விகடன் வரவேற்பறை
மீன்குகைவாசிகள்
கீரனூர் ஜாகிர்ராஜா
வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் மெயின் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி, சென்னை-24.
பக்கம்:190 விலை:

140

கீரனூர் ஜாகிர்ராஜாவின் முந்தைய நாவலான 'மீன்காரத் தெரு’வின் தொடர்ச்சி, 'மீன் குகைவாசிகள்’. இவரது முந்தைய நாவல்களைப்போலவே இஸ்லா மிய சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வைப் பேசு கிறது. நூலில் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய வழக்குச் சொற்களும் நாட்டார் வழக்குச் சொற்களும் அகராதியியலாளர்களும் மொழி யியலாளர்களும் அவசியம் கவனிக்க வேண்டியவை!
உலகம் உங்களுக்கே! www.rome2rio.com

உலகின் எந்தப் பகுதிக்கும், பேருந்து, ரயில், விமானம் மூலம் செல்ல, வரைபடத்துடன் பயண நேரம், பயணத்துக்கு ஆகும் செலவு என அத்தனையும் ஒரே இடத்தில் கொட்டிக் கொடுக்கும் தளம். சுற்றுலாப் பிரியர்களுக்கும் வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவர்களுக்கும் பயனுள்ள க்ளிக் தளம்!
கறுப்பு வெளிச்சம்! skaamaraj.blogspot.com

'அடர் கருப்பு’ என்று பெயர்கொண்ட இந்த வலைப்பூ, எழுத்தாளர் எஸ்.காமராஜுடையது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்று தொடர்ச்சியாகப் பதிவுகள். அன்றாட நிகழ்வுகளில் தன்னைப் பாதித்தவற்றை ஆழமான கருத்து சேர்த்து விமர்சிப்பது வலைப்பூவின் சிறப்பம்சம். பாலசந்தருக்கு பால்கே விருது என்று ஒரு பதிவை வாசித்து முடித்ததும், அடுத்து ஒரு சிறுகதை, அடுத்து ஒரு கவிதை, பின்னாலேயே எண்டோசல்ஃபான், மோடி, கல்மாடி, என்.டி.டி.வி. என்று படையெடுப்பு தொடர்கிறது. இலக்கியத்திலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர்களுக்கான வலைப்பூ!
அந்த நொடியின் நுனியில்... இயக்கம்: ஜெய்
வெளியீடு: கட்டியங்காரன் கலைக்கூடம்

கொஞ்சம் காதலும், நிறையக் கவிதையும் கலந்த காதல் கதை. சினிமாவில் பாடல் ஆசிரியராக இருக்கும் ஹீரோவுக்கு, கவிதையாகக் காதலிக்க ஆசை. அவரது முற்றுப் பெறாத ஒரு கவிதையை நிறைவு செய்கிறாள் ஒரு பெண். அதில் இருந்து, நிழல்போல அவளைத் தொடர ஆரம்பிக்கிறான். நிறையத் தயக்கமும் குழப்பமுமாக தினசரி பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறான். காதலைச் சொல்ல முடிவெடுத்த தருணம் என்ன நடக்கிறது என்பது க்ளைமாக்ஸ். ஹீரோவின் பார்வை யிலேயே நகரும் கதை, சட்டென ஹீரோயின் பார்வைக்கு மாறுவது அழகு. காதல் வசனங்கள், அழகிய ஒளிப்பதிவு, பின்னணி இசை மூன்றும் குறும்படத்துக்குப் பெரும் பலம்!
உதயன்
இசை: மணிகாந்த்
வெளியீடு: ஆனந்த் ஆடியோ
விலை:

75

ஸ்ருதி ஹாசனின் டெக்னோ மெட்டாலிக் குரலின் இளமை இனிமை 'எவன் இவன்’ பாடல் ஸ்பெஷல். மலேசிய வெர்ஷன் குத்துப் பாடலாக ஒலிக்கும் 'ரிங் டிங்’ பாடலின் பாபா ஷேகல், சுசித்ரா குரல்களில் திகட்டாத உற்சாகம். மெல்லிய காதல் மெலடியாகக் கடந்து செல்கிறது 'இத்தனை யுகமாய்’ பாடல். பழக்க வழக்கமான பீட்களுடன் கணக்கில் சேர்கிறது 'லக்க லக்க’ அயிட்டம் ஸாங். ஏகமாக பில்ட்-அப் பிட்கள் நிரப்பி கதாநாயகத் துதி படிக்கிறது 'உதயன்’ பாடல். ஒரு மாற்றத்துக்கு ஆல்பத்தின் தெம்மாங்குத் தென்றலாக ஒலிக்கும் 'பொங்க வெச்சோம்’ பாடல் காதுக்கு இதம் பதம்!