மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்  

##~##

நிரங்காரிகளின் தலைவர் குர்பச்சன் சிங் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்று இறந்துபோன அகண்ட கீர்த்தனிப் பிரிவுத் தலைவர் ஃபௌஜா சிங்கின் மனைவி பீபி அமர்ஜித் கௌர் குற்றம்சாட்டினார். அதோடு, புதிதாக பப்பர் கல்ஸா என்ற பெயரில் ஓர் இயக்கம் தொடங்கினார் அமர்ஜித் கௌர். இவருக்கு ஆதரவாக பிந்தரன்வாலே களம் இறங்கினார். 1980-ல் நடந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் பிந்தரன்வாலே காங்கிரஸை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். இந்திரா காந்தியுடன் ஒரே மேடையில் பேசியதால், அவரது புகழ் வேகமாக பரவியது. பிந்தரன்வாலேக்கு எதிராக பஞ்சாப் கேசரியில் தொடர்ந்து எழுதிவந்த அதன் ஆசிரியர் லாலா ஜெகத்தை, தனது ஆட்களை ஏவிக் கொலைசெய்தார் பிந்தரன்வாலே. ஆகவே, அவரைக் கைதுசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

செப்டம்பர் 20-ம் தேதி ஒரு மணிக்கு தானே சரணடைவதாக பிந்தரன்வாலே கூறினார். அதற்கு முன், ஒரு பிரார்த்தனை கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். அவரது கோரிக்கை காவல் துறையால் ஏற்கப்பட்டது. கூட்ட முடிவில் அவரைக் கைதுசெய்ய போலீஸ் சென்றபோது, பிந்தரன்வாலே ஆதரவாளர்கள் கையில் துப்பாக்கி, வாள், ஈட்டி என்று பல ஆயுதங்களுடன் போலீஸ்காரர்களைத் தாக்கத் தொடங்கினர். அங்கு பெரிய கலவரம் வெடித்தது. 11 போலீஸ்காரர்கள் பலியானார்கள்.

எனது இந்தியா!

கைதுசெய்யப்பட்ட பிந்த்ரன்வாலே, அரசு விருந்தினர் மாளிகையில் சிறைவைக்கப்பட்டார். இதையடுத்து, பஞ்சாபின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 29 அன்று இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றைக் கடத்திய சீக்கியத் தீவிரவாதிகள், பிந்தரன்வாலேவை விடுதலை செய்யும்படி மிரட்டல் விடுத்தனர். அக்டோபர் 15-ம் தேதி பிந்தரன்வாலே விடுதலை செய்யப்பட்டார். காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த அவரை, அகாலி தளத் தலைவர் லோங்கோவால் சந்தித்தார். காலிஸ்தான் கோரிக்கையை பிந்தரன்வாலே முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அத்துடன் பொற்கோயிலுக்கு உள்ளேயே அவரது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட பிந்தரன்வாலே, தனது ஆயுதமேந்திய குழுவோடு, பொற்கோயிலுக்கு உள்ளேயிருக்கும் குரு நானக் நிவாஸ் விருந்தினர் விடுதியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டார். பொற்கோயிலின் உள்ளிருந்தவாறே, அகாலி தளப் போராட்டங்களுக்கு ஆதரவாகப் பேசியும் ஊர்வலங்கள் நடத்தியும் சீக்கியர் தலைவராக உருமாறத் தொடங்கினார் பிந்தரன்வாலே.

எனது இந்தியா!

பொற்கோயிலுக்கு உள்ளே வெடிகுண்டு, கத்தி எனப் பல்வேறு ஆயுதங்களைக் குவித்து தீவிரவாதிகளின் புகலிடமாக அதை மாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, பஞ்சாபில் ஒரு பேருந்தைக் கடத்தி பயணிகள் அனைவரையும் கொன்று குவித்தது பிந்தரன்வாலேயின் தீவிரவாதக் கும்பல். பிந்தரன்வாலேயை இப்படியே வளரவிட்டால் பஞ்சாப் முழுமையாக வன்முறைக்களமாக மாறிவிடும் என்ற சூழலில், அவரை ஒடுக்கவும், பொற்கோயிலில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்றவும் திட்டமிட்டார் இந்திராகாந்தி. 1984-ம் ஆண்டு 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்ற ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். பொற்கோயிலின் புனிதம் பாதிக்கப்படாமல் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்றும் ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.

1984 ஜூன் 3ம் தேதி பஞ்சாப் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கபட்டது. அதையடுத்து, ஜுன் 5-ம் தேதி மாலை பொற்கோயிலை ராணுவம் சுற்றிவளைத்தது. இந்த ஆபரேஷனுக்கு தலைமை ஏற்றவர் மேஜர் ஜெனரல் குல்திப்சிங் பரார். இவரும் சீக்கியரே.

