ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா?

மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 1ப.திருமாவேலன்

##~##

ந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கை​யின் இறையாண்மையைக் காப்பாற்று​வதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. 

இலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா? அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா? என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமைபெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது. இந்த நிலைப்பாடு அவர்களது கட்சி அறிவுஜீவிகளின் விருப்பம் சார்ந்ததும் படிப்பு சார்ந்ததும். ஆனால், தனித் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்பவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் விமர்சனம், அபத்தமானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். கடந்தகால வரலாற்றின் சூழ்ச்சிகள் எதையும் உள்வாங்கிக்கொள்ளாத தன்மையும் கொண்டது.

தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா?

''இன்றுள்ள ஏகாதிபத்தியம் கோலோச்சும் உலகச் சூழலில், அது வளரும் நாடுகளைத் துண்டாடச் செய்யும் முயற்சிகளையும், தந்திரங்​களையும் கணக்கில் எடுத்ததாக நிலைப்பாடு அமைய வேண்டும்'' என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி சொல்கிறார். ஒன்றுபட்ட இலங்கையில் இருந்து தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனித் தமிழீழம் அமைப்​பதை எந்த ஏகாதிபத்திய நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள்​தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஏகாதிபத்தியம் என்று வாசுகி சொல்வது, அமெரிக்க ஏகாதிபத்தியமாக மட்டுமே இருக்கும். மறந்தும் அவர்கள் சீனாவை ஏகாதிபத்திய நாடாகச் சொல்ல மாட்டார்கள். தலைக்கு ஒரு ஷாம்பூ; தாடிக்கு ஒரு ஷாம்பூ போடுவது சிலரது வழக்கம்!

தனித் தமிழீழத்தை அமைதி வழியில் முன்மொழிந்தவர் ஈழத் தந்தை செல்வா. அமைதி வழியில் அது சாத்தியம் இல்லை என்று உணர்ந்து ஆயுதம் தூக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இவர்கள் எந்த சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார்களோ, அவர்களுக்குத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது. ஆதரவு தந்தது. ஏகாதிபத்தியக் குணாசம்சத்தை சிங்களத் தலைவர்களுக்கு ஊட்டி வளர்த்தது. பேரினவாத எண்ணம் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களுக்குச் சாதகமானதைச் செய்துகொடுப்பதன் மூலமாக இலங்கையை கபளீகரம் செய்வதே ஏகாதிபத்தியங்களின் எண்ணமாக மாறியது.

முதலில் இதை பிரிட்டன் செய்தது. பிறகு அதை அமெரிக்கா பின்பற்றியது.

திரிகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம்தான் இலங்கையைப் பற்றி ஏகாதிபத்தியங்கள் அதிகம் கவலைப்படக் காரணம். ஆசியாவின் ராணுவ ரீதியான முக்கியத்துவத்தை இந்த இடம் தீர்மானித்தது. இதை கண்டுகொண்ட பிரிட்டன், 1947-ல் இலங்கைக்கு விடுதலை கொடுத்தாலும், தன்னை ஆதரிக்கும் ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியது. முதல் 10 ஆண்டுகள் (1948-58) பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை ஆட்சியாளர்கள் எடுத்தனர். அதன்பிறகு, பிரிட்டனை கழற்றிவிட்டுவிட்டு கம்யூனிஸ்ட் ஆதரவு ஆட்சி (1956-1965) அமைந்தது. லேசான அமெரிக்கச் சார்பு 1970-ல் தொடங்கியது. அது வளரவில்லை. 1977-ல் கே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி, அமெரிக்காவுக்கு முழு வாசலை திறந்துவிட்டது. 1994 வரை பிரேமதாசா அதைத் தொடர்ந்தார். சந்திரிகா குமாரதுங்காவின் காலம், பல்வேறு நாடுகளை அனுசரித்துப்போவதாக இருந்தது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா அரவணைப்பாளராக அடுத்து வந்த ரணில் விக்கிரமசிங்கே இருந்தார். 2005-க்குப் பிறகான ராஜபக்ஷேவோ சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். அதற்காக அமெரிக்க உதவிகளை புறந்தள்ளிவிடவில்லை, இன்றுவரை!

