மீடியாக்களின் ஃப்ளாஷ்களுக்கு போஸ் கொடுத்தார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள். கூட்டிக் கழித்துப் பார்த்து, பாதிப்பு நிவாரணத்துக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அமைச்சரவை கலைந்தது. நிஷா வலுவிழந்து கடலுக்குள் புகுந்ததும் மழை குறைந்தது.
அடுத்தது என்ன? இதோ, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்கள். அடுத்ததாக உஷாவோ, ஆஷாவோ வரும் வரை அரசுக்குக் கவலை இல்லை. மக்களுக்கும் கவனம் இருக்காது. ''ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும். புயல் உருவாகும் என்பது நாம் அறிந்ததே. நிஷாவைப் போன்று அடுத்தடுத்த ஆண்டுகளில் புயல் தாக்கினால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு சீஸனுக்கும் இஷ்டம் போல் வருவதுதான் இயற்கை. சீஸனுக்கு மட்டும் பணிபுரியாமல் தனி அமைப்பை ஏற்படுத்தி, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றினால் மழை வெள்ளத்திலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்'' என்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
''மழையும் புயலும் வரும்போது திண்டாடுவதுதான் மக்களுக்கு வேலையா... வேறு வழியில்லையா? அடுத்தடுத்த ஆண்டுகளில் புயல் மழை ஆபத்திலிருந்து தமிழகத்தைத் தற்காத்துக்கொள்ள என்ன வழி இருக்கிறது?'' என்கிற கேள்வியோடு அண்ணா பல்கலைக்கழக நீர்வள மைய இயக்குநர் கருணாகரனைச் சந்தித்தோம்.
''மழை நீர் வடியாமல் தேங்குவது என்பது தமிழகத்தில் மட்டும் உள்ள பிரச்னை இல்லை. அனைத்து மாநிலங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. தமிழகத்தில் சற்று அதிகமாக இருக்கிறது. சட்டத்தை மக்கள் அலட்சியப்படுத்துவதும், அந்தச் சட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்துவதில் உள்ள சுணக்கமுமே பிரச்னைக்கான மூல காரணம்.
முதல் விஷயம், மழையின்போது தெருவில் குவிக்கப்பட்டுள்ள குப்பைக்கூளங்கள் தண்ணீரோடு கலந்து சாக்கடைக்குள் செல்கிறது. இதனால் கழிவு நீர்க் குழாய்கள், வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறாமல் தேங்க ஆரம்பிக்கிறது. வீட்டில், 'கழிவுநீர்க் குழாய்களில் திடக் கழிவுகளைக் கொட்டாதீர்கள்' என்று கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்கிறது அரசு. ஆனால், பெரும்பாலானவர்கள் அதை மதிப்பதில்லை. சில விஷயங்களை மக்களிடம் அன்பாக மட்டும் சொன்னால் புரியாது, அந்த மாதிரி சூழலில் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும். 'திடக் கழிவுகளை கழிவுநீர்க் குழாய்களில் கொட்டுபவர்களின் வீட்டுக்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய் இணைப்புத் துண்டிக்கப்படும்' என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.
கிராமப்புறங்களில் ஆறு, குளம், ஏரிகளைத் தூர்வாரும்போது மணலை அள்ளிக் கரையில் போடுவதுதான் வழக்கம். கன மழை பெய்யும்போது கரையில் உள்ள மண், ஆறுகளுக்குள்ளேயே கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஆறு, ஏரி போன்றவை மீண்டும் தூர்ந்துபோகிறது. நீர் தேங்க அல்லது வழிந்து ஓட இடம் இல்லாததால் அதிகப்படியான மழை நீர் ஊருக்குள் வர ஆரம்பிக்கிறது. ஆறு, குளம், ஏரிகளைத் தூர் வாரிய பின்னர் கரைகளில் கான்கிரீட் சுவர் எழுப்பிப் பலப்படுத்த வேண்டும். சென்னையைப் பொறுத்தவரை இயற்கையையும் அரசாங்கத்தையுமே குறை சொல்லிக்கொண்டு இருக்கிறோம். மக்களிடமும் குறை இருக்கிறது. 'ஏரி, குளம் போன்ற இடங்களை ஆக்கிரமிக்கிறோமே... மழை பெய்தால் வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்குமே' என்கிற கவலையோ, வருத்தமோ இல்லாமல் மக்கள் தொடர்ந்து நீர் நிலைகளை ப்ளாட் போட்டு ஆக்கிரமிக்கின்றனர். தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களை மனதில் வைத்து அரசும் அவர்களுக்குப் பட்டா கொடுத்துவிடுகிறது. இடத்தை ஆக்கிரமிப்பவர்கள், அபகரிப்பவர்கள் மீது சட்டங்களைக் கண்டிப்புடன் செயல்படுத்தினால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.
|