மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

கண்களில் வழியும் துயரம்!  

##~##

யிர் தப்பியவர்கள் புகலிடம் தேடி அகதிகளாக உல​கெங்கும் அலைந்தனர்.  அந்த இனஅழிவின் காரணமாக ஆர்மீனியர்கள் சென்னைக்கும் வந்திருக்கிறார்கள். யூதப் படுகொலை போல ஆர்மீனிய இனஅழிப்பு பொதுமக்களின் கவனத்துக்கு உள்ளாகவே இல்லை. இன்று வரை துருக்கி அந்த இனப்படுகொலையை ஒப்புக்கொள்ளவே இல்லை. ஒவ்வோர் ஆர்மீனியன் கண்ணிலும் இனப்​படுகொலையின் துயரம் பீறிடுகிறது.

ஆர்மீனிய இனஅழிப்பு வரலாறு துயரமும் வலியும் நிரம்பியது. உலகின் பெரும் பேரரசுகளுள் ஒன்று ஒட்டோமானியா எனும் துருக்கி. மத்திய ஆசியாவில் 600 ஆண்டுகள் ஏகபோக ஆட்சி செய்த இந்தப் பேரரசு, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் தன் ஆதிக்கத்தைப் பரப்பியது. ஆனால், 19-ம் நூற்றாண்டில் அதன் வலிமை குறைந்து புகழ் மங்கத் தொடங்கியது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டோமானியப் பேரரசு வலிமை குன்றிய தருணத்தில், முதலாம் உலகப் போர் ஏற்பட்டது. அதனால், துருக்கி ஜெர்மனியுடன் இணைந்து போரில் ஈடுபட்டது. அந்தப் போரின் வழியே தங்களின் கடந்த காலப் பெருமைகளை மறுபடி அடைய முயன்றது ஓட்டோமானியா. ஆனால், போரில் தோற்ற காரணத்தால் அதன் எண்ணம் தடைபட்டது. அப்போது, ஒட்டோமானியாவின் கோபத்துக்கு இலக்காக அமைந்தது ஆர்மீனிய சமூகம். மத்திய ஆசியாவில் ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் ஆர்மீனியா அமைந்துள்ளது. 16-ம் நூற்றாண்டில் அது ஓட்டோமானியப் பேரரசின் வசமானது. துருக்கி இஸ்லாமிய அரசு என்பதால், ஆர்மீனியர்கள் மீது மத வரி விதித்தது. அதைச் செலுத்திவிட்டு அவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. இது, ஆர்மீனியர்களுக்கு ஏற்புடைய கருத்தாக இல்லை. தாங்கள் இரண்டாம்பட்சப் பிரஜைகளாக நடத்தப்படும் ஆத்திரம், ஆர்மீனியர்களை உசுப்பிவிட்டது. ஒட்டோமானியாவிடமிருந்து ஆர்மீனியா விடுபட வேண்டும் என்ற சுதந்திர எழுச்சி உருவாகத் தொடங்கியது. அதற்காக, ஆர்மீனியா ரஷ்யாவின் துணையை நாடியது. அப்படியும் ஆர்மீனியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து, துருக்கிய அரசால் உருவான உள்நாட்டுக் குழப்பங்களே மிச்சமாக இருந்தன. அதனால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் பல ஆர்மீனியாவில் உருவாகத் தொடங்கின. அதை ஒடுக்கத் திட்டமிட்ட துருக்கி, பயங்கரமான அடக்குமுறையைக் கையாண்டது.  1895-96ல் துருக்கியின் பல இடங்களில் நூற்றுக்கணக்கான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். ஆர்மீனிய விடுதலை எழுச்சி முடக்கப்பட்டது.  

எனது இந்தியா!

இதற்கிடையில், துருக்கியின் அதிகாரம் ஆட்டம் காணத் தொடங்கியது. அரசியல் சீர்திருத்தங்கள் வேண்டி மக்கள் போராடத் தொடங்கினர். இதற்கு ஆர்மீனியர்களின் சதிவேலைதான் காரணம் என்று துருக்கி நம்பியது. அதைத் தனது வெளிப்படையான எதிர்ப்பு பிரசாரம் வழியே நாடெங்கும்

எனது இந்தியா!

உறுதிசெய்தது. உலகப் போரில் துருக்கி தோற்றதற்கு ஆர்மீனியர்களின் துரோகச் செயலே காரணம் என்று ஆர்மீனிய வெறுப்பை நாடெங்கும் வளர்த்தது துருக்கி. இதனால், ஆர்மீனியர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணம் வேகமாகப் பரவியது. அந்த விதையே ஆர்மீனிய இனஅழிப்புக்கான தொடக்கப் புள்ளி. முதலில், துருக்கிய ராணுவத்தில் பணிபுரிந்த ஆர்மீனியர்கள் இடமாற்றம் செய்யபட்டு, ஒரே முகாமில் அடைக்கப்பட்டனர். அவர்களைத் தந்திரமாகக் கொன்றது துருக்கி. அதை ஆர்மீனியர்கள் எதிர்த்த காரணத்தைக் காட்டி தனது துரோகச்செயலை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்தது துருக்கி.

