என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

''மக்களுக்கு நல்லதைத்தான் கொடுக்கணும்!''

கவின் மலர்படம் : பா.காளிமுத்து

##~##

''சந்திரரே சூரியரே எந்தாயி சோதரரே
நெஞ்சுக்குழி வாடுதே - அம்மா
- ஈரக்குலை ஆடுதே

வேர்வை வெதச்சவரே
வெள்ளாமை கண்டவரே

காலங் கருப்பானதே - அங்கே
- பல தாலி அறுப்பானதே

பண்ணை முறை வாழ படுபாவி திமிரால
சாவுகள் மலிவானதே -
உயிர் சாம்பலும் கரியானதே

கால திசையிலெல்லாம் சாவோட ஓலம்
ஆளும் சாதிக்கு ஏதய்யா வீரம்
அதிகாரம் உங்களுக்கு அவமானம்!''

''மக்களுக்கு நல்லதைத்தான் கொடுக்கணும்!''

- கணீர்க் குரலில் உயிரை உலுக்கும் உணர்ச்சி ஏற்றிப் பாடுகிறார் 'தஞ்சை’ செல்வி. கீழ்வெண்மணியில் 44 விவசாயக் கூலிகளை எரித்துக் கொன்ற கொடூரத்தை மையப்படுத்தி, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய 'ராமையாவின் குடிசை’ ஆவணப் படத்துக்காக கவிஞர் தனிக்கொடியின் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்த 'தஞ்சை’ செல்வியின் கமர்ஷியல் அடையாளம் 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளுய்யா’ பாடல்!

இதோ... 'அழகர்சாமியின் குதிரை’ படத்தில் 'அடியே இவளே’ என்ற திருவிழா பாடலுக்கு உற்சாகம் சேர்த்துவிட்டு, 'அவன் இவன்’, 'மதுரை வேலு’, 'அம்புலி’ என்று அடுத்தடுத்து தத்தித் தாவத் துவங்கிவிட்டார்.      

'தஞ்சை’ செல்விக்கு புதுக்கோட்டை பக்கம் தெட்சிணாபுரம் கிராமம்.

''மக்களுக்கு நல்லதைத்தான் கொடுக்கணும்!''

''நான் படிச்சிக்கிட்டு இருந்தாலும், சின்ன வயசுல இருந்தே வயல் வேலைக்குப் போறதுதேன்... அப்ப கூட இருக்குறவுக பாடிக்கிட்டே வேலை செய்வாக. அப்படியே கேட்டுக் கேட்டுப் பாடுறதுதேன்!'' எனும் செல்வி, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ., வரலாறு பயின்றவர்.

''படிச்சு முடிச்சவுடனே அறிவொளி இயக்கத்துல சேர்ந்து தெருத் தெருவாப் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கேன்.  அப்போ தான் நெறைய மக்கள் பாட்டுக்களைக் கத்துக் கிட்டேன். அப்புறம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துல சேர்ந்து தமிழ்நாடு முழுக்கப் பயணிச்சு, சின்னச் சின்னக் கிராமத்துலகூட போய் த.மு.எ.க.ச கலை இரவுகளில் பாடி இருக்கேன். அப்போலாம் மக்கள் என் பாட்டை ரசிச்சுக் கேக்குறது ஆச்சர்யமா இருக்கும். அதுலயும் அவங்க பிரச்னையைப்பத்திப் பாடும்போது ரொம்ப லயிச்சுக் கேப்பாங்க. என்னை ரொம்ப மரியாதையோடு எதிர்கொள்வாங்க. சரி... நம்மளுக்கும் நல்லாத்தான் பாட வருதுன்னு அப்பத்தான் ஒரு நம்பிக்கை வந்தது. அப்புறம்தான் தனியா 'புதுகை செல்வியின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி’ன்னு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த ஆரம்பிச்சேன். கோயில் திருவிழா, பிற விசேஷங்கள்னு நிறையப் பாட ஆரம்பிச்சேன். மக்கள் பாட்டு, பெண்கள் முன்னேற்றப் பாட்டு, நாட்டுப்புறப் பாட்டு, சினிமாப் பாட்டுன்னு கலவையா இருக்கும் என் நிகழ்ச்சி. ஆபாசமான பாட்டு எதையும் இதுவரை பாடியது இல்லை. இனியும் பாட மாட்டேன். மக்களுக்காகப் பாடும்போது அவங்களுக்கு நல்லதைத்தான் கொடுக்கணும்!'' என்று தன் இசைப் பயணக் குறிப்பு சொல்கிறார் செல்வி.

''எல்லாம் சரி... 'புதுகை’ செல்வி 'தஞ்சை’ செல்வியாக ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதை என்ன?'' என்று கேட்டால், வெட்கம் அப்பிக் கொள்கிறது அம்மணியின் கண்களில்.

''நான் தனியா நிகழ்ச்சி நடத்துறப்போதான் இவரு... அதாங்... தஞ்சை அய்யப்பன்... எங்க டீம்ல பாடுறதுக்கு வருவாரு. அவரும் 'தஞ்சை அய்யப்பன்’ கலைக் குழுன்னு ஒண்ணு நடத்திட்டு இருந்தார்.

''மக்களுக்கு நல்லதைத்தான் கொடுக்கணும்!''

அதுல நான் பாடப் போவேன். அப்படியே பழக்கம். ரெண்டு பேரும் ஒரே ஃபீல்டுல இருக்குறதால செட் ஆயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்குப் பெறகு, நான் தெட்சிணா புரத்துல இருந்து தஞ்சாவூருக்குப் பக்கத்துல இருக்குற திருச்சோற்றுத்துறைக்குப் போயிட்டேன். அதுல இருந்து 'தஞ்சை’ செல்வி ஆகிட்டேன்!'' என்கிறார்.

''எங்கே போனாலும் 'ஜில்லா விட்டு’ பாட்டைத்தான் பாடச் சொல்றாங்க. இளையராஜாவோட பாடல்களைக் கேட்டு வளர்ந்த எனக்கு, அவர் இசையில 'அழகர்சாமியின் குதிரை’ படத்தில் பாட வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். அதுலயும் எங்க வீட்டுக்காரரும் நானும் அந்தப் பாட்டுல ஒண்ணாப் பாடியிருக்கிறது ரொம்ப ரொம்ப சந்தோஷம்!'' என்று குழந்தையாகச் சிரிக்கிறார்!