பொற்கோயிலுக்கு உள்ளே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும்படி, ஒலிபெருக்கி மூலம் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், தீவிரவாதிகள் வரவில்லை. அன்று இரவு ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைய முற்பட்டது. ஆனால், பிந்தரன்வாலேயின் குழுவினர் சுட்டதில் ஏறத்தாழ

எனது இந்தியா!

40 கமாண்டோக்கள் உயிர் இழந்தனர். ஜுன் 6-ம் தேதி காலை பெரிய சுவர்போல அடுக்கிவைக்கப்பட்ட மணல் மூட்டைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, தீவிரவாதிகள் தொடர்ந்து இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டனர். இதனால், டாங்கிகளுடனும் கவச வண்டிகளுடனும் ராணுவத்தினர் பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்கத் தொடங்கினர். இருதரப்புக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.

ராணுவத் தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் செத்து விழுந்தனர். சில மணி நேரத்தில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். உள்ளே சென்ற ராணுவத்தினர், பிந்தரன்வாலேயைத் தேடினர். அவர் மற்ற தீவிரவாதிகளுடன் பிணமாகக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 493 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. இதில் அப்பாவிப் பொதுமக்களும் அடங்குவர். பொற்கோயில் ராணுவ நடவடிக்கை காரணமாக இந்திரா காந்தி மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் சீக்கியர்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. தங்களின் புனிதத் தலத்தை ரத்தக் கறை படியச்செய்து இந்திரா காந்தி களங்கப்படுத்திவிட்டதாகக் குமுறினர். 1984 ஜனவரியில் நாடாளுமன்றக் கூட்டத்தில் சீக்கியத் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டது பாகிஸ்தான் என்று இந்திராகாந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். சீக்கியர்களின் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டபோதும் பஞ்சாப் முழுமையாக தனது இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

இந்த நிலையில், 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி காலை 9.15 மணிக்கு, தனது சீக்கியப் பாதுகாவலர்கள் பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோரால் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் வரலாறு காணாத வன்முறை சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. 'ரத்தத்துக்கு ரத்தம்’ 'சீக்கியர்கள் தேசத் துரோகிகள்’ போன்ற முழக்கங்கள் எழுந்தன. 11,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளானார்கள். டெல்லி சாலைகளில் ரத்தம் வழிந்தோடியது.

பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்த சீக்கியர்கள் வழியில் இறக்கிவிடப்பட்டு, தெருவில் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்டனர். 12 வயது சீக்கிய சிறுமி ஒருத்தி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது ஒரு கும்பல். டெல்லி முழுவதும் பரவிய வன்முறையை காங்கிரஸ் அமைச்சர்களே முன்னின்று தூண்டிவிட்டனர் என்கிறது மனிதஉரிமைகள் அமைப்பின் புலனாய்வுக் குறிப்பு. இதுகுறித்து, பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. நீதிமன்றத்தின் நீண்ட கால விசாரணையின் முடிவில், சமீபத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் அப்பாவிகளாக விடுதலைசெய்யப்பட்டனர் என்பது காலக் கொடுமை.

காலிஸ்தான் இயக்கம் ராணுவத்தின் கெடுபிடியால் ஒடுக்கப்பட்டபோதும் இன்றும் பப்பர் கல்சா அமைப்பு பாகிஸ்தானுக்குள் இருந்தபடியே செயல்படுகிறது. அதன் தீவிரவாதக் குரல் மீண்டும் இந்தியாவில் கேட்கத் தொடங்கியிருக்கிறது. டெல்லி கலவரத்தில் காணாமல்போனவர்கள் என 2,000 பேருக்கும் மேலான பட்டியல் இருக்கிறது. இவர்களில் பெரும் பகுதி சாமானியக் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் என்ன ஆனார்கள்? உயிரோடு இருக்கிறார்களா? என்பது தெரியாமல் கடந்த 25 ஆண்டுகளாக தேடிக்கொண்டே இருக்கின்றனர். இனக் கலவரம் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்பு, இதுபோன்ற தீராத மனிதத் துயரங்களே.

எனது இந்தியா!

தீவிரவாத அமைப்புகள் ஒருநாளில் தானே உருவாகிவிடுவதில்லை. அவை, பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மறைமுகமாக உருவாக்கப்படுகின்றன. பல்வேறு நிலைகளில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அதன் வளர்ச்சி கைமீறிப்போகையில், அவை தீவிரவாதமாக அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படுகின்றன. இது, அரசியல் சூதின் முடிவில்லாத விளையாட்டு!

எனது இந்தியா!