மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

நடமாடும் சடலங்கள்!  

##~##

லீகுக்கு ஆதரவான நாளிதழ்களில் 16-ம் தேதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்​கான திட்டமிடல் வெளியானது. அதன்படி, அன்று இரண்டு மணிக்கு பெரிய பொதுக் கூட்டமும் பிரார்த்தனையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதையட்டி சிறப்புப் பேரணி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. நிலை​மையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு செய்யத் தொடங்கியது.

அதே நேரத்தில், கடைகளைத் திறந்துவைத்து வழக்கம் போல வியாபாரம் செய்ய வேண்டும், முஸ்லிம் லீகின் மிரட்டலுக்கு நாம் பயந்துவிடக் கூடாது என்று இந்து விசுவாசிகளாக உள்ள காங்கிரஸ் உறுப்​பினர்கள் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டனர். ஒருவேளை, தாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுக்க மக்கள் படை தயாராக உள்ளது என்று காங்கிரஸ் பிரமுகர் பிரபுல்ல சந்திர கோஷ் அறிவித்தார்.

இதைக் கேட்டு முஸ்லிக் லீக் கடும்கோபம் அடைந்தது. திறந்துவைக்கப்படும் கடைகளைச் சூறையாடுவோம் என்று உணர்ச்சிவேகத்தில் அவர்களும் அறிவித்தனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தால், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆகஸ்ட் 16-ம் நாள் காலை கல்கத்தாவில் பதற்றத்துடனே தொடங்கியது. கடைகளைத் திறப்பதா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்ட காரணத்தால் வியாபாரிகள் தயங்கிக்கொண்டே இருந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடைகளைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தினர். லால்பஜார் பகுதியில் உள்ள இந்துக்களின் கடைகள் திறக்கப்பட்டன.  

எனது இந்தியா!

இரும்புக் கம்பிகள், உருட்டுக்கட்டைகள் சகிதமாக அந்தப் பகுதிக்கு வந்த முஸ்லிம் லீக் அமைப்பினர், திறந்திருந்த கடைகளைச் சூறை​யாடத் தொடங்கினர். அடிதடியும், தீ வைத்தலும் நடந்தன. இந்தத் தகவல் நகரம் முழுவதும் பரவியது. உடனே, நகரின் மற்றொரு பகுதியில் உள்ள இஸ்லாமியத் தலைவர்களின் வீடுகள் தாக்கப்​பட்டன. மசூதிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இரு தரப்பு மோதல்களையும் கட்டுப்படுத்த காவல்​துறை முடுக்கிவிடப்பட்டது. பொதுக் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள 30,000 பேர் வரக்கூடும் என போலீஸ் கணித்து இருந்தது. ஆனால், ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் திரண்டுவிட்டனர். இதனால், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறியது.

2 மணிக்கு முஸ்லிம் லீக்கின் பொதுக் கூட்டம் தொடங்கியது. நகரெங்கும் முஸ்லிம்கள் தாக்கப்​படுவதாகவும் கலவரத்தில் காயமடைந்து ஆறு பேர் உயிருக்கு ஊசலாடுகின்றனர் என்றும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு ஆவேசமடைந்த லீக் உறுப்பினர்கள், லாரி​கள் மற்றும் வேன்களில் கூட்டம் கூட்டமாக ஏறிச்சென்று ஆயுதங்களால் இந்துக்களைத் தாக்கத் தொடங்கினர். முதற்கட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன. பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர். 16 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். நூலகங்கள், துணி குடோன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

எனது இந்தியா!

