மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

'கை’ கொடுத்த இந்தி(ரா)யா!

##~##

 1969-ல் உருவான வரலாறு காணாத மக்கள் எழுச்சி காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார். 1970-ல் ஒரு பெரும் புயல் கிழக்குப் பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியை முற்றிலும் அழித்துத் துடைத்தது. மக்கள் பெரும் அவதிப்பட்டனர். எனினும், பாகிஸ்தானிய மத்திய அரசாங்கம் முறையான மீட்பு நடவடிக்கைகளைச் செய்யவில்லை. அந்த ஆதங்கம் மற்றும் உயிரிழப்பு ஆகியவை வங்க மக்களிடம் சுதந்திர வங்காளம் உருவாக்கப்பட வேண்டும் என்ற வேட்கையை அதிகப்படுத்தியது. 1970-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது சேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டதால், மக்களின் கோபம் அதிகரித்தது.

இந்த எழுச்சியை ஒடுக்குவதற்காக அதிபர் யாகியா கான் மற்றும் ராணுவத் தலைவர்கள் ஆபரேஷன் சர்ச்லைட் எனும் ராணுவ நடவடிக்கையை கிழக்குப் பாகிஸ்தான் மீது நடத்தினர். 1971-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி அதிகாலையில், முஜிபுர் ரஹ்மானைக் கைது செய்தனர். முக்கிய அரசியல் தலைவர்கள் சிலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். யாகியா கானின் இந்த நடவடிக்கை மிகவும் கொடூரமானதாக இருந்தது. ஒரு மில்லியன் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் படுகொலை செய்யப்​பட்டோர் ஒரு லட்சம் பேர் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவாமி லீக்கின் தலைவர்கள் இந்தியாவின் கல்கத்தாவில் நாடு கடந்த

எனது இந்தியா!

அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொண்டனர். 1971-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி கிழக்கு பாகிஸ்தானின் குஸ்தியா மாவட்டத்திலுள்ள மெஹெர்பூரில் முறையாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டது. இதன்படி, தாஜுதீன் அஹமட் முதல் பிரதமராகவும், சையத் நஸ்ருல் இஸ்லாம் தற்காலிக ஜனாதிபதியாகவும் பதவியேற்றனர்.

வங்காளதேச விடுதலைப் போர் ஒன்பது மாதங்கள் நீடித்தது. முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் முக்திவாகினி என்ற படையை அமைத்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டனர். இதில், 8,000 வீரர்கள் ஜெனரல் ஒஸ்மானி தலைமையில் கெரில்லா போர் தொடுத்தனர். வங்கதேசம் 11 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒரு கெரில்லா படைத் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. இதற்காக தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. கெரில்லா வீரர்களின் பயிற்சிகளுக்கு இந்தியா மறைமுகமாக உதவினாலும் முறையான ஆயுதங்கள், திட்டமிடல்கள் இல்லாமல் பாகிஸ்தானிய ராணுவத்தை எதிர்த்துப் போரிடுவது சவாலாக அமைந்தது. இந்த நிலையில், கிழக்கு பாகிஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதென்று இந்தியா முடிவு செய்தது. மேஜர் ஜெனரல் சுஜித் சிங் தலைமையில் இந்திய ராணுவ வீரர்கள் விமானங்களில் சென்று, டாக்காவைச் சுற்றிலும் பாரசூட் மூலம் குதித்தனர். இந்திய ராணுவத்தினரும் முக்திவாகினி படையினரும் டாக்காவைச் சுற்றி முற்றுகையிட்டனர்.

பாகிஸ்தான் அரசு, டாக்கா விமானத் தளத்தில் 20 போர் விமானங்களை நிறுத்திவைத்திருந்தது. இந்திய விமானங்கள் குண்டு வீசி, இந்த 20 விமானங்களையும் அழித்தன. விக்ராந்த் என்ற இந்தியப் போர்க் கப்பலைத் தகர்ப்பதற்காக, கராச்சியில் இருந்து புறப்பட்டு வந்த காஜி என்ற பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலை இந்தியக் கப்பற்படை கண்டுபிடித்து அழித்தது.

