Published:Updated:

'புத்திர சோக' பிரபுதேவா

'புத்திர சோக' பிரபுதேவா

'புத்திர சோக' பிரபுதேவா
''என் மகன் தூங்குறான்!''
'புத்திர சோக' பிரபுதேவா
'புத்திர சோக' பிரபுதேவா

'நடனப் புயல்' பிரபு தேவாவின் குடும்பத்தில் காலன் இப்படியரு 'ருத்ரதாண்டவம்' நடத்துவான் என யாரும் எதிர் பார்க்கவில்லை!

டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கு பிரபுதேவாவின் மூத்த மகன் விஷால் அகால மரணம் அடைய... திரையுலகமே அன்று கறுப்பு காஸ்ட்யூமில் துக்கத்தை வெளிப்படுத்தியது!

பிரபுதேவாவின் மூன்று மகன்களில் மூத்தவன் விஷால். திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். சின்னஞ்சிறு வயதிலேயே விஷாலைப் பற்றிக்கொண்ட எலும்புப் புற்றுநோய்தான் அவன் உயிரைப் பறித்துவிட்டது.

''நாலாம் தேதி காலைல ஏழு மணிக்கு ஒரே டைம்ல, பின்னி மில்லுல விஜய் அறிமுகமாகிற டைட்டில் பாட்டையும், கிருஷ்ணவேணி ஹவுஸ்ல விஜய் அப்பா இறந்து போற மாதிரியும் 'வில்லு' படத்துக்காக ரெண்டு இடத்துல ஷ¨ட்டிங் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அதற்காக முதல்நாள் இரவு உதவி இயக்குநர்களோடு டிஸ் கஷனில் இருந்த பிரபுதேவா, அந்த காட்சிக்குத் தேவையான பாடை, மாலை, கோடித்துணி போன்றவற்றை ரெடி செய்து கொண்டிருந்தார். அப்போ விஷால் போன் பண்ணி, 'என்னாப்பா எங்கூட இருக்கவே மாட்டேங்குற... நாளைக்கு பூரா என்கூடவே இருக் கணும். நீங்க வர்ற வரைக்கும் நான் தூங்கவே மாட்டேன்'னு சொன்னான். டைரக்டர் வீடு போய் சேர லேட்டாயிடுச்சு. எப்போது போனாலும்

கொஞ்ச நேரம் தூங்குற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, அப்புறமா திடீர்னு கண்ணு முழிச்சு குபீர்னுசிரிப்பது விஷாலின் வழக்கம். அதுமாதிரி அன்னிக்கும் விளையாடுறான்னுதான் பிரபு நெனச்சிருக்கார். ரொம்ப நேரமாகியும் அவன்

விழிக்கல. அதிர்ச்சியானவர் அசைச்சு பார்த்திருக்கார். ஒண்ணும் தெரியல... பக்கத்துல இருக்குற டாக்டருக்கு போன் பண்ணி அழைச்சுருக்கார். டாக்டரோ, 'நான் வரமுடியாது. நீங்க வேணா பேஷன்ட்டை என்கிட்டே அழைச்சிட்டு வாங்க'னு சொல்லியிருக்கார். இவங்க பதறிக்கிட்டு போனா... விஷால் ஏற்கெனவே இறந்துட்டதா டாக்டர் சொல்லிட்டார்!'' என அந்த அதிகாலையில் நடந்த அஸ்தமனத்தை விளக்கினர் 'வில்லு' பட யூனிட்டார்.

விஷாலின் திடீர் மரணம் பிரபுதேவாவை நிலைகுலைய வைத்துவிட்டது. துக்கம் விசாரிக்க வந்த அனைவரிடமும், 'மாலை போடக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாது. என் மகன் சாகலை. அவன் தூங்குறான்' என புத்திரசோகத்தில் பேதலித்துக் கொண்டிருந்தார் பிரபுதேவா.

ரஜினி மட்டும் பிரபு தேவாவைத் தேற்றி, மாலையை விஷாலுக்கு அணிவித்தார். பொதுவாக இறப்பு நிகழ்ச்சிக்கு செல்வதை விரும்பாத ரஜினி, விஷாலுக்கு குடும்பத்தோடு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்! அப்போது, ''பாக்கறதுக்கு பேஷன்ட் மாதிரியே தெரிய மாட்டானே. ஜம்முன்னு இருப்பானே! நல்லகுரோத், ச்...ச்...சே அவனுக்குப்போய் இப்படி ஆயிடுச்சே!'' என்று சுருங்கிய நெற்றிப் பொட்டில் கைவைத்துக் கண் கலங்கினார்.