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இந்து மதவாதி​களின் கூட்டம் கிளம்பியது. முஸ்லிம்களின் வீடுகள் நொறுக்​கப்பட்டன. பெண்களைத் துரத்தி துரத்திக் கொலை செய்தனர். வணிக நிறுவனங்களை உடைத்துச் சூறையாடினர். இரண்டு தரப்பும் கொலை வெறியுடன் களம் இறங்கி நகரைச் சூறையாடியதில் 30,000 பேர் இறந்திருக்கக்கூடும் என்கின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக 10,000 பேருக்கும் குறைவாக இறந்துபோனதாகவே தெரி​விக்கப்படுகிறது. இந்தக் கலவரத்தில் ஒரு லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

ஒரே நாளில் கல்கத்தா மாநகரம் முற்றிலும் சூறையாடப்பட்டுத் தீக்கிரையானது. மக்கள் எங்கே போவது எனத் தெரியாமல் உயிர் பயத்தில் தப்பி ஓடினர். காணும் இடமெல்லாம் சடலங்கள், எரியும் கட்டடங்கள், முதல் நாள் இரவு வன்​முறை வெறியாட்டம் நீண்டது. சாலையோரம் வசித்த பிச்சைக்காரர்கள்கூட இதில் தப்பிக்க முடியவில்லை.

மறுநாள், ஆகஸ்ட் 17 அன்று லிஜ்ஜாபகான் பகுதியில் உள்ள கேசோரம் துணி ஆலை ஒன்றில் வேலை பார்த்த ஒரியாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 300 பேர் ஆலைக்குள்ளேயே அடித்துக் கொல்லப்பட்டு தீ வைத்து எரிக்கப்​பட்டனர். இந்தக் கொடூரச் சம்பவத்தில் இந்துக்கள், சீக்கியர், முஸ்லிம் என பேதமில்லாமல் பலரும் பலியாகினர். இந்தச் சம்பவம் இந்தியாவை உலுக்​கியது. இதன் காரணமாக ஒரிசா, பீகார், உத்தரப் பிரதேசம் பஞ்சாப் என பல மாநிலங்களில் மதக் கலவரம் வெடித்தது. கல்வி நிலையங்களில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த மாணவர்களைக்கூட வெளியே இழுத்துப் போட்டு அடித்துத் துவைத்தனர். மருத்துவமனைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. டாக்ஸியில் சென்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றை வண்டியோடு  தீ வைத்து எரித்தது ஒரு கும்பல். இதற்குப் பதிலடியாக கல்கத்தாவின் புறநகர் பகுதி மருத்துவமனையில் புகுந்த ஒரு கும்பல், ஒரு வார்டுக்கு தீ வைத்தது. நோயாளிகள் பலர் மூச்சுத் திணறி இறந்தனர்.

நான்கு நாட்கள் நடந்த இந்தக் கலவரம் கல்கத்தாவை மயான பூமியாக மாற்றியது. வரலாறு காணாத அளவுக்கு சடலங்கள் சாலைகளில் கிடந்தன. அவற்றைத் தின்ன வரும் கழுகுகள் கூட்டமாக நகரை வட்டமிட்டன. சடலங்களை அப்புறப்படுத்த வருபவர்களுக்கு இலவசமாக மதுவும் உணவும் வழங்கப்படுவதோடு கூடுதல் கூலியும் வழங்குவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

எனது இந்தியா!

சடலகங்களை வண்டிகளில் அள்ளிச்சென்று மொத்தமாகப் புதைத்தனர். சடலங்களில் இருந்து தொற்றுநோய் பரவிவிடுமோ என்ற பயம் காரணமாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்​பட்டன. இதற்கிடையில், வீடுகளை இழந்த மக்கள் நகரைவிட்டு வெளியேறத் தொடங்கினர். போக்கு​வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உணவுக்கும் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உறங்க இடமில்லாமல் மரங்களில்தான் மக்கள் தூங்கினர். நான்கு நாட்கள் நடந்த இந்தக் கலவரத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு ஐந்து பட்டாலியன்களை கல்கத்தாவில் இறக்கியது. இதில் இந்தியர்களும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும் இருந்தனர். அந்த வீரர்கள் கடுமையாகப் போராடி கலவரத்தை ஒடுக்கினர்.  