இதில், 1977-ம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்தது அமெரிக்காவே தவிர வேறுநாடு அல்ல. இலங்கையில் நடந்தது ஒரு சிறுபான்மைத் தமிழ் இனத்​துக்கும் சிங்களப் பேரினவாத இனத்துக்குத் துணைபுரிந்த ஏகாதிபத்தியங்களுக்கும் நடந்த போர் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஈழத் தமிழருக்கு சரியான தீர்வை யாரும் முன்மொழிய முடியும். இதை ஏற்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இல்லை போலும்!

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததால், தமிழருக்கு ஆதரவாக, தமிழீழத்துக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த நாடு

தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா?

மாறிவிட்டது என்று அடையாளப்படுத்துவது அரசியல் புரியாத சிலரின் குருட்டுச் சிந்தனை. அமெரிக்கா ஆதரிப்பதாலேயே எந்த நல்ல லட்சியமும் மோசமானதாக ஆகிவிடும் என்று நினைப்பதும் அறிவு நாணயமற்றது.

1983... சிங்களப் பேரினவாதத்​தின் கொலைகாரப் படலம் ஆரம்பம். 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகை​யில் பயங்கரவாதிகள் நடந்து​கொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இனக் கலவரமாகும்’ என்று, அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கையில் கூறியது. இதற்குக் காரணம் அமெரிக்கச் சார்பு அமைப்பான 'ஆசியனில்’ இலங்கை அதற்குமுன்தான் சேர்ந்திருந்தது. ஜெயவர்த்தனா பாகிஸ்தானுக்கும், அவரது சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கும் சென்றனர். 2009 பச்சைப் படுகொலையில் அங்கம் வகித்த நாடுகள்தான் இவை. அன்று முதல் ஆதிக்க எண்ணம் கொண்ட நாடுகள் அனைத்துமே இலங்கையின் பக்கம் நின்றன.

சோவியத் சார்பானவராக இருந்த இந்தியப் பிரதமர் இந்திரா, இந்தக் காலகட்டத்தில் மரணம் அடைகிறார். அதுவரை இந்திரா காந்திக்கு தராத முக்கியத்துவத்தை ராஜீவுக்கு அமெரிக்கா தந்தது. இலங்கையை இழுத்துவந்து இந்தியாவின் கையில் ஒப்படைப்​பதும், சோவியத் சார்பான இந்தியாவை அதனிடம் இருந்து நகர்த்து​வதும் அமெரிக்காவின் தந்திரம். எனவேதான் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஆதரித்த முதல் அறிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்தது. ராஜீவ் கையெழுத்துப் போட்ட மூன்று மணி நேரத்தில் ரீகன் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். 'ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை எமது கொள்கைகளும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒரே நேர்கோட்டில் உள்ளன என்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக உணர்ந்து திருப்தி அடைந்துள்ளோம்’ என்று, அமெரிக்க ராஜாங்க துணை உதவிச் செயலாளர் ராபர்ட் பெக் பேசினார். இந்த ஒப்பந்தத்தை அன்று 'ஏகாதிபத்தியமாக’ இருந்த சோவியத் ஆதரித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொழியில் சொல்வதானால், ஏகாதி​பத்தியங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் நிராகரித்தது. தமிழர்கள் நிராகரித்தனர். 'இந்துமாக் கடலை பங்கிடுவது மட்டுமே இவர்​களது நோக்கம். இந்த நோக்கத்தை ஏற்க மாட்டோம்’ என்று 1987-ல் இந்தியாவுக்கும், 2005-ல் அமெரிக்​காவுக்கும் புலிகளும் ஈழத் தமிழர்​களும் தெளிவுப்படுத்தினர். அதனா​லேயே பழிவாங்கப்பட்டனர். எனவே, ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியில் ஈழத் தமிழனின் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்பதே உலகியல் அறிவு கொண்டவர் உணரவேண்டியது.

