கட்டுரைகள்
Published:Updated:

சென்னையில் கொள்ளை... கோவாவில் ஜாலி! - திருப்பதியில் பாவ மன்னிப்புக் கேட்ட ‘கோல்மால்’ கொள்ளையர்கள்!

சென்னையில் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னையில் கொள்ளை

சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தபோது, ஆட்டோவிலிருந்து தப்பி ஓடிய சுபானி கேஷுவலாக ஓரிடத்தில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

ஆந்திராவிலிருந்து சென்னை சௌகார்பேட்டைக்கு நகைகள் வாங்க வந்த நகைக்கடை ஊழியரிடமிருந்து, சுமார் 68 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் விஸ்வநாதன். இவரைப்போலவே கிரண் என்பவரும் அங்கு நகைக்கடை நடத்திவருகிறார். இவர்களிடம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த அலிகான், சுபானி ஆகியோர் வேலை பார்த்துவந்தனர். இவர்கள் இருவரும்தான் சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு நகைகளை வாங்கிச் செல்வது வழக்கம். அதன்படி கடந்த டிசம்பர் 15-ம் தேதி நகைக்கடை அதிபர் விஸ்வநாதன், தன் ஊழியர் அலிகானிடம் 68 லட்ச ரூபாயையும், நகைக்கடை அதிபர் கிரண் தன் ஊழியர் சுபானியிடம் 50 லட்ச ரூபாயையும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். இருவரும் பேருந்து மூலம் அடுத்த நாள் சென்னைக்கு வந்தனர்.

சென்னையில் கொள்ளை... கோவாவில் ஜாலி! - திருப்பதியில் பாவ மன்னிப்புக் கேட்ட ‘கோல்மால்’ கொள்ளையர்கள்!

சென்னையில், கொடூங்கையூர் மீனாம்பாள் சாலை அருகே இவர்கள் ஆட்டோவில் சென்றபோது, கார் ஒன்று இவர்களை மடக்கி நிறுத்தியது. காரிலிருந்து இறங்கிய டிப்டாப் ஆசாமிகள் தங்களை இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, அலிகான், சுபானி இருவரிடமும் இருந்த பைகளைச் சோதனையிட வேண்டும் என்றனர்.

அந்தச் சமயத்தில் சுபானி ஆட்டோவிலிருந்து குதித்து, தன் பணத்தோடு தப்பி ஓட, அலிகான் மட்டும் அவர்களிடம் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அலிகானை காரில் ஏற்றிக்கொண்ட ‘அதிகாரிகள்’ மாதவரம் மஞ்சம்பாக்கத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அலிகானிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, நுங்கம்பாக்கம்ஆயக்கர் பவனில் (வருமானவரி அலுவலகம்) ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அதனால், அலிகானும் பணத்தை அதிகாரிகள் வாங்கிக்கொண்ட விவரத்தை தன் முதலாளி விஸ்வநாதனிடம் போனில் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உடனடியாக சென்னைக்கு வந்த விஸ்வநாதன், நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனுக்குச் சென்று விசாரித்திருக்கிறார். அப்போதுதான், பணத்தைப் பறித்துச் சென்றவர்கள் போலி இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் எனத் தெரியவந்திருக்கிறது.

சென்னையில் கொள்ளை... கோவாவில் ஜாலி! - திருப்பதியில் பாவ மன்னிப்புக் கேட்ட ‘கோல்மால்’ கொள்ளையர்கள்!

இதையடுத்து விஸ்வநாதன், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தபோது, ஆட்டோவிலிருந்து தப்பி ஓடிய சுபானி கேஷுவலாக ஓரிடத்தில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதனால் சுபானி மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், காரில் வந்த நபர்கள் குறித்து விசாரணையை முடுக்கினர்.

