ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சிதைகிறதா படுகர் சமுதாயம்?

நீலகிரியில் சூடாகும் மதமாற்ற விவகாரம்...

சிதைகிறதா படுகர் சமுதாயம்?
##~##

டிக்கிற வெயிலுக்கு ஆளாளுக்கு ஊட்டி யைத் தேடி ஓட... அங்கேயோ அதைவிட உஷ்ணமான விவகாரம் ஒன்று சுழன்று கொண்டு இருக்கிறது. அது, படுகர்கள் நடத்தும் மத மாற்றத்துக்கு எதிரான போராட்டம்! 

நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான படுகர் சமுதாய மக்கள், கட்டுப்பாடான வாழ்க்கை முறை, கலாசாரத்துடன், 'எங்க வழி தனி வழி’ என்று வாழ்பவர்கள். அவர்களை, கிறிஸ்துவ மதத்தினர் கட்டாய மதமாற்றம் செய்வதாகத் தகவல்கள் பரவவே, சலசலப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக, கடந்த மே 25-ம் தேதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, 'நாக்குபெட்டா படுகர் குல பாது காப்பு சங்கம்’ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சங்கத்தின் தலைவர் சந்திரனிடம் பேசினோம். ''இன, மத துவேஷம் அடிப்படையில நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. படுகர் சமுதாயத்தின் அடிப்படையே இந்து மதம்தான். எங்களுடைய கட்டுக்கோப்பான, ஒழுக்கமான கலாசாரம் யுனெஸ்கோ அமைப்பின் கவனத்தையே ஈர்த்தது ஆகும். 1831-ல் பழங்குடி மக்களாக அறிவிக்கப் பட்டிருந்த எங்களை, 100 வருடங்கள் கழித்து அநியாயமாகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து விட்டார்கள்.

சிதைகிறதா படுகர் சமுதாயம்?

இதனால், எங்கள் சமுதாயம் இழந்த சலுகைகளும், முன்னுரிமைகளும் அதிகம். இழந்த உரிமைகளைத்

சிதைகிறதா படுகர் சமுதாயம்?

திரும்பப்பெற பல வருடங்களாகப் போராடி வருகிறோம். இந்த நிலைமையில், சில வருடங்களாக எங்களை மதமாற்றப் பிரச்னையும் வாட்டி எடுக்கிறது. சில கிறிஸ்துவ அமைப்புகள் விதவைகள், நோயாளிகள், ஏழ்மை நிலையில இருக்கும் படுகர் சமுதாய மக்களைத் தேடிப்பிடித்து மூளைச் சலவை செய்தார்கள். 'எங்கள் மதத்துக்கு மாறினால், சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி செய்கிறோம்’ என்று சொல்லி ஆள் பிடிக்கிறார்கள்.

இப்படி மதமாற்றத்துக்கு ஆள் பிடிப்பது மூலம், வெளிநாடுகளில் இருந்து அவர்களுக்கு நிறையப் பணம் குவிகிறது. இதை வைத்துத் தங்களுடைய எல்லைகளைப் பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள். தொடக்கத்தில் ஏழை மக்களை மட்டுமே குறி வைத்தவர்கள், இப்போது வீடு, வீடாகப் போய் ஆள் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். எங்கள் இனத்தின் மொத்த மக்கள் எண்ணிக்கையே, சில லட்சங்கள்தான். ஆனால், இப்படி மதமாற்றம் மூலமாக கணிசமான படுகர்கள் குறைக்கப்படுவதால் எங்கள் இனமே அழியும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

நாங்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரண மாக, படுகர்களை மறுபடியும் எஸ்.டி. பட்டியலில் இணைக்க அரசு பரிசீலனை செய்கிறது. இதற்கான ஆய்வு நடத்தும் நேரத்தில் மக்கள் தொகை, தனி மொழி போன்ற விஷயங்களை எல்லாம் கூர்ந்து கவனிப் பார்கள். ஆனால், இப்படி அந்நிய மத ஆக்கிரமிப்பால் எண்ணிக்கை குறைந்து, நாங்கள் தகுதி இழந்துவிட நிறைய வாய்ப்பு இருக்கிறது'' என்றார் ஆவேசமாக!

