''பெரும்பான்மை என்பதுதான் ஜனநாயகமா?'' - எம்.பிரபாகரன், திண்டுக்கல்.
''இல்லை. சிறுபான்மை உணர்வுகளுக்குப் பெரும்பான்மை மதிப்பு அளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். 'இந்தியாவில் இந்தி பேசும் மக்கள்தான் பெரும்பான்மை. எனவே, இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்' என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோது, அண்ணா சொன்னது, 'இந்தியாவில் காக்கைகள்தான் அதிகம். ஆனால், தேசியப் பறவை மயில்தானே!' ''
''வார்த்தைகள் வலிமையானவைதானா?''
- ஆர்.சிவசங்கரன், மணப்பாறை.
''சரியான நேரத்தில், சரியான நோக்கத்தில் வெளிப் படும் வார்த்தைகள் வலிமையானவைதான். மகாத்மா காந்தியின் முன்னணி சீடர்களில் முக்கியமானவர் வினோபா பாவே. தெலுங்கானாவில் நில மீட்புக்கான ஆயுதப் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த கால கட்டம். அப்போது பாதிக்கப்பட்ட போச்சம்பள்ளி என்ற கிராமத்துக்கு வந்தார் வினோபா. அங்கே 80 குடும்பங்கள் விவசாயக் கூலிகளாக வறுமையில் வாடிக்கொண்டு இருந்தனர். அப்போதுதான் வினோபா மனதில் 'பூமிதான இயக்கத்துக்கான' விதை விழுந்தது. ஆயுதப் போராளிகள் நிலம் உள்ள முதலாளிகளிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கி, நிலமற்ற ஏழைகளிடம் அளித்தனர். இந்த வழிமுறையிலிருந்து வன்முறையை மட்டும் நீக்கி, நிலச்சுவான்தார்களிடம் இருந்து கருணையின் அடிப்படையில் நிலங்களை வாங்கி, நிலமற்ற விவசாயிகளுக்கு அளிப்பதே பூமிதான இயக்கம். போச்சம்பள்ளி கிராமத்தில் அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தைக் கூட்டினார் வினோபா பாவே. 'தேவைக்கு அதிகமாக நிலம் உள்ள நிலச்சுவான்தார்களே! உங்கள் உபரியான நிலங்களில் இருந்து கணிசமான நிலங்களை ஏழைகளுக்குத் தாருங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது ராமச்சந்திர ரெட்டி என்னும் நிலச்சுவான்தார் எழுந்து 5 ஏக்கர் நிலத்தைப் பூமிதான இயக்கத்துக்குத் தருவதாக அறிவித்தார்.
'உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்?' '4 சகோதரர்கள்.' 'மொத்தம் உங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக எத்தனை ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன?' '500 ஏக்கர்!' வினோபா, ராமச்சந்திர ரெட்டியின் கண்களை உற்றுநோக்கியபடியே கேட்டார், 'என்னையும் உங்கள் சகோதரராக ஏற்றுக்கொண்டு, எனக்கான பங்கைத் தர மாட்டீர்களா?' நெகிழ்ந்துபோன ராமச்சந்திர ரெட்டி, வினோபாவையும் சகோதரராக ஏற்றுக்கொண்டு, பூமிதான இயக்கத்துக்கு 100 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கினார். வலிமையான வார்த்தைகளில் இருந்தே அந்த இயக்கம் ஆரம்பித்தது!''
''கம்ப்யூட்டர் வளர்ச்சி காரணமாக ஏதேனும் இழப்புகள் இருக்குமா?''
- கா.நிர்மலா, மணவாளக்குறிச்சி.
''நிறைய. என்றாலும், முக்கியமானது நாம் நம் கையெழுத்தை இழந்தது. கவிதைகளில், காதல் கடிதங்களில், கதைகளில் என ஒவ்வொரு கையெழுத்துக்கும் விதவிதமான சுபாவமும் சுவாசமும் இருக்கும். பெற் றோர்கள் பிள்ளைகளுக்கு எழுதும் கடிதங்களில் எழுத்துப் பிழைகளோடு கண்ணீரும் பாசமும் கலந்து இருக்கும். காதல் கடிதங்களில் அசட்டுத்தனமான கவிதைகளோடு சாகசங்களும் கெஞ்சுதல்களும் மிஞ்சி இருக்கும். ஒருவரின் கையெழுத்தை வைத்தே அவரின் |