Published:Updated:

அருந்ததியர் ஆவல் என்ன?

அருந்ததியர் ஆவல் என்ன?

அ.மார்க்ஸ்
அருந்ததியர் ஆவல் என்ன?
அருந்ததியர் ஆவல் என்ன?
அருந்ததியர் ஆவல் என்ன?

னி இடஒதுக்கீடு வேண்டுமென்கிற அருந்ததியர் களின் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இதற்கென நியமிக்கப்பட்ட நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனன் ஆணையம், கடந்த 22-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்த உடனேயே முதல்வர் கருணாநிதி, 'அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகித ஒதுக்கீடு அளிக்கப்படும்!' என அறிவித்தார்.

அருந்ததியர் அமைப்புகள் 'இது மிகவும் குறைவு' என்று அதிருப்தி தெரிவித்திருக்கின்றன. அவர்களின் கணக்குப்படி மொத்தமுள்ள ஆதிதிராவிடர்களில், மூன்றில் ஒரு பங்கு அருந்ததியர்கள். அதாவது தமிழக மக்கள் தொகையில் ஆறு சதவிகிதம். எனவே, பட்டியல் சாதியினருக்கான 18 சதவிகித ஒதுக்கீட்டில் ஆறு சதவிகிதம் அருந்ததியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை!

ஆனால், ஒட்டுமொத்த அருந்ததியர்களின் தொகை 2.8 சதவிகிதம்தான் என ஜனார்த்தனன் ஆணையம் மதிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை அருந்ததியர் அமைப்புகள் மறுக்கின்றன. ''அருந்ததியர்களுக்குள் ஏகப்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. ஜனார்த்தனன் ஆணையமோ சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மாடிகா, தோட்டி ஆகியோரை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. மற்ற பிரிவினரையும் கணக் கிலெடுக்க வேண்டுமென இந்தக் கோரிக்கையை முன் வைத்துத் தீவிரமாகப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

அருந்ததியர் பலர் இதுவரையிலான கணக்கெடுப்புகளின்போது தம்மை ஆதிதிராவிடர்கள் என்றே பதிவு செய்துள்ளனர். இந்த அடிப்படையில் மேற்கொண்ட ஜனார்த்தனன் ஆணையத்தின் மதிப் பீடு தவறானது'' என்கிறார், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான்.

இன்று நம்மிடம் இருக்கும் தரவுகளின்படி இந்த சர்ச்சைக்கு முடிவு காண முடியாது. இடஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் எதிரான தீர்ப்புகள் வந்துள்ளதற்கு, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கீடு இங்கே இல்லாததே காரணம். நீதிமன்றங்களும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி இந்த நிலை நீடித்துவருகிறது. பிரிட்டனில், சென்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்புவரை மதவாரியாக இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்தியாவில் மதரீதியான அரசியலை அவர்கள் செயல்படுத்த வேண்டியிருந்ததால், இப்படிச் செய்தார்கள்! அதேசமயம், இந்திய சமூகத்தின் அடிப்படைப் பிரிவுகளாக இருந்த சாதி, சென்சஸ் கணக்குகளில் புறக்கணிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிலும் இதே நிலை தொடர்ந்தது. இது இன்று பல சிக்கல்களுக்குக் காரணமாகியுள்ளது.

இந்தப் பிரச்னையில் கர்நாடக மாநில அரசின் சமீபத் திய நடவடிக்கை ஒன்று நமக்கு முன்னுதாரணமாக உள்ளது. அம்மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான ஆணையத்துக்கு சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றை நடத்த அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.18 கோடி குடும்பங்களை சந்தித்து, ஒரு லட்சம் பணியாளர்கள் இந்தத் தகவலைச் சேகரிப்பார்கள்.

சாதி மற்றும் மதவாரியான விவரங்கள் தவிர, பக்காவான வீடுகளில் வசிக்கிறார்களா, குடிசைகளில் வசிக்கிறார்களா, எவ்வளவு படித்திருக்கிறார்கள், என்ன வேலை, எவ்வளவு நிலம் உள்ளது, பெண்களின் பெயர் களில் நிலம் உள்ளதா என்றெல்லாம் 64 விவரங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் சேகரிக்கப்படவுள்ளன.

இதற்கான நிதி? தமிழக அரசு கவனிக்கவேண்டும்... 21.5 கோடி ரூபாயை மத்திய அரசு இதற்கென ஒதுக்கியுள்ளது! 1947-க்குப் பிந்திய வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு மாநிலத்தில் கணக்கெடுப்பு நடக்கிறது. முந்தைய கர்நாடக அரசு இந்தப் பணிக் கென இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கியது. எடியூரப்பா மேலும் 17.5 கோடி ரூபாய் ஒதுக்குவதாக வாக்களித்துள்ளார்.

