Published:Updated:

போர் தொடுக்குமா இந்தியா?

போர் தொடுக்குமா இந்தியா?

ரவிக்குமார் எம்.எல்.ஏ.
போர் தொடுக்குமா இந்தியா?
போர் தொடுக்குமா இந்தியா?

மும்பை மீது தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும்பயங்கரவாதிகளின் பட்டியலை அந்த அரசிடம் அளித்து, அவர்களை ஒப்படைக்குமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சொன்னபோதிலும், இந்தியாவின் இந்த வேண்டுகோளை அவர்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்தியா இன்னும் போதுமான தகவல்களை அளிக்கவில்லை என்று தட்டிக்கழிக்கும் போக்கிலேயே அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

போர் தொடுக்குமா இந்தியா?

''மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரோடு பிடிபட்டிருக்கிறாரே..?''என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் கேட்கப்பட்டபோது, ''அதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதையும் இந்தியா எங்களிடம் அளிக்கவில்லை. அவர் நாடில்லா மனிதர். தீவிரவாதத்துக்கு நாடு என்ற அடையாளமெல்லாம் கிடையாது. நாங்களே அந்த தீவிரவாதத்தில்பாதிக்கப்பட்டவர் கள்தான்!'' என்று மிக சாமர்த்திய மாகபதிலளித்துஇருக்கிறார்.

இந்தியாவில் இப்போது அதிகரித்துவரும் பயங்கரவாத சம்பவங்களுக்கு

பாகிஸ்தானின் அரசியல் சூழல் ஒரு முக்கியக் காரணமாகும். அங்கே இப்போது அதிகாரம் ஒரு மையத்தில் இல்லை. ஒரு புறம் ராணுவம், இன்னொரு புறம் ஐ.எஸ்.ஐ., மற்றொரு புறம் சர்தாரி... இவர்கள் எல்லோருக்கும் அப்பால் நவாஸ் ஷெரீப் என்று ஏகப்பட்ட அதிகார மையங்கள் அங்கே இருப்ப தால், யார் என்ன முடிவை எடுப்பது, அதை யார் செயல்படுத்துவது என்ற குழப்பம் நிலவுகிறது. 'முஷாரப் ஆட்சியை விட்டுப்போனால் அங்கே ஜனநாயகம் மீட்கப்பட்டுவிடும்... ராணுவத்தின் ஆதிக்கம் குறையும்' என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு நேர்மாறான குழப்ப நிலைதான் இப்போது பாகிஸ்தானில் நிலவுகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு அங்கே தம்முடைய முகாம்களை அமைத்திருக்கும் பயங்கரவாத இயக்கங்கள் தங்களுடைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. அமெரிக்கா நேரடியாக பயங்கர வாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துகிறேன் என்று ராணுவ நடவடிக்கையில் ஈடுபட் டுள்ள போதிலும், அதனால் பெரிய பலன் எதுவும் ஏற்படவில்லை.

பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ-யின் செல்வாக்கைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் கூட மும்பை தாக்குதலுக்கு காரணமாகியிருக்கலாம் என்ற யூகம் எழுந்துள்ளதை முன்பேநாம்குறிப்பிட்டிருந்தோம். அதுவும் இப்போதுவலுப்பட்டு இருக்கிறது. லஸ்கர்-இ-தொய்பா, அல்கொய்தா முதலான இயக்கங்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-யினுடைய ஆதரவில்தான் செயல்படுகின்றன என்பது எல்லோருக்கும்தெரியும். மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் லஸ்கர்-இ-தொய்பா வால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ள நிலையில், இதில் ஐ.எஸ்.ஐ-யின் மர்மக் கரங்கள் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது!

மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற காரணத்தை வைத்து இங்கே உடனடியாக அமெரிக்காவின் உளவு அமைப்பான

எஃப்.பி.ஐ-யைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டார்கள். அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டால், அதை நேரடியாக விசாரிப்பதற்கு அந்த உளவு அமைப்புக்கு அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டம் அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் இங்குவிசா ரணையில் ஈடுபட்டிருக் கிறார்கள். இந்திய பிரத மரை ஜான் மெக்கெய்ன் சந்தித்ததும், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கான்டலிசா ரைஸ் இங்கே வந்ததும் அமெரிக்கா இந்த விஷயத்தை எந்த அளவுக்கு சீரியஸாலக எடுத்துக்கொண்டுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள். கான்டலிசா ரைஸ் பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்து பேட்டியளித்ததும் கவனத்துக்கு உரியதாகும்.

இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதால், அந்த நாட்டிலிருந்தும் இந்த விவகாரத்தின் மீது தீவிர கவனம் காட்டப்படுகிறது. பாகிஸ்தானின் பங்கு பற்றி இங்கே இப்படி பேசிக்கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் அரசோடும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறது! பாகிஸ்தானுக்குச் சென்ற அமெரிக்க துணைத்தளபதி மைக் முல்லனிடம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, தம்முடைய நாட்டின் நிலையை விளக்கியிருக்கிறார். 'மும்பைத் தாக்குதலில், தம்முடைய அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு எதுவுமில்லை என்று அவர் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அமெரிக்க துணைத்தளபதி பாகிஸ் தானின் ராணுவ தளபதி பர்வேஸ் கயானியையும், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது துரானியையும், ஐ.எஸ்.ஐ. அமைப்பின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஷ¨ஜா பாஷாவையும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். மும்பை சம்பவத்தை வைத்து பாகிஸ்தான்மீது நெருக்குதல் ஏற்படுத்த முயற்சித்தால், அதற்கு பாகிஸ்தான் அடிபணியாது என்ற விதத்திலேயே அந்த நாட்டின் எதிர்வினை அமைந்திருக்கிறது. ''பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமெரிக்கத் தலைமை யிலான நேட்டோ படைகளின் தாக்குதல் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பதில் அவர்களுக்கு மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அந்தத் தாக்குதல்களை நிறுத்தவேண்டும்!'' என்று மைக் முல்லனிடம் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

தன்மீது நெருக்குதலை அதிகப் படுத்தினால், அதை சமாளிப்பதற்கு பாகிஸ்தான் 'பிளாக்மெயில்' தந்திரத்தை கையாண்டு வருகிறது. இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்தால், ஆப்கானிஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் தனது துருப்புகளை அங்கிருந்து வாபஸ்பெற்று அவற்றை இந்திய எல்லைக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சொல்லிவருகிறார்கள். ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நிறுத்தியுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான துருப்புகள் நேட்டோ படைகளுக்கு உதவி வருகின்றன. அவற்றின் பாதுகாப்பில்தான் நேட்டோ படைகள் அங்கே செயல்படுகின்றன. அங்கிருந்து பாகிஸ்தான் துருப்புகள் வாபஸ் பெறப்பட்டால், ஆப்கானிஸ்தானில் தலிபான் கள் மீது நேட்டோ படைகள் நடத்திவரும் தாக்குதல் பலவீனமடைவது மட்டுமின்றி... அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் உருவாகி விடும். அது மறை முகமாக அல்கொய்தாவுக் கும், தலிபான் களுக்கும் ஊக்கமளிப் பதாக அமையும். இதை உணர்ந்திருப்பதால்தான் அமெரிக்கா, இந்தியா-பாகிஸ்தான் நாடு களுக்கிடையே போர் எதுவும் உருவாகிவிடக் கூடாது என்று அரும் பாடுபடுகிறது. அது மட்டுமின்றி, இந்தி யாவும் பாகிஸ்தானும் அணுஆயுத நாடுகளாக இருப்பதால், இவற்றுக்கிடையே ஏற்படும் போர் அணுஆயுதப் போராக உருமாறிவிடக் கூடும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு இருக்கிறது.

மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ் தானுக்கும் இந்தியாவுக்குமிடையே உறவுகள் மேலும் சீர்கெட்டு ஒரு போர்ச்சூழல் உருவாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் உள்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும், மகாராஷ்டிர முதல்வரும், துணை முதல்வரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும், இந்தியா இதை அலட்சியமாகக் கருதவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக இந்தியா பேசிவருவது யுத்தம் பற்றிய யூகங்களுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. பயங்கரவாதிகளை ஒழிக்க எத்தகைய நடவடிக்கையையும் எடுப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என நம்முடைய அரசின் சார்பில் கூறப்பட்டிருப்பதும் கவனத்துக்கு உரியதாகும்.