சிதைகிறதா படுகர் சமுதாயம்?

சங்கத்தின் செயலாளரான ராமமூர்த்தி, ''படுகர் களைப் பொறுத்த வரைக்கும் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் ஒழுக்கமாக நடந்து கொள்வோம். உயிரே போவதாக இருந்தாலும், எங்களுடைய தொன்மை யான பழக்கவழக்கங்களை விட்டுக் கொடுக்க மாட் டோம். ஆனால், மதமாற்றம் மூலமாக இது எல்லாமே நாசமாகிறது. ஏகப்பட்ட படுகர் பெண்கள் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பெண்களுக்கு படுகர் சமுதாயத்தில் மாப்பிள்ளை எடுக்காமல், சம்பந்தப்பட்ட சர்ச் மூலமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். விளைவு, அப்படி யும் இல்லாமல்... இப்படியும் இல்லாமல் புதுசாக ஒரு இனம் உருவாகிறது. எங்க சமூகத்தில் கணவர் இறந்து விட்டால் மனைவி, 'ஓலைக்கட்டு’ன்னு ஒரு சடங்கு செய்யணும். ஆனால், கிறிஸ்துவ மதத்துக்கு மாறுன படுகர் பெண்கள், இந்தச் சடங்கைச் செய்வது இல்லை. இதனால், கொஞ்ச நாளைக்கு முன் ஒரு படுகர் ஆணோட பிணம், சடங்குகள் கூட நடத்தப்படாமல் ராத்திரி முழுக்க அநாதையாகக் கிடந்தது.

எங்க இனத்துக்கு என்று தனி மொழி இருக் குது. எழுத்து வடிவம் இல்லாத இந்த மொழியை எங்களோட பெருமையாக நினைக்குறோம். ஆனா, மதமாற்றத்தில் ஈடுபடும் கிறிஸ்துவர்கள், கூசாமல் எங்கள் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். படுகர் ஒருத்தன் ஆசைப்பட்டு மதம் மாறினால் கூட பரவாயில்லை; அவர்கள் வீட்டுக்குள்ளே போய் உட்கார்ந்து வலுக்கட்டாயமாக் மூளைச் சலவை செய்கிறார்கள். இப்படி அத்துமீறல்கள் உச்சத்துக்கு போனதும், மாவட்ட நிர்வாகத்தோட கவனத்துக்கு கொண்டு போனோம். அவங்களும் பல கட்டுப்பாடுகள் விதித்தார்கள். ஆனால், கிறிஸ்துவ அமைப்புகள் எதையும் கண்டுகொள்வது இல்லை. அதனால்தான் போராட்டத்தில் இறங்கி விட்டோம்...'' என்றார் அழுத்தமாக!

நீலகிரியில் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகச் சொல்லப்படும் சில கிறிஸ்துவ அமைப்புகளிடம் பேசினோம். ''அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மேல் சுமத்துகிறார்கள். நாங்கள் யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வது இல்லை. ஆதரவு இல்லாமல், நோய்வாய்பட்டு அவதிப்படும் மக்களை மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் ஆதரிக்கிறோம். சேவை செய்வது தவறா? அந்நிய நாடுகளின் நிதி உதவிக்காக ஆள் பிடிக்கிறோம் என்று பேசுவது பெரும் பாவம். செய்வது தெய்வப் பணி என்றாலும்கூட அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை எள்ளளவும் மீறுவதில்லை. எங்கள் மீது அவதூறு சொல்பவர்களை தேவன் மன்னித்து ஆசீர்வதிப்பார்...'' என்கிறார்கள் பொறுமையாக!

- எஸ்.ஷக்தி

படங்கள்:   வெ.பாலாஜி