இந்திய வீரர்களுடன் போரிட்டால் பாகிஸ்தான் படைகள் அழிவது நிச்சயம் என்பதை பாகிஸ்தான் ராணுவ தளபதி நியாஜி புரிந்துகொண்டார். அதன் விளைவாக, டிசம்பர் 16-ம் தேதி இந்திய ராணுவத்திடம் அவர் சரணடைந்தார். அதே சமயம், மேற்கு முனையிலும் பாகிஸ்தானின் ராணுவத்துக்கு இந்தியாவால் அடிமேல் அடி கிடைத்தது. இதனால் லாகூரை இந்திய ராணுவம் கைப்பற்றிவிடும் நிலைமை ஏற்பட்டது. ஆகவே, போர் நிறுத்தத்துக்கு யாகியா கான் சம்மதித்தார். 1971-ல் பாகிஸ்தானின் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு வங்காள தேசம் என்ற பெயரில் சுதந்திர நாடு உருவானது. கூடுதல் பாதுகாப்புக்காக 1972-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி வரை இந்திய ராணுவம் வங்காள தேசத்தில் தங்கியிருந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு, வங்காள​தேசம் அவாமி லீக்கால் ஆளப்பட்டது. வங்காளதேசம் உருவாக முக்கியக் காரணமாக இருந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு முஜிபுர் ரஹ்மான் நேரில் வந்து மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். புதிய தேசத்தில் தேர்தல் நடத்தப்படாமல் முஜிபுர் ரஹ்மான் பிரதமராகப் பதவி ஏற்றார். அதன் பிறகு, 1973-ல் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில், அவாமி லீக் அறுதிப் பெரும்பான்மை பெற்றது. முஜிபுர் ரஹ்மான் அதன் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். அதே நேரம், பாகிஸ்தானின் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றார்.

புதிதாக உருவான வங்கதேசத்தின் முக்கியப் பிரச்னை, உணவு. போர் காரணமாக விளைநிலங்கள் அழிக்கப்​பட்டு இருந்தன. அதை உணர்ந்து இந்தியா நிதி உதவியும் உணவும் அளித்து உதவியது. முஜிபுர் ரஹ்மான், ரஷ்யாவின் ஆதரவாளராகச் செயல்படுகிறார், அமெரிக்காவின் அதிகாரப்பரவலுக்கு உதவி செய்ய மறுக்கிறார் என்பதை உணர்ந்த அமெரிக்கா, வங்க அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த

எனது இந்தியா!

முயற்சித்தது. திட்டமிட்டு அரசியல் கிளர்ச்சிகளை உருவாக்கியது. இதில் பாகிஸ்தான் அரசும் கைகோத்துக்கொண்டது. 1974-ல் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக நாட்டில் ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் அதிகமானது. அதைஒட்டி பல இடங்களில் கிளர்ச்சிகள் வெடித்தன. இதன் காரணமாக, நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற 1975-ல் அவசர கால நிலையை அறிவித்தார் முஜிபுர் ரஹ்மான். எதிர்ப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, டாக்கா நகரத்தின் டாண்முண்டி வீதியில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீடு, ராணுவ உயர் அதிகாரிகளால் முற்றுகையிடப்​பட்டது. அவரது மகன் ஷேக் கமல் சுட்டுக் கொல்லப்பட்டார். மாடியில் இருந்து இறங்கிவந்த முஜிபுர் ரஹ்மான், ராணுவத்தின் மிரட்டலுக்கு உள்ளானார்,  

நிலைமை கைமீறிப் போய்விட்டதை உணர்ந்த அவர் ராணுவத் தலைவர் கர்னல் ஜமீலுக்கு தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.

