விகடன் வரவேற்பறை
ஓடும் நதி - கலாப்ரியா
வெளியீடு: அந்திமழை, ஜி 4, குரு வைஷ்ணவி அபார்ட்மென்ட்ஸ்,
20, திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை-17.
பக்கங்கள்: 176. விலை:

135

கவிஞர் கலாப்ரியாவின் அனுபவங்களும் நிகழ்வுகள் குறித்த நினைவுகளாகவும் உள்ள பதிவுகளின் தொகுப்பு. மதுவும் இலக்கியமும் இட்டு நிரப்பும் இலக்கியவாதிகளின் உரையாடல் இரவு குறித்த கட்டுரையில் சுவாரஸ்யம் நிரம்பித் ததும்பி வழிகிறது! தாகூர், கல்யாண்ஜி, ந.விச்வநாதன், தாராசங்கர் பானர்ஜி, கி.ரா, மாயகாவ்ஸ்கி என்று திசைகளைத் தாண்டிய எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும் கலாப்ரியாவின் கவிதை வரிகள் எந்தச் சூழ்நிலையில் தோன்றின என்பது குறித்த தகவல்களும் வாசக ரசனையை உயர்த்துகின்றன. கலாப்ரியாவின் எழுத்துக்களுக்கு இணையாகவும் சமயங்களில் அதைத் தாண்டியும் புத்தகத்துக்கு அழகு சேர்த்திருக்கின்றன, மருதுவின் ஓவியங்கள்!
பிண்டம் - இயக்கம்: பாரதி மாறன்

மனநிலை பிறழந்த தன்னைப் பிண்டமாக நினைத்து, சிவனை வணங்கும் ஒருவரது வாழ்க்கையைத் தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். விறகின் வாசம், கல்லறையின் வாசம், சாணியின் வாசம் என விதவிதமான வாசனையைத் தேடித் திரியும் கதாநாயகனோடு, கூடவே அலைகிறது ஒரு நாய். சூழல், காலம் அறியாமல் திரிந்து, உறவுகளைத் துறந்து கடைசியில் சிவனே போற்றி என்று சிவன் கோயிலில் தஞ்சம் அடைகிறான் நாயகன். கதை இலக்கற்று அலைந்தாலும் தரமான ஒளிப்பதிவும், சரியான பின்னணி இசையும் அழுத்தமாய் கவனிக்க வைத்துவிடுகிறது.
உள்ளூர் மொழியில் உலக சினிமா! http://www.viki.com/

உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் உங்கள் மொழியி லேயே சப்-டைட்டிலுடன் வலம்வரும் மினித் தொலைக்காட்சி. இத்தளத்தில் இடம்பெறும் படங்களுக்கும் வீடியோ காட்சிகளுக்கும் இணைய வாசிகளே சப்-டைட்டில் எழுதவும், திருத்தவும் செய்யலாம் என்பது சிறப்பம்சம்!
லொள்ளு லுக்! http://www.luckylookonline.com/

வலைப்பூ முழுக்கவே துள்ளலும் எள்ளலுமான ஜாலிகேலி நடை. மொக்கை படத்துக்கும் மெனக்கெட்டு விமர்சனம் எழுதி, ப்ளஸ் மைனஸ் அலசி ஆராய்ந்து கடைசி வரி பஞ்ச்சில் நக்கல் தெளிப்பது இந்த வலைப்பூ ஸ்பெஷல். வைகோவின் தேர்தல் துறவறம், மரண தண்டனைக்கு எதிரான அலசல் என சீரியஸ் கட்டுரைகளும் உண்டு. நான்கு பதிவுக்கு ஒரு பதிவு ஏதாவது ஏடாகூடப் படங்களோடு இருப்பது ஒன்றே வலைப்பூவின் குறும்புக் குறை! உயிர்மை வழங்கும் 2011-க்கான சுஜாதா விருதுவென்ற வலைப்பூ!
அவன் இவன் இசை: யுவன்ஷங்கர் ராஜா
பாடல்கள்: நா.முத்துக்குமார் வெளியீடு: சோனி மியூஸிக் விலை:

99

ஒரே ரிதத்தில் 'ராசாத்தி போல அவ என்னைத் தேடி வருவா’ பாடல் முழுக்க உற்சாகம் தந்தியடிக்கிறது. பாடல் வரிகள் இல்லாமல் 'டியோ டியோ டோலே’ போன்ற மீட்டர் வார்த்தைகள் மட்டுமே ஒலிக்கும் தீம் மியூஸிக், ஆரம்பத்தில் மென் அதிர்வு தாளமாகத் தடதடத்து, பாதிக்கு மேல் டபடபக்கும் உறுமி மேளமாக அதிரச் செய்கிறது. 'இன்று வந்த பின்னாலும் நேற்றில் சென்று மிதக்கிறேன்’, 'முதல்முதல் என் வாழ்வில் மரணத்தைப் பார்க்கிறேன்’ போன்ற நா.முத்துக்குமாரின் வரிகளும் விஜய் பிரகாஷின் அடர்த்தியான குரலிலும் 'முதல் முறை பார்க்கிறேன்’ பாடலில் காதலின் வலி உணர்த்துகிறது. தெம்மாங்குத் தொனி கலந்து, குத்துப் பாடல் சாயலில் ஒலிக்கும் 'அவனைப்பத்தி நான் பாடப் போறேன்’ பாடலில் ஒலிக்கும் டி.எல்.மகராஜனின் குரலில் ஓவர்டோஸ் உற்சாகம்!