விகடன் வரவேற்பறை
அசையும் படம் , ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார்
பதிப்பு: கீற்றுப் பதிப்பகம்,
23, அரங்கநாத நகர், சிதம்பரம்-1.
விலை:

150 , பக்கங்கள்: 148

உலகின் முதல் அப்ஸ்குரா கேமராவில் இருந்து, இன்றைய ரெட் ஒன் கேமரா வரை ஒளிப்பதிவு உலகம் எப்படி படிப் படியாக மாறி இருக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளி வாகவும் சொல்கிற நூல். புகைப்படங்களின் தோற்றம், சலனப் படங்களாக உருமாற்றம் அடைந்தது, சினிமாவின் பல்வேறு காலகட்டங்கள் என கேமராவின் சரித்திரத்தை ஆண்டுவாரியாக, தொழில்நுட்பரீதியாக விளக்குகிறார் ஆசிரியர். சினிமா பற்றிய அறிவும் ஆர்வமும் கொண்டவர்கள் படிப்பதற்கான ஒளிப்பதிவுக் கையேடு!
எம்.கே.தியாகராஜ பாகவதர் சாதனை சரித்திரம்
இயக்கம்: ஐ.சண்முகநாதன்- டி.சந்தான கிருஷ்ணன்
வெளியீடு: கிளாஸிக் கிரியேஷன்ஸ்விலை:

149

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் பற்றியஆவணப்படம். 30 பாடல்களோடு பாகவதர் முதன்முறையாக நடித்த 'பவளக் கொடி’ முதல் 'ஹரிதாஸ்’ வரை ஒவ்வொரு படத்தின் கறுப்பு - வெள்ளை கிளிப்பிங்க்ஸ்களோடு சொல்கிறார்கள். பாகவதரின் அரிய புகைப்படங்கள், அவரைப்பற்றி டி.எம்.எஸ், எஸ்.எஸ்.ஆர் பேட்டி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் நினைவலைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். எம்.கே.டி. என்னும் மாமனிதர் பற்றி அறிந்துகொள்ள இந்தப் படம் உதவும்!
எழுத்துச் சித்திரம்
http://balakumaranpesukirar.blogspot.com/

பாலகுமாரனின் எழுத்துகளைத் தாங்கி வரும் வலைப்பூ. பாலகுமாரனின் நெருங்கிய வாசக நண்பர் களால் நடத்தப்படும் இந்த வலைப்பூவில் காதல், காமம், நட்பு, அன்னை, ஆன்மிகம், மரணம் என அவரின் எழுத்துக்கள் தொட்ட அனைத்தும் பதிவேற்றப்பட்டு இருக்கின்றன. பாலகுமாரனின் சிறுகதைகள், யோகி ராம்சுரத் குமாருடன் அவருக்கு உள்ள நெருக்கம் ஆகியவையும்!
இலக்கியத் தடாகம்!
http://www.thadagam.com

சிறுகதைகள், கவிதைகள் என்று புனைவு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டோருக்கான தளம். பம்பைக் கலைஞர் மீஞ்சூர் சுரேஷ், தெருக்கூத்துக் கலைஞர் கோவிந்தவாடி அகரம் து.ஜெயபாலன் போன்ற கலைஞர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. வாசிப்பின் மீதான ஆர்வம் உடையவர்கள் இந்த வலைதளத்துக்கு வந்து செல்லலாம்!
மதிகெட்டான் சாலை
இசை: ஸ்ரீகாந்த் தேவா
வெளியீடு: ஜங்ளி மியூஸிக் விலை:

75

ஒரு ஓப்பனிங் ஸாங், ஒரு ஜாலி பாட்டு, ஒரு காதல் பாட்டு, ஒரு குத்துப் பாட்டு என்று தமிழ் சினிமாவின் இலக் கணத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன பாடல்கள். பரவை முனியம்மாவின் குரலில் பிரபலமான 'நாடு சும்மா கெடந்தாலும் கெடக்கும்’ பாடலின் சில வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, விவேகாவின் வரிகளில் வரும் புத்தாண்டுப் பாடல் அசத்தலான ஆரம்பம். மதுபாலகிருஷ்ணன் குரலில் ஃபிரான்சிஸ் கிருபாவின் 'பூவிழியில்’ கேட்க சுகம். 'காவியமா’ பாடலில் சங்கர் மகாதேவனின் கம்பீரக் குரல் தனித்துத் தெரிகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ’மதிகெட்டான் சாலை’ - பூஞ்சோலை!