விகடன் வரவேற்பறை
சுவரெழுத்துப் புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா
சிந்தனைப் பொறிகள்
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம், கோவை.
பக்கங்கள்: 656 விலை:

350

தீண்டாமை ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, தமிழ் இன உணர்வு, பெண்கள் முன்னேற்றம், இட ஒதுக்கீடு என்று பெரியாரால் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த புரட்சிகளுக்குப் பின்னால், பெயர் அறியாத ஏராளமான கருஞ்சட்டைத் தொண்டர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான மயிலாடுதுறையைச் சேர்ந்த 'சுவரெழுத்து சுப்பையா’வின் சுவரெழுத்து வாசகங்களையும் நாட்குறிப்புகளில் எழுதப்பட்ட சுயமரியாதைச் சிந்தனைகளையும் கொண்டு தொகுக்கப்பட்ட நூல். 'தன் பெயர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்பர்; தனது பெயரைச் சொல்லி பிள்ளை கூப்பிடக்கூடாது என்று மறுப்பர்’ என்னும் வரி மனித வாழ்வின் முரண்பாட்டை எளிய வரிகளில் சொல்கிறது. திருமணம்கூடச் செய்துகொள்ளாமல், எந்த ஆதாயத்தையும் எதிர்பாராது உழைத்த சுப்பையா, மயிலாடுதுறை ரயிலடியில் அநாதையாக இறந்துகிடந்தார் என்பதைப் படிக்கும்போது கண்கள் கலங்குகின்றன. புத்தகத்தில் சுப்பையாவின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம் பெறாதது ஒரு குறை!
உலக மொழிகளில் வார்த்தை விளையாட்டு!
www.translation-telephone.com

ஒரு தகவல், பலர் காது மாறி வரும்போது, அர்த்தமே மாறி வருமே, அப்படி உலக மொழிகளை வைத்து விளையாட்டு காட்டுகிறது இந்தத் தளம். ஆங்கிலத்தில் நாம் பதிவிடும் ஒரு வாக்கியத்தை அடுத்தடுத்து 20 உலக மொழிகளில் மொழிபெயர்த்து, அதை மீண்டும் ஆங்கிலத்தில் தருகிறார் கள். அர்த்தமே வேடிக்கையாக இருக்கிறது. 'குட் மார்னிங்’ என்று நாம் கொடுத்தால் 'ஹலோ’ என்று மருவி நிற்கிறது. உலக மொழிகளில் வார்த்தை விளையாட்டு!
வீரத்தைக் குண்டுகள் துளைக்காது!
www.arivumathi.blogspot.com

கவிஞர் அறிவுமதியின் வலைப்பூ. 'வீரத்தைக் குண்டுகள் துளைக்காது / வீரனைச் சரித்திரம் புதைக்காது / நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் / வாடகை மூச்சில் வாழாது’ என்ற வரிகளுடன் வரவேற்கின்றன அறிவுமதியின் எழுத்துகள். 'விருதுகள் மீது நம்பிக்கை’ என்ற தலைப்பில் பதிவேற்றப்பட்டு இருக்கும் பேட்டி அறிவுமதியின் ஆளுமையைப் புரிந்துகொள்ளச் செய்யும். 'மன்மதன் அம்பு’ படத்தில் கமல் ஈழத் தமிழர் களைச் சித்திரித்திருக்கும் விதத்தை எதிர்க்கும் அறிவுமதியின் கவிதைச் சாடல், ரௌத்திரம்!
சின்னகுத்தூசி
நேர்மைமிகு சுயமரியாதைக்காரர்
வெளியீடு: நக்கீரன் விலை:

100

மறைந்த பத்திரிகை ஆளுமை சின்னகுத்தூசியின் வாழ்க்கை வரலாற்றைப் படங்கள், வீடியோக்களோடு ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். திருவாரூரில் பிறந்த இரா.தியாகராஜன், திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு திராவிட இயக்கச் சிந்தனையாளர் குத்தூசி குருசாமியின் மேல் உள்ள பற்று காரணமாக, சின்னகுத்தூசி என்று எழுத ஆரம்பித் தது முதல் அவருடைய கர்னாடக இசை ஆர்வம், ஆசிரியர் பணி பற்று, மொழிப் போராட்ட வேகம் எனப் பல பரிமாணங் களை அறிமுகப்படுத்துகிறார்கள்!
உயர்திரு நானூற்று இருபது வெளியீடு: ஜங்லி மியூஸிக் விலை:

75

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மணிசர்மாவின் இசை. கார்த்திக் - ஸ்வேதா மோகனின் குரல்களில் 'உயிரே உன் மௌனம்’ பாட்டு கேட்கும்போது பிடிக்கிறது. ஆனால், உடனே மறந்தும் போகிறது. கிட்டத்தட்ட ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களும் இதே ரகம்தான். கானா கானமாக ஒலிக்கும் 'நட்சத்திர ஹோட்டலு’ பாடலில் முகேஷின் குரல் அசத்தல்!