காம்பியாவில் பறிபோன 69 குழந்தைகளின் உயிர்கள்... சர்ச்சையில் சிக்கிய இந்திய மருந்து நிறுவனம்

மூன்று மாத சிசு தொடங்கி இரண்டரை வயதுக் குழந்தை வரை இதில் அடக்கம் என `பகீர்’ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்திய மருந்தைப் பயன்படுத்தியதால், காம்பியா நாட்டில் 69 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பது, உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் குழந்தைகள் உட்கொண்ட சிரப்புகள் அனைத்தும் இந்தியாவிலுள்ள `மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ்’ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்பதால் இந்திய சுகாதாரத் துறை இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. மருந்து ஏற்றுமதியில் கோலோச்சியதால், `உலகின் மருந்தகம்’ என்று அழைக்கப்பட்டுவந்த இந்தியாவுக்கு, இந்தச் சம்பவம் கரும்புள்ளியாக அமைந்திருக்கிறது.
என்ன நடந்தது?
மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் மிகச் சிறிய நாடு காம்பியா. இந்த நாட்டில், 2022-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே சிறுநீரக பாதிப்பால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துவந்தது. 28 குழந்தைகள் சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்திருந்த நிலையில், ஜூலை 19 அன்று இது தொடர்பான விசாரணையைத் தொடங்கிய காம்பியா நாட்டின் சுகாதாரத்துறை, செப்டம்பர் மாத தொடக்கத்தில் சில சிரப்புகளின் பயன்பாட்டை நிறுத்துமாறு அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம், அந்த சிரப்புகளை ஆய்வுசெய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

`புரோமெதாஸின் ஓரல் சொல்யூஷன்ஸ் (Promethazine Oral Solution), கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மேக்ஆஃப் பேபி காஃப் சிரப் ( Makoff Baby Cough Syrup), மாக்ரிப் என் கோல்டு சிரப் ( Magrip N Cold Syrup) ஆகிய நான்கு சிரப்புகளிலும் டைஎத்திலின் கிளைக்கால், எத்திலின் கிளைக்கால் ஆகிய சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் பொருள்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் கலக்கப்பட்டிருக்கின்றன. இந்த சிரப்புகளைப் பயன்படுத்தும் நாடுகளிலுள்ள தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையங்கள் ஆய்வுசெய்யும் வரை இந்த மருந்துகள் பாதுகாப்பற்றவை’ என எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த நான்கு சிரப்புகளும், இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. மேலும், காம்பியாவைத் தவிர வேறெந்த நாட்டுக்கும் இந்த மருந்துகள் முறைப்படி ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், முறைசாரா வகையில் வேறு சில நாடுகளுக்கும் இந்த சிரப்புகள் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
காம்பியாவில் இதுவரை இந்த சிரப்புகளை எடுத்துக்கொண்ட 69 அப்பாவிக் குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றன. மூன்று மாத சிசு தொடங்கி இரண்டரை வயதுக் குழந்தை வரை இதில் அடக்கம் என `பகீர்’ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த உயிரிழந்த குழந்தையின் தாய் ஒருவர், ``சளி, காய்ச்சலுக்காக என் மகனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் எழுதிக்கொடுத்த மருந்தால், மகனுக்கு சளி, காய்ச்சல் சரியாகிவிட்டது. ஆனால், அவனால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. இந்த மருந்தால், இன்று மகனை இழந்துவிட்டேன்’’ என்று கண்ணீர் வடித்திருக்கிறார். மற்றொரு பெற்றோர், ``ஐந்து மாதக் குழந்தையான எங்கள் மகள், ஐந்து நாள்கள் பெற்ற சிகிச்சை பலனற்றுப்போனதால் உயிரிழந்துவிட்டாள். காம்பியாவின் மிக மோசமான சுகாதாரக் கட்டமைப்பு காரணமாகத்தான் என் மகள் உயிரிழந்துவிட்டாள்’’ என்று கூறியிருக்கின்றனர்.

`காம்பியா சுகாதாரத்துறை அமைச்சர் அஹ்மது லமின் ராஜினாமா செய்ய வேண்டும்; இந்த உயிர்க்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்தவர்கள்மீது வழக்கு தொடர வேண்டும்’ என்பதே காம்பியா மக்களின் ஒருமித்த கோரிக்கையாக இருந்துவருகிறது.
மெய்டன் நிறுவனமும் தரமற்ற மருந்துகளும்!
உலக சுகாதார நிறுவனமும், மத்திய சுகாதாரத்துறையும் ஹரியானா மாநிலத்திலுள்ள மெய்டன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்திடம் விசாரணை நடத்திவருகிறது. ``குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்’’ என ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்திருக்கிறார். இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மெய்டன் நிறுவனத்தில் தொடர்ந்து சோதனையிட்டுவந்த நிலையில், அந்த நிறுவனத்தின் இயக்குநர் நரேஷ் கோயல், ``எங்கள் மருத்துகளுக்கும், குழந்தைகள் இறப்புக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இ-கோலி பாக்டீரியா தொற்று காரணமாகவோ அல்லது பிரெஞ்சு நிறுவனம் காம்பியா நாட்டில் இறக்குமதி செய்திருக்கும் பாரசிட்டமால் காரணமாகவோ அந்தக் குழந்தைகள் இறந்திருக்கலாம்’’ என்றிருக்கிறார்.
32 ஆண்டுகளாக மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுவரும் மெய்டன் நிறுவனம், ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு 2000-ம் ஆண்டு முதல் மருந்துகளை ஏற்றுமதி செய்துவருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த Easiprin, Maical-D, Macipro உள்ளிட்ட மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாக கேரளா, குஜராத்திலுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்தகாலங்களில் குற்றம்சாட்டியிருக்கின்றனர். ஆனால், அது தொடர்பாகச் சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அரசு அதிகாரிகளே இந்த நிறுவனத்தின்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தும், அது குறித்துத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.

யார் பொறுப்பு?
``மருத்துவத்துறையில் மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் பின்தங்கியிருக்கும் நாடு என்பதால், காம்பியாவுக்குத் தரமற்ற மருந்துகளை மெய்டன் நிறுவனம் ஏற்றுமதி செய்ததா எனத் தெரியவில்லை. பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான மருந்து நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்’’ என்று கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
உலகின் மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தியாளராக இருக்கிறது இந்தியா. ஆனால் இங்கு, தொடர்ச்சியாக மருந்துத் தயாரிப்பில் பல்வேறு பிரச்னைகள் இருந்துவருகின்றன. உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கவேண்டிய நிறுவனங்கள் சுயலாபத்துக்காக உயிர் பறிக்கும் மருந்துகளைத் தயாரிக்கின்றன. இனிமேல் இது போன்ற மருந்துகளால், ஓர் உயிர்கூட போகாத நிலை உருவாக, இந்திய மருந்துத் தயாரிப்பில் வேண்டிய சீர்திருத்தங்களை மத்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்!