டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. பிப்ரவரி 1-ம் தேதி இந்த அருங்காட்சியகத்தின் 40-வது ஆண்டுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.
10 ஏக்கர் பரப்பளவுடன் 1977-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில் இந்த அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் ரயில்வே துறையின் பாரம்பர்யம், ரயில்வே அடைந்துள்ள பரிணாம வளர்ச்சி, வெவ்வேறு காலங்களில் ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிலக்கரி மற்றும் நீராவியால் இயக்கப்பட்ட இன்ஜின் முதல் தற்போதைய நவீன யுகத்தில் ரயில்வே தொழிற்சாலைகளிலும், லோகோமோட்டிவ் தொழிற்சாலைகளிலும் வடிவமைக்கப்பட்டு வரும் இன்ஜின்கள் வரை பல்வேறு வகையான இன்ஜின்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்அரங்கம் மற்றும் வெளி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேத் துறை தொடர்பான முழுமையான தகவல்களுடன் கூடிய கணினி தகவல்களும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
இந்த அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் கண்டுகளிக்கும்வகையில், அந்தப் பகுதிக்குள் ஓடும் வகையில் பிரத்யேக ரயிலும் இயக்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் ரயில் அருங்காட்சியகத்தைக் கண்டு ரசிக்கலாம். திங்கட்கிழமை மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
டீசல் இன்ஜின், மின்சாரம் மூலம் இயக்கப்படும் இன்ஜின் என அனைத்து வகையான இன்ஜின்களும் இங்கு இடம்பெற்றிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்தியாவில் மீட்டர்கேஜ் ரயில்பாதை, அகல ரயில்பாதை, புதிய ரயில்வே திட்டங்கள் போன்ற தகவல்களையும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கணினியில் அறிந்து கொள்ள முடியும்.இந்தியாவில் லாபகரமான துறையாக இயங்கி வரும் ரயில்வேத் துறைக்கென தனியான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டுடன் ரயில்வே துறைக்கென தனியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கார், பேருந்து, விமானம் என எத்தனையோ வகையான போக்குவரத்து வகைகள் இருந்தாலும் இந்தியாவில் மிகவும் அதிக பாதுகாப்பு நிறைந்த போக்குவரத்து என்றால் அது ரயில் பயணம் என்றால் அது மிகையாகாது.
- சி.வெங்கட சேது