'வில்லு' நாயகன் விஜய், செய்தியைக் கேள்விப்பட்ட வுடன் அதிகாலையே மனைவி சங்கீதாவுடன் ஆஜராகி விட்டார். ''காலங்காத்தால, 'விஷாலுக்கு ப்ரீத்திங்

'புத்திர சோக' பிரபுதேவா

பிராப்ளமா இருக்கு. உடனே வாங்க'னு போன் வந்துச்சு. ஓடிவந்து பார்த்தா அதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சுடுச்சு. விஷால் ரொம்ப ரொம்ப ஷார்ப். ஆறாவது படிச்சாலும் சயின்டிஸ்ட் ரேஞ்சுக்கு எல்லா விஷயத்திலும் உள்ளே பூந்து, வெளியே வந்துடுவார். கொஞ்ச நாளுக்கு முன்னாடி 'வில்லு' ஷ¨ட்டிங் பாக்க சுவிட்சர்லாந்து வந்திருந்தார். அப்போ எல்லாருகிட்டேயும் ஜோவியலா பழகினார். பேசாம சுவிஸ்லேயே இருந்திருந்தா நல்லாயிருப்பாரோ என்னவோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது!'' என்றார் விஜய்.

பிரபுதேவாவின் குடும்ப நண்பர்களிடம் பேசினோம். ''ரெண்டு வருஷமாவே விஷாலுக்கு எலும்புல கேன்சர் இருந்திருக்கு. அதுக்கு சிகிச்சை கொடுத்துட்டு வந்திருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட லண்டன்ல ரத்தத்தை டயாலிசஸ் பண்ணினாங்க. அதுக்கப்புறம் சிங்கப்பூர்ல சிகிச்சை அளிச்சாங்க. அவன் எங்கெங்கே போக ஆசைப்பட்டானோ அந்த நாட்டுக்கெல்லாம் பிரபுதேவா அழைச்சுட்டு போனார். ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் அவன் ஆசைப்பட்டுக் கேட்ட லேட்டஸ்ட் மாடல் காரான 'செவர்லே' கறுப்பு கார் வாங்கிக் கொடுத்தார். அந்த கார்ல நேத்திக்கு 'ஹாய்யா' சாய்ஞ்சுகிட்டு சிரிச்சுக்கிட்டே ஒரு ரவுண்ட் போயிட்டு வந்தான். மறுநாள் கார் அவனுக்காக வாசலிலேயே காத்துக்கிட்டிருக்கு, விஷால்தான் கார்ல ஏறாம பச்சைமூங்கில் பாடையில படுத்துக் கிட்டுப் போயிட்டான்!'' என்று கதறினார்கள்.

பிரபுதேவாவைப் போலவே, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மகன் சித்தார்த்தை பொசுக்கென்று பறிகொடுத்து விட்டு, இப்போது மகன் அஸ்தியை வைத்து பழைய மகாபலிபுரச் சாலையில் நினைவு மண்டபம் எழுப்பி உள்ளார் பிரகாஷ்ராஜ். அவர்தான் பிரபு தேவாவுடன் இருந்து கடைசி காரியங்களையெல்லாம் கவனித்தார்.

''மகனைப் பறிகொடுத்த துயரத்தை நாலுவருஷமா அனுபவிச்சிட்டு வர்றேன். ஒவ்வொரு நாளும் 'கடவுளே, எனக்கு கொடுத்த இந்த சோகத்தை யாருக்குமே தராதே'ன்னு வேண்டிப்பேன். இப்போ அதே துயரத்தை ஏன்தான் இறைவன் பிரபுவுக்கு கொடுத்தான்னு தெரியலை. பொதுவா அப்பாவைத்தான் மகனுங்க வழியனுப்பி வைப்பாங்க. நாங்க என்னடான்னா மகனுங்களை அனுப்பிட்டு திக்குத்தெரியாம பரிதவிச்சு நிக்கிறோம். உலகத்துலேயே மிகப்பெரிய துயரம், பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுக்கறதுதான். அந்த துக்கத்தை இப்போ விஷால் மூலமா நான் ரெண்டாவது தடவையா உணர்ந்து துடிக்கிறேன்!'' என்றபோது பிரகாஷ்ராஜின் கண்கள் பனித்தன!

- எம். குணா