விகடன் வரவேற்பறை
கெண்டை மீன் குஞ்சும் குர்ஆன் தேவதையும்
ஹெச்.ஜி.ரசூல்
வெளியீடு:ஆழி பப்ளிஷர்ஸ்
12. முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, சென்னை-24.
பக்கம்: 144 விலை:

70

இலக்கியத்தில் இஸ்லாமியர்களின் பங்கு குறித்து மிக விரிவாகப் பேசுகிறது இந்த நூல். ஹெச்.ஜி.ரசூல் தனது ஆழ்ந்த வாசிப்பின் விளைவாக ஆய்வு நோக்கோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சம காலப் படைப்பாளிகளான கீரனூர் ஜாகிர்ராஜா. பிர்தௌஸ் ராஜகுமாரன் முதல், 1940 -களில் எழுதிய சித்திஜுனைதா பேகத்தின் எழுத்துக்களைத் தொட்டு, சீறாப்புராணம் எழுதிய உமறுப் புலவர் வரை எல்லோரின் படைப்புலகம் குறித்தும் பதிவுகளைச் செய்து இருக்கிறார் ரசூல். கவி காஸி நஸ்ருல் இஸ்லாம், சதத் ஹசன் மாண்டோ, கவிஞர் இக்பால், மஹ்மூத் தர்வேஷ் ஆகியோரின் கதை உலகம் குறித்தும் ரசூல் விரிவாக நம்மோடு உரையாடுகிறார். இஸ்லாமிய சமூகம் இலக்கியத்துக்கு என்ன செய்தது என்று கேட்போருக்கு இந்த நூலைப் பதிலாகக் கொடுக்கலாம்!
வெளிநாடு செல்வோருக்கு...
http://www.poeonline.gov.in/nfinder.htm

வெளிநாட்டு வேலை என்கிற ஆசையில் போலி ஏஜென்ட்டுகளிடம் பணத்தைப் பறிகொடுப்பவர்களை உஷார்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மத்திய அரசின் இணையதளம். ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் ஏஜென்ட்டிடம் இருந்து செய்திகளில் விளம்பரம் வரும்போது, அந்த நிறுவனம் இந்தியாவில் அனுமதி பெற்று உள்ள நிறுவனமா என்பதை இந்தத் தளத்தின் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!
தெரிந்துகொள்ளலாம் வாங்க...
http://therinjikko.blogspot.com

இந்த டெக்னாலஜி வலைப்பூ, வோடஃபோன் நிறுவனம் வழங்கும் சில்லறை ரீ-சார்ஜ், மைக்ரோசாஃப்ட்டின் இலவசங்கள், கூகுள் மொபைல் மணிபர்ஸ் என டெக் உலகில் புதிதாக எது வந்தாலும் உடனே தகவல் சொல்லும். கணினி தொடர்பான ஒவ்வொரு வார்த்தையையும் கஷ்டப்பட்டு தமிழ்ப்'படுத்தாமல்’ நேரடியான வார்த்தைகளை உபயோகித்து எளிமையாகப் புரியவைக்கிறார்கள்!
தெருவில் இறக்கும் குதிரைகள்
இயக்கம்: நேரு
வெளியீடு: குக்கூ குழந்தைகள் வெளி

Schizophrenia என்கிற மன எழுச்சி நோயைப் பற்றிய ஆவணப் படம். 'நான்தான் இந்தியாவின் ஜனாதிபதி’ என்று பேசுகிற மனநிலை பாதிக்கப் பட்டவரின் பேட்டியில் இருந்து துவங்குகிறது இந்த ஆவணப் படம். மன நிலை பாதிக்கப் பட்ட மகளைச் சங்கிலியால் கட்டிப் போட்டு வருந்தும் தாய், தம்பியின் வைத்தியச் செலவுகளால் கடனில் வாழும் அண்ணன் என மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். தான் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது பற்றி மனச் சிதைவுப் பெண் ஒருவர் அழுதபடி விவரிக்கும் இடம், யாரையும் கலங்கவைத்துவிடும் வலி நிறைந்த பதிவு!
சேவற்கொடி இசை: சி.சத்யா வெளியீடு: திங்க் மியூஸிக்,
விலை

99

'வேலவா வேலவா’ என்று முதல் பாடலே கோவை கமலாவின் குரலில் வித்தியாசமான வெஸ்டர்ன் காவடி எடுக்கிறது. விஜயபிரகாஷ் குரலில் 'புறாவைப் போல’ பாடலும்... பல்ராம், மாதங்கி குரல்களில் 'விண் மீனே’ பாடலும் மெலடி மெட்டு கட்டுகிறது. 'கம்பி மத்தாப்பு கண்ணு’ பாடல் வைரமுத்துவின் ஒளிரும் வரிகளில் நிச்சயம் ஹிட் ரகம். 'இடுக்கண் வருங்கால் நகுக’ தத்துவத்தை அழகாகச் சொல்லிச் செல்கிறது 'நெஞ்சே நெஞ்சே’ பாடல். மொத்தத்தில் சி.சத்யாவின் இசையில், சேவற்கொடி வெற்றிக் கொடியாயாகப் பறக்கிறது!