன்னைக்கு நடந்த சம்பவத்தில்கூட, வைஸ் சேர்மனோட தம்பி, ஒரு கான்ட்ராக்டரை அடிச்சிருக்காரு. அதனால்தான் அவர் புகார் செஞ்சாரு. ஆனா, இவங்களோ, அசிங்கமா திட்டினதா பொய் புகார் கொடுத்திருக்காங்க. சீக்கிரமே அவங்களை கட்சியை விட்டுத் தூக்குறதுக்கு ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கோம்'' என்றார்.
இப்போது இந்தப் பிரச்னை ஓ.பன்னீர்செல்வத்திடம் பஞ்சாயத்துக்குப் போயுள்ளது. தீர்ப்பு என்னவோ?
- செ.சல்மான்
படங்கள்: பா.காளிமுத்து