அவர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண்ணை வைத்து ஆய்வுசெய்தபோது, அது போலி என்றும், அந்த நபர்கள் ஆந்திராவில் தலைமறைவாகியிருப்பதும் தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீஸார் ஆந்திராவில் முகாமிட்டனர். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி போலி இன்கம்டாக்ஸ் ஆபீஸர்களுக்கு காரை வாடகைக்கு எடுத்துக்கொடுத்த வெங்கட நரசிம்மராவ் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்தபோது கொள்ளைக்கான மொத்த புளூ பிரின்ட்டும் போலீஸாருக்குத் தெரியவந்தது.

Iசையத் அப்துல் பாஜி, சுபானி பாஜி, அஞ்ஜி பாபு,  மகேஷ்
Iசையத் அப்துல் பாஜி, சுபானி பாஜி, அஞ்ஜி பாபு, மகேஷ்

இது குறித்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் பேசினோம். ``ஐ.டி அதிகாரிகள் எனக் கூறி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதும் உதவி கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸாரின் பிடியில் வெங்கட நரசிம்மராவ் சிக்கிய பிறகுதான் அலிகானுடன் சென்னைக்கு நகைகளை வாங்க வந்த சுபானிக்கு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் இருவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். குண்டூர் சந்தனபள்ளியைச் சேர்ந்த சையத் அப்துல் பாஜி என்பவர் குறித்த தகவல்கள் தெரியவந்தன. சையத் அப்துல் பாஜி, சுபானியின் மாமா. அவருக்கு லட்சக்கணக்கில் கடன் இருந்திருக்கிறது. அதை சுபானியிடம் சொன்னபோது, சென்னைக்கு நகைகளை வாங்க லட்சக்கணக்கில் பணத்தை, தான் கொண்டுசெல்லும் தகவலை சையத் அப்துல் பாஜியிடம் தெரிவித்திருக்கிறார் சுபானி. உடனடியாக இவர்கள் இருவரும் வெங்கட நரசிம்மராவிடம் விவரத்தைக் கூறி இந்தக் கொள்ளைக்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Iசுபானி
Iசுபானி

இவர்களுக்கு உதவியாக அஞ்ஜி பாபு, மகேஷ் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். அலிகானிடமிருந்து ரூபாய் 68 லட்சத்தைக் கொள்ளையடித்த பிறகு அதைத் தங்களுக்குள் பங்கு பிரித்திருக்கிறார்கள். இதில் அதிகமான தொகையை வெங்கட நரசிம்மராவும் சையத் அப்துல் பாஜியும் எடுத்துக்கொண்டிருக்

கிறார்கள். கொள்ளையடித்த பிறகு ரூபாய் 9 லட்சத்தை அனைவரும் சேர்ந்து செலவழித்திருக்கிறார்கள். இதில், ரூபாய் 4 லட்சம் வரை சூதாடி இழந்திருக்கிறார்கள். ஒரு லட்சம் ரூபாயை திருப்பதி கோயில் உண்டியலிலும் இந்தக் கொள்ளைக் கும்பல் போட்டிருக்கிறது. அது பற்றி விசாரித்ததற்கு, ‘‘பாவமன்னிப்புக்காக அந்தப் பணத்தை உண்டியலில் போட்டோம்” என்றார்கள். திருப்பதியிலிருந்து கோவாவுக்குத் தப்பிச் சென்ற இந்தக் கும்பல் அங்கு மசாஜ், பியூட்டி பார்லர்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்தியிருக்கிறார்கள். நடிகைகள் மற்றும் சில பெண்களுக்காக ஒரு சில லட்சங்களைச் செலவழித்திருக்கிறார்கள்” என்றார்.

இந்த வழக்கில் கைதான சுபானிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. கொள்ளையடித்த பணத்தில் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தலாம் என்று நினைத்திருக்கிறான். இந்த வழக்கில் சுபானி, சையத் அப்துல் பாஜி, வெங்கடநரசிம்மராவ், மகேஷ், சுபானி பாஜி, அஞ்ஜி பாபு ஆகிய ஆறுபேரை போலீஸ் கைதுசெய்திருக்கிறது. இதுவரை 40 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது காவல்துறை.