ஆயுதக் கிடங்கை சுற்றி வளைத்தனர். மெஷின் கன்களும் கன்காட்டன் ஸ்லாப்புகளும் துப்பாக்கிகளும் ஏந்திய வீரர்கள், 'மாஸ்டர் தா' சூர்யசென் தலைமையில் மின்ன லாக இறங்கினர்.
ரணசிங்கத்தின் கையில் கன்காட்டன் ஸ்லாப் இருந்தது. மொத்த புத்தியும் தாக்குதலில் குவிந் திருந்தது. சாகசத்துக்குத் துணிந்த வயதும் வலுவும் கூர்மையும் நிறை கொண்டிருந்தன. 'வெற்றியைத் தவிர வேறொன்றில்லை' என்கிற அபரிமிதமான நம்பிக்கை ததும்பியது.
திடீர் தாக்குதலை எதிர்பாராத ஆயுதக் கிடங்கு சிப்பாய்கள், சல்லடையானார்கள். பத்தே நிமிடங்களில் கொள்ளை போனது ஆயுதக் கிடங்கு. ரைஃபிள்கள், ரிவால்வர்கள், வெடிகுண்டுகள், பிஸ்டல்கள், மெஷின் கன்களை அள்ளிக்கொண்டு புறப்பட்டது புரட்சிப் படை. பார்மர் ஜான்ஸன் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவு சுற்றி வளைத்தது. மாற்றுப் பாதையைத் தெரிவு செய்த புரட்சிப்படை, நகர எல்லையைக் கடந்து, ஜலாலாபாத் மலை அடுக்குகளுக்குள் பதுங்கியது. தொடர்ந்து வந்த கூலிப்படையில் நாற்பத்தாறு பேரை வீழ்த்திவிட்டு, தங்கள் பதுங்கு தளங்களுக்குள் நுழைந்தார்கள்.
ரணசிங்கத்தின் கன்காட்டன் ஸ்லாப், செத்தவர்களில் கால் பங்கினரைக் காவு கொண்டது. தாக்குதலின் உக்கிரத் தில்கூட, ரணசிங்கத்தின் பாய்ச்சலைக் கவனிக்கத் தவறவில்லை தளபதி சூர்யா சென். எதிரியின் கண்ணிலும் படாமல், கைகளிலும் சிக்காமல் விளையாட்டு போல் நரவேட்டை ஆடியிருந்தான்.
பாசறைக்கு வந்து கூடிய புரட்சிப் படையின் எண்ணிக் கையில் இருபத்தெட்டு குறைந்தது.
ரணசிங்கத்தின் தம்பி தங்கச்சாமி, தன் கையருகில் செத்து விழுந்து கிடப்பதைக் கண்ட வழிவிட்டானுக்கு, வெறி உச்சிக் கொம் பேறியது.
''டேய்... விடாதீங்கடா... வெள்ளைக்காரப் பயல் எவனையும் உயிரோட விடாதே... கொல்லு... எல்லாப் பேரையும் கொல்லு!'' -கத்திய வேகத்தில் எல்.எம்.ஜி. கன் குண்டுகளை இறைத்தது.
தப்பி, பரளச்சி பாதையில் ஓடிய போலீசு களை சோலை மறித்தான். ''எவனையும் விடாதே... போடு!'' போட்டுத் தள்ளினார்கள். ''தங்கச்சாமியை கொன்னுட்டான்ங்கடா... கொன்னவன்ங்களை விடாதீங்கடா...''
சுட்டு, சவமாக்கினார்கள். வானத்தில் வட்டமடித்த முனிகள், இரை எடுக்க தரை இறங்கின. தங்கச்சாமி செத்துக்கிடந்தான். பட்டாணி செத்துக் கிடந்தான். செங்குளத்து இளவட்டங்களோடு, நிறைய பேர் செத்துக் கிடந்தார்கள். முனிகள் கூடி, மௌனமாக நின்றன.
வழிவிட்டான் கதறினான். சோலை கதறினான். எல்லோரும் அழுதார்கள். பிணங்களைச் சுமந்த வண்டிகள், பெருநாழி நோக்கிக் கடகடத்தன.
கல்லடிபட்ட அணில்குஞ்சு போல், தலை குணங்கி செத்துக்கிடந்தான்
டி.எஸ்.பி-யான பானர் மேன். விளாத்திகுளம் வைப்பாற்று மணலுக்குள் லாரிகள் சிக்கிப் புகைந்து கொண்டிருக்க, போலீசுகள் சிதறிக் கிடந்தார்கள்.
அழகுபாண்டியன், ஒற்றை ஆளாக ரண சிங்கத்தை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு 'தங்ங்... தங்ங்...' என குதியாகக் குதித்தான்.
''ஏய்... ஏய்... போதுமப்பா முதலாளி. இறக்கி விடு.'' இளநீர் நிலவொளியில் முதன் முதலாக ரணசிங்கத்தின் முகத்தில் சிரிப்பைக் கண்ட துளசிபட்டி வீரர்கள், நாணல் புதர்களும் உடங்காடும் சிலிர்க்க ஆரவாரித்தார்கள்.
இருளாண்டியும் செல்லமுத்துவும்ஏறிவந்த குதிரைகள் ஆற்றுக் கரையிலேயே நின்று கொண்டன. இருவரும் நடந்தே நெருங் கினார்கள். அழகுபாண்டியனின்தோளில் இருந்தவாறே இருவரையும் கண்டு கொண்டான் ரணசிங்கம்.
''செல்லமுத்து... இருளாண்டி... வாங்கப்பா. கமுதியும் பரளச்சியும் என்னாச்சு?'' -இருவரும் கத்து கத்தென கத்தினார்கள்.
''நம்ம... தங்கச்சாமி அண்ணேன்...''
-இருவருக்கும் நாவு எழவில்லை...
|