சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

இதற்கெல்லாம் காரணம்... இரும்புக்கை மாயாவிதான்!

சுரேஷ் சந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
சுரேஷ் சந்த்

புத்தகம்

நாகராஜகுமார்

``வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவுசெய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்துவருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றைப் பதிவுசெய்தார்கள். பின்னர் பேச்சுமொழி உருவானதும், வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் அவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் எழுத்துருக்கள் மூலமாக எந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாகப் பதிவுசெய்வது சுலபமாகிவிட்டது. இப்படி ஓவியங்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சம்பவங்களைப் பதிவுசெய்யும் இரண்டு வழிமுறைகள் நம்மிடையே இருந்துவந்தன. மனிதனின் முதல் தகவல் பரிமாற்ற வழிமுறையான ஓவியங்கள் மூலமாகக் கதை சொல்லும் ஒரு பாணிதான் காமிக்ஸ்.

குழந்தைப் பருவத்தைக் குதூகலமாக்குபவை காமிக்ஸ் புத்தகங்கள். தன்னம்பிக்கையையும், கற்பனைத் திறனையும், புதிய சிந்தனைகளையும் உருவாக்குவதில் காமிக்ஸ்கள் இணையற்றவை. உலகெங்கும் காமிக்ஸ் புத்தகங்களுக்கு ஏக வரவேற்பு இருந்த காலம் ஒன்று உண்டு. சிறியவர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு வயதினருமே காமிக்ஸ் புத்தகங்களுக்கு ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள்.

காமிக்ஸ்
காமிக்ஸ்

அப்படிப்பட்டவர்களில் ஒருவர், 60 வயதைக் கடந்த சுரேஷ் சந்த். ராஜஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்ட சுரேஷ், இப்போது வசிப்பது கோயம்புத்தூரில். 10 வயதில் காமிக்ஸ் படிக்கத் தொடங்கிய பழக்கம், இன்று 60 வயதைத் தாண்டிய பிறகும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தான் படித்த அத்தனை காமிக்ஸ் புத்தங்களையும் இன்றுவரை பத்திரப்படுத்திவைத்திருக்கிறார் இந்த மனிதர். அதோடு, அவற்றை முகநூலில் மற்றவர்கள் படிப்பதற்கு வசதியாகப் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்.

காமிக்ஸ் குறித்து நம்மிடம் பேசத் தொடங்கினார் சுரேஷ். “ஒரு காமிக்ஸ் புத்தகத்தைப் படிக்கும்போது, நாமே ஒரு கதைசொல்லியாக மாறிவிடுகிறோம். காமிக்ஸ் புத்தகங்கள் கட்டங்களால் (Panels) ஆனவை. ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்குக் கதை நகரும்போது, இரு கட்டங்களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியை நமது சிந்தனையின் கற்பனைக்கு என்று விட்டுவிடுகிறார்கள் படைப்பாளிகள். உதாரணமாக, டார்ஜான் ஒரு மரத்தின் விழுதைப் பிடித்துத் தொங்குவதாக ஒரு கட்டத்தில் இருக்கும். ஆனால், அடுத்த கட்டத்தில் அவர் இன்னொரு மரத்தில் இருப்பார். ஆக, இரு கட்டங்களுக்கு இடையே டார்ஜான் எப்படிச் சென்றிருப்பார் என்பதை நாம்தான் கற்பனை செய்து, யூகித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வரலாற்றுப் புத்தகத்தையோ, அறிவியல் கோட்பாட்டையோ படிப்பது போரடிக்கும். ஆனால், அது காமிக்ஸ் வடிவிலிருந்தால், எளிமையாக வாசித்துவிடலாம். யாராவது காமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தால், `பொம்மை போட்ட புத்தகத்தைப் பார்க்கிறான்’ என்று இன்றும் தமிழகத்தில் கிண்டல் செய்பவர்கள் உண்டு. அப்படி நானே பலமுறை கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறேன்.

