நான்கு பெண்களைத் தின்ற தீ
##~## |
கோவையில் நான்கு உயிர்களைப் பஸ்பமாக்கி விட்டது தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து.
கோவை அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் அருகே உள்ள நான்கு தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில்தான் இப்படி ஒரு கோர விபத்து. தரைத் தளத்தில் கார் பார்க்கிங் மட்டுமே. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் ஆக்சிஸ் வங்கியும் மூன்றாவது தளத்தில் ஐசிஐசிஐ வங்கி, ஷேர்கான் நிறுவனம், டிராவல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன. நான்காவது தளத்தில் காப்பீட்டு நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனங்களில் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
25-ம் தேதி காலை 10.15 மணி. ஊழியர்கள் வந்து, தங்கள் பணிகளைத் தொடங்கினர். திடீரென, மூன்றாவது தளத்தில் உள்ள ஷேர்கான் நிறுவனத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது. என்ன காரணம் என யூகிப்பதற்குள் தளம் முழுவதும் மளமளவென தீ. இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் உள்ள நிறுவனங்களும் நான்காவது தளத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனத்திலும் தீ பரவியது. உடனே, தீயணைப்புப் படையினருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குமுன் பொதுமக்களே மீட்புப் பணியை தொடங்கினர். அதன்பிறகுதான், ஆம்புலன்ஸும் தீயணைப்பு வாகனங்களும் வந்தன.

கோவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து 15 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் குவிந்தனர். உள்ளே ஏராளமானோர் சிக்கியிருந்ததால், ராட்சத கிரேன் மற்றும் ஏணிகள் மூலம் மீட்புப் பணி நடந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகே, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ கட்டுக்குள் வந்த பிறகு, தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோதுதான், மூன்றாவது தளத்தில் இருந்த பங்கு வர்த்தக ஊழியர் ஸ்ரீலட்சுமி, ஐசிஐசிஐ வங்கி ரிசப்ஷனிஸ்ட் கீர்த்தனா, துப்புரவு ஊழியர்கள் மார்க்ரெட் மேரி, விஜயலட்சுமி ஆகியோர் தீயில் கருகிக் கிடந்தது தெரிந்தது.

தீ வேகமாகப் பரவியதால் பலர் மொட்டை மாடிக்கு ஓடினர். அவர்களை மீட்க கோவை விமானப்

படை பயிற்சி முகாமில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ஆனால், புகை மூட்டம் அதிகளவில் இருந்ததால் ஹெலிகாப்டரை மீட்புப் பணிக்குப் பயன்படுத்த முடியவில்லை.
கோவை கோட்ட தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சாகுல் ஹமீதிடம் பேசினோம். ''இரண்டு மணி நேரம் போராடி 200 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு ஊழியர்கள் விரைவாக செயல்பட்டதால், அதிக ஊழியர்களைக் காப்பாற்ற முடிந்தது. மூச்சுத் திணறல் அதிகமாக இருந்ததால், செயற்கை சுவாசக் கருவி அணிந்துதான் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும்போது பெற வேண்டிய தீத்தடுப்பு பாதுகாப்புச் சான்றிதழை அந்தக் கட்டடத்துக்குப் பெறவில்லை. சான்றிதழ் பெற்றிருந்தால், அனைத்து ஊழியர்களுக்கும் அவசர காலத்தில் தப்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளித்து இருப்போம்'' என்றார்.
''மின்கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என சந்தேகிக்கிறோம்'' என்கிறது போலீஸ் தரப்பு. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் பேசினோம். ''விபத்துக்குள்ளான கட்டடம் முழுவதும் குளிரூட்டப்பட்டு இருந்ததால், அதில் ஜன்னல் திறப்பு இல்லை. தீ விபத்து ஏற்பட்டவுடன் புகை வெளியேற வழியில்லாமல், கட்டடத்தின் உள்பகுதியில் சூழ்ந்துவிட்டது. இதில் ஊழியர்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர். அவசர வழி இல்லாததால் பெண் ஊழியர்கள் நான்கு பேர் மூச்சுத் திணறி மயங்கி, தீயில் சிக்கி இறந்துள்ளனர்'' என்றார்.
பாதுகாப்பு இல்லாத கட்டட அமைப்பு, புகை வெளியேற வழியில்லாத நிலைமை, தீத்தடுப்பு பாதுகாப்புச் சான்றிதழ் வாங்காதது... போன்ற பல விதிமீறல்கள்தான் சிலரின் விதியோடு விளையாடிவிட்டது. இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் அக்கறையுடன் செயல்படுவார்களா?
- ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்