ஆகஸ்ட் 21 அன்று வங்கத்தில் முழுமையான வைஸ்ராய் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 22-ம் தேதி கலவரம் கட்டுக்குள் வந்தது. உடனே, நிவாரணப் பணிகளும் தொடங்கப்பட்டன. கல்கத்தாவில் கலவரம் ஒடுங்கியபோதும், அதன் எதிரொலியாக நவகாளியில் கலவரம் பற்றிக்கொண்டது. அங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பீகாரிலும் கலவரம் பற்றி எரியத் தொடங்கியது. கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக காந்தி ஒரு நடைபயணத்தைத் தொடங்​கினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒத்திகை போலவே, கல்கத்தா கலவரம் அமைந்துவிட்டது.

இந்தக் கலவரம் இரண்டு பக்கமும் தூண்டி​விடப்பட்டே நடந்திருக்கிறது. இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை அகன்றுவிட்டது. சகோதரர்களைப் போல பழகியவர்களை வெறிகொண்டு கொல்ல முனைந்துவிட்டனர். மோசமான மனப்போக்கின் அடையாளம் என்பதன் சாட்சியாகவே இந்தச் சம்பவம் இருந்தது. காந்தியின் தலையீடும் அவர் மேற்கொண்ட நடைபயணமும் கலவரத்தைக் கட்டுப்படுத்த உதவியது. 166 மைல்கள் நடந்து 47 கிராமங்களுக்குச் சென்றார் காந்தி. அந்த நவகாளி பகுதிகளில் இன்று வரை மதஒற்றுமையுடன் மக்கள் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்கத்தா கலவரத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று, ஐரோப்பியர்களோ பிரிட்டிஷ்காரர்களோ எவரும் கொல்லப்படவில்லை. சுதந்திர எழுச்சி பற்றி எரிந்த காலத்தில்கூட கலவர நேரத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தாக்குதலுக்கு ஆளாகவேயில்லை. ஆகவே, அவர்கள் இதை மதக் கலவரமாக மட்டுமே கருதினர். ஒருவகையில் அவர்கள் விரும்பியதுபோல இந்தியாவை இரண்டு துண்டாடப் போதுமான காரணம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.

சாமான்ய மனிதர்கள் கையில் துப்பாக்கி, கத்தி, கோடரி ஆகிய ஆயுதங்களுடன், தெருவில் கும்பல் கும்பலாக வேட்டையாடிய அந்தக் கொடூர நாட்கள் கல்கத்தாவின் நினைவுகளில் அழியாத ரத்தக்​கறையாகவே இருக்கிறது.

கல்கத்தா கலவரம் ஒடுக்கப்பட்ட பிறகு, வைஸ்ராய் அழைப்பை ஏற்று மந்திரிசபை அமைக்க நேருவுக்கு அங்கீகாரம் அளித்தது காங்கிரஸ் காரியக் கமிட்டி. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி வைஸ்ராயைச் சந்தித்த நேரு, மந்திரிகளின் பட்டியலைக் கொடுத்தார். நேரு பிரதமராகவும், சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், ஆசப் அலி, ராஜாஜி, சரத் சந்திரபோஸ் ஜான் மத்தாய், ஷாபத் அகமத்கான் உட்பட 13 பேர் அமைச்சர்களாகவும் இடம் பெற்றிருந்தனர் .

முஸ்லிம் லீகின் முறையான அனுமதியின்றி நேருவின் மந்திரிசபையில் சேர்ந்ததற்காக, ஷாபத் அகமத் கானை, சில முஸ்லிம் இளைஞர்கள் தாக்கி, கத்தியால் குத்தினர். காயத்துடன் அவர் உயிர் தப்பினார். நேருவின் மந்திரிசபை செப்டம்பர் 2-ம் தேதி பதவி ஏற்றது. நேரு மந்திரிசபை பதவி ஏற்கும் நாளை துக்க நாளாகவே நாங்கள் கருதுகிறோம் அதற்காக எல்லா இடங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என முஸ்லிம் லீக் அறிவித்தது. கறுப்புக் கொடி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பம்பாயில் வகுப்புக் கலவரம் நீடித்தது. இதில், 181 பேர் பலியாகினர். 579 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இடைக்கால மந்திரிசபையில் முஸ்லிம் லீக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று வைஸ்ராய் தொடர்ந்து வற்புறுத்தினார். கடைசியில், ஜின்னா சம்மதித்தார். இதனால், நேரு மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த சரத் சந்திரபோஸ், ஷாபத் அகமத்கான், சையத் அலி ஜாகிர் ஆகிய மூவரும் பதவி விலகிக்கொண்டனர். முஸ்லிம் லீக் சார்பாக ஐந்து மந்திரிகளை ஜின்னா இடம்பெறச் செய்தார்.