வரலாற்றுப் புத்தகம்
வரலாற்றுப் புத்தகம்

என் அண்ணா, தான் படித்த காமிக்ஸ் புத்தங்களைச்சேகரித்து நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என்னிடம் கொடுத்தார். அப்போது தொடங்கிய பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

ஒருமுறை இரண்டு பீரோக்கள் நிறைய நான் சேர்த்துவைத்திருந்த காமிக்ஸ் புத்தகங்களை `வீட்டைச் சுத்தம் செய்கிறோம்’ என்கிற பெயரில் எடைக்குப் போட்டுவிட்டார்கள். அப்போது நான்பட்ட துயரம் கொஞ்சநஞ்சமில்லை. ஆனாலும் என் பழக்கத்தை நான் விடவில்லை. பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று பழைய காமிக்ஸ் நூல்களைத் தேடி அலைந்து வாங்குவேன். அப்படி வாங்கும்போது எடைக்குப் போடப்பட்டிருந்த என்னுடைய சில காமிக்ஸ் புத்தகங்கள் என் பார்வையில்பட்டன. நான் வாங்கிச் சேகரித்த புத்தகங்களை அந்தப் பழைய புத்தகக்கடையில் அதிக விலைகொடுத்து வாங்கியதை மறக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், `காமிக்ஸ் நூல்கள் வருங்கால சந்ததியினருக்கும் சென்று சேர வேண்டும்’ என்பதற்காக PDF Format செய்து, அவற்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதுவரை கிட்டத்தட்ட 750 புத்தகங்களைப் பதிவிட்டிருக்கிறேன். இதற்குச் சில நண்பர்கள் உதவுகிறார்கள். இன்னும் பதிவேற்ற வேண்டியவை நிறைய இருக்கின்றன. ஃபைனான்ஸ் தொழிலையும் கவனித்துக்கொண்டு இதையும் செய்ய வேண்டியிருக்கிறது.

`இந்திரஜால் காமிக்ஸ்’, `பால்கன் காமிக்ஸ்’, `அமர் சித்திர கதா’ எனத் தமிழில் காமிக்ஸ் இதழ்கள் 1960-களிலேயே ரெகுலராக வரத் தொடங்கிவிட்டாலும், 1972-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியான `இரும்புக் கை மாயாவி’தான் தமிழ் காமிக்ஸ் உலகுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியது. இங்கிலாந்தில், `The Steel Claw’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ் தொடர், தமிழகத்தில் பெற்ற வரவேற்பு கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப்போனால், இங்கிலாந்தில்கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் இரும்புக் கை மாயாவியின் பெயர் அட்டையில் இருந்தாலே புத்தகம் விற்றுத் தீர்ந்துவிடும். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கடைகளில் இரும்புக் கை மாயாவியைப்போலவே `தங்கக் கை மாயாவி’, `இரும்பு விரல் மாயாவி’, `தங்க விரல் மாயாவி’, `உலோகக் கை மாயாவி’, `நெருப்பு விரல் சிஐடி’ என ஏகப்பட்ட இமிட்டேஷன்கள் ஜொலித்தன. இந்த உள்ளூர் மாயாவிகளின் கதைப் புத்தகங்கள்கூட 10,000 பிரதிகள் விற்பனை என்ற இலக்கை சர்வசாதாரணமாகத் தொட்டன. இதற்கெல்லாம் `இரும்புக் கை மாயாவி’தான் முக்கியமான காரணம்.

