விகடன் வரவேற்பறை
ரசிகமணி டி.கே.சி கடிதங்கள்
தொகுப்பு: தீப.நடராஜன் வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 18. பக்கங்கள்: 960 விலை:

600

தமிழ் இலக்கியங்கள் மீது ரசனை வாசிப்பை முன்வைத்தவரும் அத்தகைய ரசனை முறையைக் குழுவாக வளர்ப்பதற்காகவே 'வட்டத் தொட்டி’ என்னும் அமைப்பை நிறுவியவருமான டி.கே.சிதம்பரநாதன் எழுதியுள்ள கடிதங்களின் தொகுப்பு. ராஜாஜி அந்தக் காலகட்டத்தில் முக்கியமான அரசியல் தலைவராக இருந்தபோதும், டி.கே.சி. அவரிடம் முத்தொள்ளாயிரம் பற்றியும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பற்றியுமே பேசுகிறார் என்பது சுவாரஸ்யமானது. அக்காலத்திய இலக்கிய உரையாடல்களை அறிந்துகொள்வது ஒருபுறம் என்றால், ரஜா (விடுமுறை) போன்ற அந்தக் காலத்தில் புழங்கப்பட்ட சொற்களை அறிவது இன்னொரு சுவாரஸ்யம். அட்டையில் 27 பேருக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பு என்று இருக்க, புத்தகத்துக்குள் 26 கடிதங்களே இருக்கின்றன. விடுபட்ட அந்த ஒன்று எது?
பச்சை ரத்தம்
இயக்கம்: தவமுதல்வன் ; வெளியீடு: கொழுந்து திரைக்களம்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஆவணப் படம். நாம் குடிக்கும் ஒரு கோப்பைத் தேநீரில் எத்தனை பேரின் ரத்தம் கலந்து இருக்கிறது என்பதை விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தேநீர் அறிமுகமான கதை, 18-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்த மலையகத் தமிழர்களின் பயணம், வாழ்க்கைப் போராட்டங்கள், இனப் போராட்டம், அடக்குமுறை, புலம் பெயர்வு ஆகியவற்றைப் புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் காண்பித்து உறையவைக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களின் வேலை இன்மைப் பிரச்னை, ஒரு கிலோ தேயிலை பறித்தால் மூன்று ரூபா சம்பளம் போன்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இக்கட்டான வாழ்வியலை அறிந்துகொள்ளவைக்கும் முழுமையான ஆவணப் படம்!
துளி வெளிச்சம்!
http://velichamstudents.blogspot.com

தகுதி இருந்தும் பொருளாதார வசதி இல்லாததால் படிப்பைக் கைவிட்ட மாணவர் களுக்கு நிதி உதவி செய்து, படிக்க உதவும் 'வெளிச்சம் மாணவர்கள்’ அமைப்பின் வலைப்பூ. கல்வி, இளைய தலைமுறை, கல்விக்கான நிதி உதவி எனப் பதிவுகள் அனைத்தும், அரசும் சமூகமும் கைகழுவிய மக்கள் பகுதி ஒன்றைச் சார்ந்தே இருக்கின்றன. தற்கொலைக்கு முன் ப்ளஸ் டூ மாணவன் எழுதிய ஏழு பக்கக் கடிதத்தில், 'எங்களுக்குப் புரியும்படி பாடத்தை நடத்தச் சொல்லுங்க’ என்ற பதிவு, நம் கல்வித் தரத்தின் உண்மையை எடுத்துக்காட்டுகிறது!
சேனலுக்கு செக்!
http://ibfindia.com/guidelines.php

மனதைப் புண்படுத்தும்படியோ அல்லது மத உணர்வுகளைத் தூண்டும்படியோ ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றிப் புகார் அளிக்க உதவும் தளம். இந்தியா வில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் முதல் ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை புகார்களை நேரடியாக இந்தியன் பிராட்காஸ்டிங் ஃபவுண்டேஷன் மூலம் பதிவு செய்யலாம். உடனடி நடவடிக்கை நிச்சயம் என்று உத்தரவாதம் அளிக்கிறார்கள்!
வாகை சூட வா
வெளியீடு: திங்க் மியூஸிக் - விலை:

99.00

'செங்க சூளக்காரா...’ என்று அனிதாவின் வித்தியாசமான குரலில் தொடங்கும் முதல் பாடலிலேயே இசை தாளம் போடவைத்து மனசில் ஒட்டிக்கொள்கிறது. 'சர சர சாரக் காத்து’ பாட்டில் நிச்சய ஹிட் சமிக்ஞை. 'தஞ்சாவூரு மாடத்தி’ ஜெயமூர்த்தியின் குரலில் தலையாட்டவைக்கிறது. மண் மணம் கமழும் வார்த்தைகளில் அனைத்துப் பாடல்களுமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். அறிமுக இசையமைப்பாளர் எம்.ஜிப்ரானுக்கு வரவேற்பு வாழ்த்துக்கள்!