ஆனால், முஸ்லிம் லீக் மந்திரிகள் நேருவின் தலைமைக்குக் கட்டுப்படாமல் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தனியாக செயல்படத் தொடங்கினர். இந்தக் குழப்ப நிலை நேருவுக்கும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. மந்திரிசபையில் இருந்து முஸ்லிம் லீக் மந்திரிகள் ராஜினாமா செய்யவேண்டும் என்று வைஸ்ராய்க்கு கடிதம் அனுப்பிவைத்தனர். இதுபற்றி, ஜின்னாவிடம் வைஸ்ராய் கருத்துக் கேட்டபோது ''முஸ்லிம் லீக் மந்திரிகளை வெளியேற்றினால் ஆகஸ்ட் 16-ம் தேதி கல்கத்தாவில் என்ன நடந்ததோ, அதுபோல நாடு முழுவதும் கலவரம் நடக்கும்'' என்று பயமுறுத்​தினார். இதனால், ''முஸ்லிம் லீக் மந்திரிகளை பதவி விலகும்படி கட்டாயப்படுத்த முடியாது' என்று வைஸ்​ராய் கூறிவிட்டார். அப்படியானால், '' காங்கிரஸ் மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள்' என்று நேருவும் படேலும் அறிவித்தனர்.

நெருக்கடி நிலையை உணர்ந்த வைஸ்ராய், இங்கிலாந்து அரசுக்கு உடனே தகவல் அனுப்பினார். இதன் காரணமாக, பிரதமர் நேரு, ஜின்னா, நிதி மந்திரி லியாகத் அலிகான், பல்தேவ்சிங் ஆகியோரை உடனே லண்டனுக்கு அனுப்பிவைக்குமாறு வைஸ்ராய்க்கு இங்கிலாந்துப் பிரதமர் ஆட்லி கட்டளையிட்டார். அதன் பேரில், நால்வரும் 1947 பிப்ரவரியில் லண்டனுக்கு சென்றனர்

அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே, இந்தியாவுக்குச் சுதந்திரம் தருவதற்கான வழிமுறை​களைப் பற்றி பிரிட்டிஷ் அரசு யோசிக்கத் தொடங்கியது. அதன் பிறகுதான் பாகிஸ்தான், இந்தியா என இரண்டு தேசங்கள் உருவாக்கப்படப் போகின்றன என்ற நிலை உருவானது. அதையடுத்துதான் இந்திய சுதந்திரமும் இந்தியப் பிரிவினையும் நடந்தேறின.

இந்திய சுதந்திர வரலாறு நமக்கு சுட்டிக்​காட்டும் உண்மை என்னவென்றால், மதக் கலவரங்கள் எப்போதுமே திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன. இந்தக் கலவரங்களால் அதிகமாக பாதிப்பு அடைபவர்கள் சாமான்ய மக்களே. அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் மதக் கலவரங்களில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கின்றனர். மதம், மக்களிடையே சகிப்புத்தன்மையும் அன்பையும் பகிர்ந்து தருவதற்கு மாற்றாக... கொலை வெறியை, வன்முறையை வளர்த்துவிடுகிறது என்றால், அதை வழிநடத்துபவர்களின் செயல்களில்தான் தவறு இருக்கிறது.

கல்கத்தா, நவகாளி கலவரங்களில் பலியான அப்பாவி மக்களின் கருகிய உடல்கள் நம்மிடம் யாசிப்பது, மதத்தின் பெயரால் மனித உயிர்களைப் பலி கொடுக்காதீர்கள் என்பதை மட்டுமே. அதை நாம் மறந்தால், நடமாடும் சடலங்களாகவே நாம் கருதப்படுவோம்.

எனது இந்தியா!