மீண்டும் அதை ஒட்டி சேலத்துக்கு தபாலில் அனுப்பினார்கள். அதனால்தான் அந்தக் கடிதம் சேலம் போய்ச் சேருவதற்கு ஐந்து நாட்கள் ஆகியது.
பின்னாளில் வழக்கு விசாரணையில் குற்றவாளிகளுக்காக வாதாடிய பிரபல வக்கீல்கள் இந்தக் கடிதம் குறித்து பலமான கேள்விகளை எழுப்பினார்கள். போலீஸாரே கடிதத்தைத் தயார் செய்திருக்கிறார்கள் என்று வாதாடினார்கள்.
உண்மை எதுவாக இருந்தாலும் போலீஸ்காரர்கள் ராமண்ணாவை சுலபமாகவே பிடித்தார்கள். அவனை கைது செய்யாமலேயே தங்கள் கஸ்டடியில் வைத்திருந்தார்கள். அவனுடைய உணவுத் தேவையையும் செலவையும் போலீஸே கவனித்துக்கொண்டது.
ராமண்ணா தன்னுடைய கடிதத்தில் ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு கோடு மட்டும் போட்டது ஏன்? போலீஸ்காரர் களிடம் அந்தச் செய்தியைச் சொன்னவர் ஆரிய வீரசேனன். வி.எஸ்.மணி மூலமாக ராமண்ணாவுக்கு ஆரிய வீரசேனனைத் தெரியும். அவர் மூலமாக லட்சுமிகாந்தனை சந்தித்திருக்கிறான்!
அது மட்டுமல்லாமல், 'லட்சுமிகாந்தனை தீர்த்துக்கட்ட பின்னணியில் இருந்து செலவு செய்தவர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமுலுநாயுடுÕ என்றான் ராமண்ணா!
லட்சுமிகாந்தன் நடத்தி வந்த 'சினிமா தூது' பத்திரிகையை எதிர்த்து. சர். ஆர்தர் ஹோப்புக்கு திரைப்படப் புள்ளிகள் முன்பு அனுப்பிய மனு விவகாரத்தை இந்த கடிதத்துடன் முடிச்சுப் போட்ட னர் போலீஸார். அந்த மனுவில் கையெழுத்திட்ட மிகப்பிரபலமான புள்ளிகள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு!
இதற்கிடையே போலீஸ்காரர்கள் ராயபுரத்தைச் சேர்ந்த ஜெயானந்தம் என்பவனைக் கைது செய்தார்கள். அவன் ஊர் பேர் தெரியாத மீனவ வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்துவன். அவனுக்கு நிரந்தரமான தொழில் ஏதும் இல்லை.
அவனுக்கு ஒரு சகோதரி. வசீகரமான அழகி. அவள் பெயர் கிளேரா. இவள் ஒரு தமிழ்ப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறாள். அப்போது அவள் பெயர் சந்திரா என மாற்றப்பட்டது.
கிளேரா என்ற சந்திராவைப் பற்றி லட்சுமிகாந்தன் தன் பத்திரிகை யில் அவதூறாக எழுதித் தள்ளியிருந்தான். அவளுடைய நடத்தைக்கு சகோதரன் ஜெயானந்தமும் உடந்தை என்று குறிப்பிட்டிருந்தான்.
அதனால் ஜெயானந்தமுக்கும் லட்சுமிகாந்தனைக் கொலை செய்யவேண்டுமென்ற எண்ணம் இருந்தது என்றது போலீஸ். ஜெயானந்தனையும் போலீஸ்காரர்கள் ஒதுக்குப்புறமான ஒரு போலீஸ் நிலையத்தில் நீண்ட நாள் வைத்திருந்தார்கள்.
ஜெயானந்தம், 'எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்' என்ற வகையில் 'எல்லாம் உண்மை' என்று பிரமாணம் செய்து நீதிமன்றத்தில் சொன்னான். அதன் விளைவாக அவனுக்கு 'கிங்ஸ் பர்டன்' (kings pardon) கொடுக்கப்பட்டு வழக்கில் அப்ரூவராக ஏற்றுக்கொள்ளப்பட்டான்.
('கிங்ஸ் பர்டன்' என்றால் 'அரச மன்னிப்பு' என்று அர்த்தம். அதாவது, நடந்ததை வெளியிட்டால் நீ மன்னிக்கப்பட்டு, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவாய். அப்ரூவராக அவன் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிராசிக்யூஷன் சார்பாக அவனே முக்கிய சாட்சியாக நிறுத்தப்படுவான். அந்த அமைப்பு இன்றைய அளவிலும் அமலில் இருக்கிறது.)
அப்ரூவரான ஜெயானந்தம் சென்னை உயர் நீதிமன்ற செஷன்ஸ் விசாரணையில் எல்லோரையும் திடுக்கிட வைக்கும் வகையில் 'பல்டி அடித்தான்.' நீதிபதி வியர் மார்க்கெட்டின் முன்பு, 'நான் மாஜிஸ்திரேட்டிடம் சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய். போலீஸ்காரர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். அவர்கள் சொல்லித் தந்ததை மாஜிஸ் திரேட்டிடம் சொல்லச் சொன்னார்கள். மறுத்தால், என் சகோதரி கிளேராவையும் கைதுசெய்வோம் என்று மிரட்டினார்கள்' என்றான்.
ஜெயானந்தம் அடித்த பல்டி பிராசிக் யூஷனை ஆட்டம்காண வைத்தது. பிராசிக் யூஷன் தரப்பில் ஆஜரானவர் பின்னாளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதிபதி யாக இருந்த பி.வி.ராஜமன்னார். விசாரணை சமயத்தில் அவர் அட்வகேட் ஜெனரலாக இருந்தார். அவரே ஆடிப்போனார். சட்டப் படி ஜெயானந்தமை குறுக்கு விசாரணை செய்தார்.
இந்த எதிர்பாராத திருப்பம் பின்னாளில் தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் விடுதலை அடைவதற்கு அடிப் படையாக அமைந்தது.
|