
கூடங்குளம்:நேற்று ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து,கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நிரப்பபட்டுள்ள யுரேனியத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”தமிழ்நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டதையும்,இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் சுனாமி அபாயம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பத்தாண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக சுனாமி ஏற்படக்கூடிய அபயாம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள அணுஉலை எதிர்ப்பாளர்கள், இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதி அணு உலைகள் அமைப்பதற்கு ஏற்றது அல்ல என்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலையில் வைக்கப்பட்டுள்ள யுரேனியம் வெளியேற்றப்படவேண்டும், கூடங்குளம் அணு உலை பகுதியில் நில, நீர், கடல் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும், கூடங்குளம் அணு உலைக்கு தேவையா இல்லையா என்பது குறித்து அந்த பகுதி மக்களிடம் ஆலோசிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விலக்கிக் கொள்ளவேண்டும்”என்று கூறியுள்ளார்.
இதனிடையே நாடு முழுவதும் நிலநடுக்க பீதி இருந்தாலும்,கூடங்குளத்தில் உள்ள அணு உலை செயல்பாட்டில் எவ்வித தடையும் இல்லை என்றும்,கடல் மட்டத்தில் இருந்து இந்த நிலையம் 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளது என்பதால் சுனாமி வந்தாலும் கூடங்குளத்தை பாதிக்காது என்றும் கூடங்குளம் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்துள்ளார்.