ராணுவம், படை உதவிகள் செய்துவந்த ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு 2004 சுனாமி, வெளிப்​படையாக வாசலைத் திறந்துவிட்டது. உதவி, கடன், முதலீடு என்ற பெயரால் கடன் கொடுத்து உள்ளே வந்தன அந்த நாடுகள். 'எங்களுக்கு 15 ஆயிரம் கோடி தேவை’ என்று இலங்கை அறிவித்தது. 14 ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. ஒரு தேசம், சுனாமியின் பெயரால் அன்றுதான் விற்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா போன்றவை பனத்தை அள்ளிக் கொடுத்தன. உலக வங்கியையும் சர்வதேச நிதி நிறுவனத்தையும் தடையின்றி பணம் தர உத்தரவிட்டது அமெரிக்கா. இதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களிடம் அடிபணியாததுதான். இனப் பிரச்னையை தீர்க்க நார்வே நாட்டை  வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியது அமெரிக்கா. புலிகளுக்கு அமெரிக்க ராஜங்க இணை அமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள் என்ன தெரியுமா?

'வன்முறையைக் கைவிட வேண்டும், தனிநாடு போராட்டத்தைக் கைவிட வேண்டும், இலங்கை முழுவதும் கொழும்பு அரசின் ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ - என்றது அமெரிக்கா. புலிகள் இதை ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை முறிந்ததும், இலங்கை அரசின் குரலை அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் எதிரொலித்தனர்.

அமெரிக்க ராணுவக் கல்லூரி அதிகாரிகள் 20 பேர் கொழும்புவுக்கு வந்தனர். கண்ணி வெடியை அகற்ற 26 பேர் வந்தனர். யு.எஸ்.எய்ட் என்ற அமைப்பு திரிகோணமலையிலும் அம்பாறையிலும் அலுவலகம் திறந்தது. அமெரிக்க ஏவுகனைக் கப்பல் ஓகானே டிடிஜி77 வந்தது. ஹெலிகாப்டர் தாங்கிச் செல்லும் நவீன ரக கரையோர ரோந்து கப்பல் வந்தது.

'புலிகள் தமது அரசியல் ஆயுதமாக வன்செயலைப் பயன்படுத்துவதை கைவிடச் செய்யும் அழுத்தமாக அவர்களை அமெரிக்கா தொடர்ந்து வேட்டையாடும்’ என்று, ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடேஜ் அறிவித்​தார். 'இந்த பிராந்தியத்தைச் சாராத சக்திகளை தேவையற்ற விதத்தில் முறையற்ற செல்வாக்குடன் இனப் பிரச்னைக்குள் தலையிட இடமளித்து, சமாதான நடவடிக்கைகளை குழப்பி வருகிறது இலங்கை அரசு’ என்று, புலிகள் எதிர் அறிக்கை வெளியிட்டனர். அதாவது, நார்வேவை வைத்து பேச்சுவார்த்தை நடத்திக்​கொண்டே சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்துக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றது.

2006 ஏப்ரல் மாதம், கனடா அரசு புலிகளைத் தடைசெய்தது. 2006 மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. இரண்டுமே அமெரிக்க நிர்பந்தத்தின் விளைவு (1997-ல், புலிகளை அமெரிக்கா தடைசெய்து விட்டது!). இலங்கை அரசு, புலிகள் இரண்டையும் ஒன்றாக வைத்து அமெரிக்கா சார்பில் நார்வே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததுமே, இஸ்ரேலின் கிபீர் விமானங்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குண்டுகள் போடத் தொடங்குகின்றன. நார்வே பேச்சு நடத்தும்; இஸ்ரேல் குண்டு போடும். இதைத்தான் 'அமெரிக்​காவின் அமைதியான முகம் நார்வே. கொடூரமான முகம் இஸ்ரேல்’ என்று பிரபாகரன் சொன்னார். இந்த இரண்டு முகங்களாலும் சிதைக்கப்பட்டதே ஈழத் தமிழ் முகம்.

2006 ஜனவரி 11-ம் நாள். கொழும்பு தொழில் வணிகக் கருத்தரங்கில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெடு பேசும்போது 'புலிகள் பழைய நினைப்பில் இலங்கைப் படையுடன் மோத வேண்டாம். இப்போது இலங்கையிடம் இருப்பது அமெரிக்காவில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ராணுவம். அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்கள் இலங்கைப் படை வசம் உள்ளன. போர் முனையில் புலிகள் படுகேவலமாகத் தோற்றுப்போவார்கள்’ என்று சொன்னது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியுமா, புரியுமா எனத் தெரியவில்லை!

- தொடரும்