சேலம், அக்.14,2011

கடந்த 4 மாதங்களில் அதிமுக அரசு எடுத்து வந்த நடவடிக்கையின் காரணமாக தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடந்த இரண்டு நாட்களாக பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர் இன்று சேலத்தில் பேசியது:
"சட்டப்பேரவைத் தேர்தலில் எனது வேண்டுகோளை ஏற்று திமுகவினரை தோற்கடித்து ஒரு வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தினீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்.
விலையில்லா அரிசி, மாணவர்களுக்கு மடிக்கணினி, கல்வி உதவித் தொகை, குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவிஇணைப்பு, ஏழைகளுக்கு ஆடு, மாடுகள், தாய்மார்களுக்கு மின்விசிறி கிரைண்டர் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கும் உத்தரவாதம் பெற்று இருக்கிறோம்.
நான்கே மாதத்தில் அமைதிப்பூங்கா..
சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பர்களாக இருந்த காவல்துறை தற்போது மக்களின் நண்பனாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் அமளி காடாக இருந்த தமிழகம், கடந்த 4 மாதத்தில் என் அரசு எடுத்து வந்த நடவடிக்கையின் காரணமாக தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது.
உங்கள் சொத்துக்கள் எல்லாம் எப்போது திமுகவினரால் பறிக்கப்படுமோ என்கிற நிலை மாறி தற்போது நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்கள். இந்த நில அபகரிப்பு தொடர்பாக நான் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றி வருகிறேன்.
திமுகவினரால் பறிக்கப்பட்ட நிலங்கள் எல்லாம் திரும்ப மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை மேலும் தொடரும்.
சேலத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அவரால் நீங்கள் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. அங்கம்மாள் காலனி மக்களுக்கு ஏற்பட்ட அவலத்தையும், பாப்பிநாயக்கன் பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சட்டம் தன் கடமையை செய்கிறது. அதனால் நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்கள். தவறு செய்தவர்கள், உங்களுக்கு துன்பம் தந்தவர்கள் தற்போது தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.
மின்வெட்டு இல்லா மாநிலமாகும்...
திமுக ஆட்சியில் மின்சார குறைபாடு உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது. நான் ஆட்சி பொறுப்பேற்றதும் மின்தடையை போக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததால் தற்போது படிப்படியாக மின் தட்டுப்பாடு குறைந்து வருகிறது.
அடுத்த ஆண்டு மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் நிச்சயம் உருவாகும். இப்படி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறி வருகிறது.
இந்நிலையில் வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களுக்கு திமுக ஆட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை.
திமுகவினர் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். அவர்கள் ஆட்சி காலத்தில் நீங்களும் வளரவில்லை, இந்த சேலம் மாநகரமும் வளர்ச்சி அடையவில்லை. அதிமுக வேட்பாளர்கள் உங்களுடனே இருந்து உங்கள் குறைகளை தீர்ப்பார்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள். உங்களுக்கு எதிரான செயலில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார் ஜெயலலிதா.