இதன் இன்னொரு முக்கியமான அம்சம், இந்தக் கணக்கெடுப்பு வீடுகளோடு நின்றுவிடுவதில்லை. 176 தனியார் நிறுவனங்கள் மற்றும் 120 அரசு நிறுவனங்களுக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. தங்கள் ஊழியர்களின் சாதி மற்றும் மதவாரி விவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும். இன்ஃபோசிஸ், விப்ரோ, டெல், யாஹ¨, ஐ.பி.எம். முதலான முக்கிய மென்பொருள் நிறுவனங் கள், இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் முதலான அரசு நிறுவனங்கள் ஆகியனவும் இதில் அடக்கம்.

இம்முயற்சிக்கு எதிர்ப்புகளும் இருக்கின்றன. சென்ற மே 15-க்குள் இந்தத் தகவல்களை அனுப்ப வேண்டுமென மார்ச் மாதத்திலேயே கடிதங்கள் அனுப்பப்பட்டபோதும், 11 தனியார் நிறுவனங்கள் மட்டுமே அதைக் கடைப் பிடித்திருக்கின்றன. 18 கடிதங்கள், 'முகவரியில் யாரும் இல்லை' என்று திரும்ப வந்துள்ளன. மூன்று நிறுவனங்கள், 'இத்தகைய தகவல்களை அனுப்ப இயலாது' என்று தெரிவித்துள்ளன. எல்லா நிறுவனங்களுக்கும் மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அரசு தரப்பிலிருந்தும் உரிய ஒத்துழைப்பில்லை. ஆணையத்தின் உறுப்பினர் செயலரான டாக்டர் நாகாம் பிகா தேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார். கணக் கெடுப்புக்குத் தேவையான 58,000 ஆசிரியர்களை ஒதுக்க கல்வித்துறை மறுத்திருக்கிறது. தனியார் நிறுவனங் களிடம் இந்தப் பணியை 'அவுட் சோர்ஸ்' செய்யுமாறு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால் அறிக்கை வெளிவருவதற்கு முன்பே உண்மை கசிய வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தில் நீதிபதி ஜனார்த்தனனின் அனுபவங்கள் என்ன என்று நமக்குத் தெரியவில்லை. அவர் கேட்ட விவரங்கள் எல்லாம் தயக்கமில்லாமல் கொடுக்கப்பட்டனவா? இப்படியான தகவல்களைப் பெறுவது உலகில் இல்லாத அதிசயம் அல்ல. அமெரிக்க நிறுவனங்கள் ஆண்டுதோறும் தம்முடைய நிறுவனத்திலுள்ள பணியாளர்களில் எவ்வளவு பேர் கறுப்பர், எவ்வளவு வெள்ளையர், ஹிஸ்பானியர், பிற நாட்டார் எவ்வளவு என்றெல்லாம் தகவலை வெளியிட வேண்டும். யாரேனும் இப்படியான காரணங்களால் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என உணர்ந்தால் வழக்குத் தொடரலாம். இதற்கெனவே 'சம வாய்ப்பு ஆணையம்' முதலான அமைப்புகள் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் செயல்படுகின்றன. தவறு செய்யும் நிறுவனங்களைத் தண்டிக்கும் அதிகாரம் உடைய அமைப்புகள் இவை. சச்சார் குழு அறிக்கையிலும் இப்படி யான ஒரு ஆணையம் இந்தியாவுக்குத் தேவை என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் அமெரிக் காவைச் சுட்டிக்காட்டும் நம்முடைய நிறுவனங்கள், இதைக் கணக்கில் கொள்ளவேண்டும்.

கர்நாடக மாநில அனுபவங்களை ஆராய்ந்து, இதுபோன்ற கணக்கெடுப்பை மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழகத்திலும் மேற்கொண்டால், பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

அருந்ததியர்களின் பிரச்னை இந்த மூன்று சதவிகித இடஒதுக்கீட்டுடன் முடிந்துவிடப் போவதில்லை. தலையில் மலம் சுமக்கும் கொடுமையும், சாக்கடைக்குள் இறங்கித் தூய்மை செய்யும் அவலமும் ஒழிக்கப்படுதல் எல்லாவற்றையும்விட முக்கியமானது. தவிரவும், அரசுப் பணியிலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு ஏற்கெனவே அருந்ததியர்கள் மூன்று சதவிகிதப் பயனைப் பெறுவதாகவும் அரசு சொல்லிவிடக் கூடாது. முதல் மற்றும் இரண்டாம் பிரிவு அரசுப் பணிகளிலும் உரிய ஒதுக்கீடு நிறைவேற்றப்படும்போதுதான் அருந்ததியர் களுக்கு சமூக நீதி கிடைத்ததாகச் சொல்ல முடியும்!

-