மும்பைத் தாக்குதல் இது வரையிலான பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து பண்பு ரீதியாக வேறுபட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். மிகவும் வெளிப்படையான சவாலாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. சம்பவக் காட்சி களைத் தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்கள் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே எண்ணுகிறார் கள். பாகிஸ்தானுக்குள் இருப்பதாகச் சொல்லப்படும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்கா செய்வது போல இந்தியாவும் நேரடித் தாக்குதல்களை நடத்தவேண்டும் என்பது குறிப்பாக இந்திய இளைய சமுதாயத்தினரின் கருத்தாக இருக்கிறது. அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமாவும்கூட இப்படித் தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா வுக்கு உரிமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

வடமாநிலங்களில் தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் மும்பைத் தாக்குதல் நிகழ்ந்த காரணத்தால் அரசியல் ரீதியாக காங்கிரஸ் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வரும் பட்சத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அது முன்னோட்டமாக அமைந்துவிடலாம். எனவே, தன்னுடைய வெற்றிவாய்ப்பை அதிகரிப்பதற்காக பாகிஸ்தானோடு கார்கில் போரை அப்போது ஆட்சியில் இருந்த பி.ஜே.பி-யினர் நடத்தியது போல சிறு அளவிலான போர் ஒன்றை நடத்திப்பார்க்கலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் அரசு தள்ளப்படலாம். அப்படியரு நிலையை மத்திய அரசு மேற்கொண்டால் அது மிகப்பெரிய தவறாகவே முடியும். துருப்புகளை எல்லைப் பகுதியை நோக்கி நகர்த்துவதற்கே பலஆயிரம் கோடி ரூபாய்களை நாம் செலவு பண்ணவேண்டியிருக்கும். யுத்தம் என்று ஆரம்பித்தால், அது எப்படிப் போகும் என்று யாரும் உறுதியாகச் சொல்லமுடியாது. கார்கில் யுத்தத்திலும்கூட இந்தியாவுக்குத்தான் அதிகப்படியான சேதம் நேர்ந்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

பாகிஸ்தானா... இந்தியாவா? என்ற கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகுவது சரியாக இருக்காது. அதுபோல இந்தப் பிரச்னையை அமெரிக்காவின் பார்வையில் இருந்து நாம் அணுகக்கூடாது. ஏனென்றால், அமெரிக் காவுக்கு இந்தியாவும் தேவை, பாகிஸ்தானும் வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே அது விரும்புகிறது. இந்தியாவோடு அணுசக்தி ஒப்பந்தத்தைப் போட்ட அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதற்கு இருந்துவந்த தடையையும் அமெரிக்கா விலக்கிக்கொண்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அமெரிக்க நோக்கிலான அணுகுமுறை எந்தவித நன்மையையும் இந்த இரண்டு நாடுகளுக்குமே தராது. அது அமெரிக்காவுக்கு மட்டுமே பயன் படும்.

பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா எப்படியெல்லாம் தனது அதிகாரத்தை வலுப்படுத்தி வருகிறது என்பதை இந்தியா கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாத சம்பவங்களை சாக்காக வைத்து உதவி செய்கிறேன் என்ற பெயரில் முதலில் அமெரிக்கா மூக்கை நுழைக்கும். அதன் பிறகு, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு உங்களால் முடியாது என்று சொல்லி, தானே அந்த வேலையில் ஈடுபடப்போவதாகச் சொல்லும். ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் என்று இதற்கான உதாரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பிறகு அந்த நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கின்றன என்பதே உண்மை. அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி அங்கே குளிர்காய்வதுதான் அமெரிக்காவின் தந்திரமாக இருந்து வருகிறது. அதற்கு இந்தியா பலியாகிவிடக் கூடாது.

இப்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இந்தியாவில் எதிர்காலத்தில் வந்துவிடாமல் தடுக்க வேண்டுமென்றால் அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்கும் இந்திய அணுகுமுறை மாறவேண்டும். பயங்கரவாதப் பிரச்னையை ஐ.நா-வுக்குக் கொண்டு சென்று பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அந்நாட்டின்மீது பொருளாதாரத் தடைவிதிப்பதற்கு ஐ.நா-வை இந்தியா வலியுறுத்தவேண்டும். தற்போது இந்தியாவில் நிலவும் பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் மனநிலையைத் தம்முடைய குறுகிய அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதே நம்முடைய அரசியல் கட்சிகள் செய்யவேண்டிய முதல் பணி.