1915-ம் ஆண்டு ஏப்ரலில் ஆர்மீனிய சமூகத்தின் தலைவர்களும் முக்கியப் புள்ளிகளும் ராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஆர்மீனியக் கிராமங்கள் கொளுத்தப்பட்டன. ஆரம்பத்தில் சிறுஅளவில் இந்த அழித்தொழிப்பு நடந்தது. நாளடைவில், உள்நாட்டிலேயே ஆர்மீனியர்களிடம் இருந்த சொத்துக்கள் பறிக்கப்பட்டு, முகாம்களில் அடைக்கப்பட்டனர். யூதப் படுகொலையைப் போலவே, ஆர்மீனியர்களும் வதை முகாம்களில் சிக்கி உயிர் இழந்தனர். முகாமுக்கு அழைத்துச் செல்லும் வழியில் பலர் இறந்தனர்.

1915-லிருந்து 1918 வரை தொடர்ந்து நடந்த படுகொலைகளில் ஒன்றரை லட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். ஆர்மீனிய இனஅழிப்பை பிறநாடுகள் அறிந்திருந்தபோதும் வெளிப்படையாக அதைக் கண்டிக்கவில்லை. பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை கண்டித்தபோதும், அது எதிரியின் பிரசாரம் எனக் கூறி துருக்கி முறியடித்தது. 1924-ல் துருக்கியில் கெமால் அடாடர்க் தலைமையில் புரட்சி வெடித்து, துருக்கி மதசார்பற்றக் குடியரசாகியது. ஆனால், என்னதான் ஆட்சிமுறை மாறினாலும் தான் செய்தது இனஅழிப்பு என்பதை துருக்கி இன்று வரை மறுத்து வருகிறது. இதே நிலைதான் ஈழத் தமிழர்கள் விஷயத்திலும் இப்போது நடக்கிறது  

எனது இந்தியா!

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஆர்மீனியன் வீதியில் புனிதமேரி தேவாலயம் இருக்கிறது. 1772-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த ஆலயம். இதன் உள்ளே, சென்னையில் வாழ்ந்து இறந்த ஆர்மீனியர்களின் கல்லறைத் தோட்டம் இருக்கிறது. அந்த சமாதிக் கற்களில் ஆர்மீனிய மொழியில் விவரங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

இன்று, சென்னையில் ஆர்மீனியர்கள் வீதி நினைவுச் சின்னம் போலத்தான் இருக்கிறது. புனித மேரி தேவாலயத்துக்குப் பொறுப்பாக இருந்த கடைசி ஆர்மீனியரும் தனது சொந்த தேசத்துக்கு சென்றுவிட்டார். அவர் வளர்த்த வாத்துக்கள் மட்டும் தனிமையில் 'க்வாக் கவாக்’ என்று சப்தமிட்டபடியே கல்லறைத் தோட்டத்துக்குள் உலவுகின்றன. மாமர நிழலில் நிசப்தமாக ஆர்மீனிய உடல்கள் பூமியினுள் புதையுண்டிருக்கின்றன.

ஞாயிற்றுக் கிழமைகளில் இன்றும் ஆர்மீனிய தேவாலயத்தில் பிரம்மாண்ட மணிகள் ஒலிக்கின்றன.

எனது இந்தியா!

அது கடந்த காலங்களில் இருந்து சென்னையில் வாழ்ந்து மடிந்த  ஆர்மீனியர்களின் நினைவுகளை ஞாபகமூட்டுகிறது

1794-ம் ஆண்டு ஆர்மீனிய மொழியில் வெளியான முதல் செய்தித்தாள் 'அஸ்தரார்’ சென்னையில்தான் அச்சிடப்பட்டது. அதை அச்சிட்ட ஆராதூன் ஷ்மாவோன், சென்னையில் 40 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். சென்னையின் வளர்ச்சியில் ஆர்மீனியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. சைதாப்பேட்டையில் உள்ள பாலத்தையும், பரங்கிமலையில் உள்ள தேவாலயத்துக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் அமைக்க உதவி செய்தவர்கள் ஆர்மீனியர்களே.

இதற்காக அந்தக் காலத்திலேயே 30,000 பகோடா பணத்தை, கோஜா பெத்ரோஸ் வாஸ்கன் என்ற வணிகர் செலவழித்திருக்கிறார். கல்வி மற்றும் நகர வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பறியது. அவரது உடலும் ஆலயத்துக்குள் புதைக்கப்பட்டுள்ளது. அவரது இதயம் ஒரு தங்கப்பேழையில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டு ஈரானில் புதைக்கப்பட்டிருந்த அவரது பெற்றோரின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டது.

'ஆர்மீனியர்கள் ஒருபோதும் வாய்விட்டுச் சிரிப்பதில்லை. மறுக்கப்பட்ட நீதியின் வலி அவர்கள் தாடைகளை ஒடுக்கிவைத்திருக்கிறது’  என்று புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் சரோயன் கூறுகிறார். அவரும் ஆர்மீனிய வம்சாவழியைச் சேர்ந்தவரே. அந்த வாசகம் இன்று ஈழத் தமிழ் மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றே!

எனது இந்தியா!