விகடன் வரவேற்பறை
இவன் ஒரு வரலாறு- தொகுப்பு: கு.பூபதி
வெளியீடு: தோழமை, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை-78.
பக்கங்கள்: 464 விலை:

300

பிரபாகரனை வெறுமனே துதி பாடியவர்களும், பயங்கரவாதி என முத்திரை குத்துபவர்களும் கட்டாயம் படித்தே ஆக வேண்டிய நூல் இது. அன்ரன் பாலசிங்கத்தில் இருந்து பொட்டு, நடேசன் வரை எழுதியிருக்கிற கட்டுரைகள் நிஜமான அரசியல் எழுச்சியை விரும்பும் இன்றைய தலைமுறைக்குப் பாடம். சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக சீறிக் கிளம்பிய இந்தப் புலியிடம் ஆக்ரோஷம் மட்டுமல்ல, அறிவுசார் அரசியலும் நிறைந்திருந்தது. யுத்த தந்திரங்களில் இருந்து அரசியல் முதிர்ச்சி வரை தேசியத் தலைவர் என்ற வார்த்தைக்கு பிரபாகரன் எவ்வளவு பொருத்தமானவர் என்பதைப் படிக்கும்போது நமது 'தமிழினத் தலைவர்’களின் ஞாபகம் வந்து ஆற்றாமை பொங்குவது இப் புத்தகத்தின் வெற்றி!
அணு உலையும் காதல் அலையும்!
http://padmahari.wordpress.com/

அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம், பாலியல் விழிப்பு உணர்வு எல்லாம் கலந்த கலவையான கட்டுரைகள் அடுக்கி இருக்கும் வலைப்பூ. ஜப்பான் சுனாமியின் தாக்கம், அணு உலை பாதிப்புகள் என்று ஆழமான கட்டுரைகளும் காதல் தொடங்குவது இதயத்திலா, கண்களிலா, மூளையிலா என்று விடை சொல்லும் அலசல்களுமாகக் கலந்து கட்டிய தகவல் பெட்டகம்!
பல பணி... பல மொழி! http://www.popling.net/

மற்ற பல பணிகளுக்கு இடையே உங்களுக்குப் பிற மொழிகளைப் பரிச்சயப்படுத்தும் தளம். பாப்-அப் ரிமைண்டர்கள் மூலம் கேள்வி-பதில் வாயிலாக ஒரு மொழியை இங்கு கற்றுக்கொள்ளலாம். இத் தளத்தில் உறுப்பினர் ஆவதோடு கற்பதற்கான மொழியைத் தேர்வு செய்வது மட்டுமே உங்கள் வேலை!
ஏழ்மை - இயக்கம்: எம்.கணேசன் வெளியீடு: ஆதிபுத்திரன் ஐயனார் மீடியாஸ்

தாம்பத்ய சுதந்திரம் இன்மையால் தனிக் குடித்தனத்துக்கு வற்புறுத்துகிறார் மருமகள். பெற்றோரைப் பிரிந்து வந்தால், அங்கு ஐந்து வயது மகன் மூலம் இடைஞ்சல். இரவெல்லாம் தூங்காமல் விளையாடிக்கொண்டே இருப்பவனைத் தூங்கவைக்க தூக்க மாத்திரை கொடுக்கிறார்கள். அதுவே பழக்கமாகத் தொடர, சிறுவன் என்ன ஆனான் என்பதைக் கருத்தோடு சொல்லி முடிக்கிறார்கள். அறிமுக முயற்சிக்கே உரிய குறைபாடுகள் இருந்தாலும், புதிய விஷயத்தைக் கையில் எடுத்ததற்காகப் பாராட்டலாம்!
Karthik - MUSIC I LIKE வெளியீடு: emi music விலை:

195

குழந்தைப் பருவத்தில் இருந்து தான் விரும்பிக் கேட்டு, ரசித்த பிரபலமான கர்னாடக இசைப் பாடல்களுக்கு முன்னும் பின்னும் கீ-போர்டு, நாகஸ்வரம், சாக்ஸபோன், தவில், தபேலா என்று கருவிகளை வாசிக்கவிட்டு, பாடும்போது வரிகளுக்குச் சேதாரம் இல்லாமல் பாடியிருக்கிறார் பின்னணிப் பாடகர் கார்த்திக். முத்துஸ்வாமி தீட்சிதரின் 'மகா கணபதிம்...’ நாட்டை ராகத்தில் பக்திபூர்வமாக ஒலிக்கிறது. மைசூர் வாசுதேவாச்சாரின் கமாஸ் ராகப் பாடலில் பாடகரின் குரல் ரம்மியம். அண்ணமாச்சார்யாவின் 'நானாட்டி’ பாடல், ரேவதி ராகத்தில் குழைகிறது. பாரதியாரின் மூன்று பாடல்களில் ஆரம்ப வரியை மட்டும் எடுத்துப் பாடியிருக்கிறார் கார்த்திக். டிசம்பர் சீஸனில் கார்த்திக் சபா மேடை ஏறிப் பாடலாம்! சும்மா கவர்ந்திழுக்கிறது குரல்!