ஒருநாள் நான் பெசன்ட் நகரில் விக்ரம் வீடு எங்கே என விசாரித்துப் போனேன். வாட்ச்மேன், 'அதெல்லாம் பார்க்க முடியாது' என சிடுசிடுப்பாகச் சொல்லிவிட்டார். ஆனால், நான் அங்கேயே நிற்க, இன்னொருவர் வந்து 'நாளைக்கு வந்தாப் பார்க்கலாம்' என்றார். மறுநாள் காலையே போய்விட்டேன். டிராக் சூட், கையில பேட்மின்டன் ராக்கெட்டுடன் விக்ரமும் அவர் பையனும் வந்து ஷட்டில்காக் ஆடினார்கள். ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்றதும் சம்மதித்தார். என் துரதிர்ஷ்டம், என் கேமரா செல்போனில் சார்ஜ் இல்லை. நான் அசடு வழிய, 'நீ கொஞ்ச நேரம் விளையாடுப்பா... அதுக்குள்ள இந்த போனுக்கு சார்ஜர் இருக்கான்னு தேடுவோம்' என்று ஆட்களிடம் தேடச் சொன்னார். நானும் விக்ரமும் விளையாடினோம். சார்ஜர் கிடைக்கவில்லை. என் பேரைக் கேட்ட விக்ரம், 'அட! என் கசின் பிரதர் பேரும் அரவிந்த்தான்' எனச் சிரித்தபடி அவர் மொபைலிலேயே போட்டோ எடுத்து என் மெமரி கார்டை அவருடைய போனில் மாற்றி, அந்தப் புகைப்படத்தை சேவ் பண்ணிக் கொடுத்தார். இவ்வளவு அன்பான, எளிமையான மனிதரா எனப் பிரமித்துப்போனேன். 'நீ எல்லாம் எப்படி விக்ரமைப் பார்க்க முடியும்?' எனக் கேலி பேசிய என் நண்பர்கள் இப்போது என்னை 'சீயான் அரவிந்த்'னுதான் கூப்பிடுறாங்க. தேங்க்ஸ் சீயான்!''
- அரவிந்த் பாலாஜி, சென்னை- 80.
|