உடனே, அதிபர் வீட்டுக்கு கர்னல் ஜமீல் வரவழைக்கப்பட்டார். ராணுவத்தின் விபரீத மிரட்டலைக் கண்டவர், அவர்கள் அனைவரும் உடனடியாக முகாமுக்குத் திரும்பும்படியாக எச்சரிக்கை செய்தார். ஆனால், அவரது கட்டளை மறுக்கப்பட்டதுடன் அதே இடத்தில் கர்னல் ஜமீல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைகளைத் திட்டமிட்ட ராணுவ மேஜர் சாயித் ஃபரூக், முஜிபுர் ரஹ்மானைக் கைதுசெய்து ராணுவ முகாமுக்குக் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். ஆனால், கைதுசெய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ரஹ்மான். அதன் காரணமாக, நூர் சௌத்ரி என்ற லெப்டினென்டால் ரஹ்மான் சுட்டுக் கொல்லப்பட்டார். ரஹ்மானின் மனைவியும் மகனும் வேலையாட்கள் சிலரும் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நேரம் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மருமகனும் அவாமி லீக் கட்சியின் முக்கியத் தலைவருமான ஷேக் பலூக் ஹக்  மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி, உறவினர்கள் அனைவரையும் ராணுவத்தின் இன்னொரு படைப் பிரிவு கொன்று குவித்தது.

ராணுவத்தின் மூன்றாவது பிரிவு, டாக்கா நகரத்தின் மினிட்டா வீதியில் வசித்த ரஹ்மானின் சகோதரியின் கணவரும் மந்திரியுமான அப்துல் செர்னியாபாத், அவரது மனைவி மற்றைய குடும்பத்தினர் என 13 பேரை படுகொலை செய்தது. எதிர்ப்பு ராணுவத்தின் நான்காவது அணி சவார் நகரைக் கைப்பற்றி ராணுவத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். முஜிபுர் ரஹ்மான் குடும்பத்தில் உயிர் தப்பியவர்கள் அவரது மகள் ஷேக் கசீனா மற்றும் ஷேக் ரெஹனா. இவர்கள் இருவரும் மேற்கு ஜெர்மனிக்குக் கலாசாரப் பயணம் சென்றிருந்த காரணத்தால் உயிர் தப்பினர். ஷேக் ரெஹனா, இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் புகுந்தார். ஷேக் கசீனா, இந்தியாவில் தங்கியிருந்தார்.

பதவி ஆசைகொண்ட‌ சாயித் ஃபரூக்கைக் கைக்குள் போட்டுக்கொண்டு முஜிபுர் ரஹ்மானை ஒழித்துக் கட்டியது அமெரிக்காவே என்று விமர்சனங்கள் எழுந்தன. முஜிபுர் ரஹ்மான் அரசியல் வழிமுறைகள் திடீரென வழிமாறிப்போனதே ராணுவ ஆட்சிக்குக் காரணமாக அமைந்தது. அதிபரான மூன்றே ஆண்டுகளில் முஜிபுர் ரஹ்மான் கடுமையான அடக்குமுறைச் சட்டங்களை கொண்டுவந்து சர்வாதிகார ஆட்சி நடத்தத் தொடங்கினார். அதுவே, அவர் அழிவுக்குக் காரணமாக அமைந்தது என்றும் ஒரு விமர்சனம் இருக்கிறது.

1981-ல் ஷேக் கசீனா, அவாமி லீக் கட்சியின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டு மீண்டும் வங்கதேசம் சென்றார். ஆனாலும், அவரால் உடனே ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. 1996-ல்தான் ஷேக் கசீனா வங்கதேசத்தின் அதிபராகப் பதவி ஏற்றார். ஒரு மொழியும் இனமும் அதிகாரத்தால் பாதிக்கப்பட்டால், ஒடுக்குமுறையைச் சந்தித்தால் அதில் உருவாகும் மக்கள் எழுச்சியை எளிதில் ஒடுக்கிவிட முடியாது என்பதையே, பங்காளதேஷ் உருவான வரலாறு நமக்கு உணர்த்துகிறது. பங்காளதேஷ் உருவாவதற்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் விஷயத்தில் மட்டும் கைகட்டி மௌனம் சாதிப்பதுதான் கவலைக்குரியது.