சிவகாசியைச் சேர்ந்த பிரபலமான அச்சுத்தொழில் நிறுவனத்தின் இளம் வாரிசான சௌந்தர பாண்டியன், விலையுயர்ந்த பிரின்ட்டிங் மெஷின் ஒன்றை வாங்குவதற்காகச் சென்னைக்கு வந்தார். `அம்புலி மாமா’ இதழை வெளியிட்ட நாகிரெட்டி குழுமத்தினரிடம் அந்த மெஷின் இருந்தது. அதைக் கையாள, சென்னையில் தங்கிப் பயிற்சியெடுத்தார் சௌந்தர பாண்டியன். அப்போது அம்புலி மாமா குழுமத்திலிருந்து `பால்கன் காமிக்ஸ்’ என்ற இதழ் வெளியாகிக்கொண்டிருந்தது. அதில் வந்த சாம்பிள் காமிக்ஸ் கதையான `இரும்புக் கை மாயாவி’யைப் படித்தார் சௌந்தர பாண்டியன். பயிற்சியை முடித்த பிறகு, லண்டன் சென்று இரும்புக் கை மாயாவி கதைகளை இந்தியாவில் வெளியிட முறையான அனுமதி வாங்கினார். தமிழ் காமிக்ஸ் மற்றும் சிறுவர் இலக்கியத்தின் முதல் சூப்பர் ஸ்டாரான முல்லை தங்கராசன், சௌந்தர பாண்டியனுடன் கைகோக்க, 1972-ம் ஆண்டு, ஜனவரி மாதம் முத்து காமிக்ஸின் முதல் இதழில் `இரும்புக் கை மாயாவி’ வெளியானது. குடும்பத்தில் அனைவரும் படிக்கக்கூடிய தரத்திலான சர்வதேசச் சித்திரக்கதைகளை அழகுத் தமிழில் வெளியிட்டது முத்து காமிக்ஸ்.

சுரேஷ் சந்த்
சுரேஷ் சந்த்

1984-ம் ஆண்டில் தொடங்கி, 2005-ம் ஆண்டுவரை சுமார் 21 ஆண்டுகள் ராணிமுத்து காமிக்ஸ் வெளிவந்தது. 1984-ம் ஆண்டில் `லயன் காமிக்ஸ்’ எனும் புதியதோர் இதழ், முத்து காமிக்ஸ் நிறுவனத்திலிருந்து பிறந்தது. லயன் முத்து காமிக்ஸ் மூலம் உலகின் தலைசிறந்த பல காமிக்ஸ் தொடர்களை சரமாரியாகத் தமிழாக்கம் செய்துவந்தார் அதன் ஆசிரியர் எஸ்.விஜயன்.

இதற்கிடையில் பல்வேறு காமிக்ஸ் பதிப்பகங்கள் உருவாகின. காமிக்ஸ் நூல்களுக்கென்று சரியான வரைமுறையும், ஆங்கில நூல்களை சரியாக மொழியாக்கம் செய்ய ஆட்களும் இல்லாததால் இடையிலேயே நின்றுபோனது. இப்போது விற்பனையில் உள்ள ஜனரஞ்சக இதழ்கள் பல்வேறு கட்டங்களில் காமிக்ஸுக்கு என பல பக்கங்களை ஒதுக்கின. ஆனால், தொடர்ந்து வெளியிடவில்லை.

காமிக்ஸ் என்பது வெறும் பொம்மைப் புத்தகத்தைப் பார்ப்பது மட்டுமல்ல. காமிக்ஸ் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் காட்சிகள் வாயிலாக, இடம் சார்ந்த மற்றும் கருத்து சார்ந்தவற்றை உள்வாங்கிக்கொண்டு, அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு கதையாக கிரகித்துக்கொள்ள வேண்டும். காமிக்ஸ் படிப்பதால் நம் சிந்தனை வலுப்படும். ஒருங்கிணைந்த புரிந்துணர்வுக்கான திறன் கூடும்.

இன்று முன்னணிப் படைப்பாளிகளாக இருக்கும் பலரும் தங்கள் வாசிப்பை காமிக்ஸ்களில் இருந்து தொடங்கியவர்களே. கடந்த தலைமுறைவரை, எல்லோருக்கும் காமிக்ஸ் வாசிக்கும் வாய்ப்புகள் வாய்த்தன. இந்தத் தலைமுறையின் நேரத்தைத் தொலைக்காட்சி கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பறித்துக்கொண்டன. குழந்தைகளின் சின்ன விழிகளைத் தொலைக்காட்சியிலிருந்து விடுவித்து, புத்தகங்களால் மென்மையாக ஒற்றியெடுக்க வேண்டும். அதற்கான எளிய வழி, காமிக்ஸ் நூல்கள்” என்கிறார் சுரேஷ் வெகு அழுத்தமாக!