
நாங்களே எங்களுடைய இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து, வரைபடம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.
‘‘மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் 400 கடற்கரை கிராமங்களைக் காணவில்லை. இதன் பின்னணியில் சதி இருப்பதாகச் சந்தேகிக்கிறோம்’’ என்று கொதிக்கிறார்கள், மீனவ சமுதாயத்தினர்!
இந்தச் சம்பவம் பற்றி நம்மிடம் பேசிய அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசியத் தலைவரான ஆண்டன் கோமஸ், “மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை சார்பாக கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நிறைய குளறுபடிகளைக்கொண்ட இந்த வரைபடம், தமிழக சுற்றுச்சூழல்துறையின் இணையதளத்திலும் வெளியி்டப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் 608 மீனவ கிராமங்கள் இருப்பதாக மீன்வளத்துறை குறிப்பிட்டிருக்கும்போதிலும், வரைபடத்தில் சுமார் 400 மீனவ கிராமங்களைக் காணவில்லை.

மீனவர் குடியிருப்புகள், மணல்திட்டுகள், மீன் இறங்கு தளம், மீன் காயவைக்கும் இடம், படகுகள் நிறுத்தும் இடம், வலைகள் பழுதுபார்க்கும் இடம், விளையாட்டு மைதானம், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவையும் வரைபடத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும், சில இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இன்னும் சில இடங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தரிசு நிலங்களாக இருப்பதாகவும் தவறாகக் காட்டப்பட்டிருக்கின்றன. மீனவ கிராமங்கள் மற்றும் அவற்றின் பொதுச் சொத்துகளை இப்படித் தவறாகக் குறிப்பிடுவதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாகச் சந்தேகிக்கிறோம்.
மத்திய, மாநில அரசின் இடங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் மீனவ கிராமங்களின் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் வருங்காலத்தில் மத்திய, மாநில அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தவோ, தனியார் தொழிற்சாலைகளைக் கொண்டுவரவோ திட்டமிடலாம். அதனால்தான் இந்த வரைபடத்தை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்.

நாங்களே எங்களுடைய இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து, வரைபடம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் அறிஞர்களைக்கொண்டு கடந்த 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். அடுத்தடுத்த பயிற்சிகளுக்குப் பின்னர், குமரி முதல் கடலூர் வரை எங்களுடைய இளைஞர்களே வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்” என்று படபடத்தார்.
மீனவ இளைஞர்களுக்கு வரைபடம் தயாரிக்கும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை கவனித்தவர்களான தமிழ்நாடு-புதுவை மீனவக் கூட்டமைப்பு நிர்வாகி கில்பர்ட் ரொட்ரிகோ, அகில இந்திய மீனவர் சங்க நிர்வாகி பெனடிக்ட், தேசிய பாரம்பர்ய மீனவர் கூட்டமைப்பின் சின்னத்தம்பி, வழக்கறிஞர் சாந்தாகுரூஸ் ஆகியோர் நம்மிடம் பேசுகையில், ‘‘உள்ளூர் மக்களின் கருத்தைக் கேட்காமலும், எங்களின் பங்கேற்பு இல்லாமலும் வரைபடம் தயாரித்ததே எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணம். ‘எங்களின் பூர்வீக வாழ்விடம் பறிபோய்விடக் கூடாது. எங்களின் பாரம்பர்யத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்பதற்காக, எங்களின் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து நாங்களே வரைபடம் தயாரிக்கவிருக்கிறோம்.

இளைஞர்களுக்கான இந்தப் பயிற்சியை சபாநாயகர் அப்பாவு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இருவருமே பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டார்கள். பயிற்சியின் நிறைவில் மீனவ இளைஞர்களுக்குச் சான்றிதழ் கொடுக்க கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதா ஜீவன், மனோ தங்கராஜ் ஆகியோரை அழைத்திருந்தோம். ஆனால், அவர்களும் வரவில்லை. மாநில அரசுக்கு எதிராக மீனவ சமூகம் இருப்பது போன்ற மாயையைச் சிலர் உருவாக்குகிறார்கள். அதை, தமிழக அரசும் நம்புகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மீன்பிடித் தொழிலைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்” என்றார்கள்.
வரைபடம் தயாரிக்கும் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளரான குறும்பனை பெர்லின் நம்மிடம் பேசுகையில், ‘‘கடந்தகாலங்களில் தமிழில் வரைபடம் இருந்தது. ஆனால், இப்போது ஆங்கிலத்தில் இருப்பதால் புரிந்துகொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும்விட, மத்திய அரசு தயாரித்துக்கொடுத்த வரைபடத்தை தி.மு.க அரசு அவசர அவசரமாக இணையத்தில் பதிவேற்றியதன் காரணம் என்ன... கடந்தகால ஆட்சியாளர்களைப்போலவே இந்த அரசும் மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறதோ என்ற சந்தேகம் மீனவ சமூகத்தினரிடம் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.
இது குறித்து தமிழ்நாடு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, “தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங்களிலுள்ள மீனவ கிராமங்களுக்கான உத்தேச வரைபடத்தில் மீனவ கிராமங்கள் விடுபட்டதாகக் கூறப்படும் பகுதிகள், அதன் எல்லைகளை அந்தந்த மீனவ கிராம கமிட்டியினரே அடையாளம் காட்டி அரசுக்கு அறிக்கையாகத் தரலாம்.

அது குறித்து அதிகாரிகள் குழுவுடன் ஆலோசித்து, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, மீண்டும் வரைபடங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கும் எடுத்துச் செல்வோம். மீனவர்களின் நலன் காக்கும் வகையிலேயே இந்த அரசு செயல்பட்டுவருகிறது” என்று முடித்துக்கொண்டார்.
தேச வரைபடம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்தந்த ஊர் வரைபடமும் அந்தந்த மக்களுக்கு முக்கியம் என்பதை உணருமா அரசு?