விகடன் வரவேற்பறை
குறடு - அழகிய பெரியவன்
வெளியீடு: கலப்பை, இரண்டாம் தளம், இரண்டாம் தெரு, திருநகர்,
வடபழனி, சென்னை - 26.
பக்கங்கள்: 200 விலை:

130

தீண்டப்படாத மக்களின் வாழ்வைப் பதிவு செய்யும் அழகிய பெரியவனின் 19 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஆதிக்கச் சாதி வன்கொடுமையால் ஊரை விட்டு வெளியேறி, சென்னையில் வசிக்க நேர்ந்த தலித் இளைஞன் ஒருவன், தன் தந்தையின் கண்களைக் குருடாக்கிய ஆதிக்கச் சாதி ஆண்டையைத் தன் சொந்த ஊரில் மீண்டும் காணும்போது, பூவரசம் பீப்பியின் ஓசையும் பன்றிகளின் உறுமலும் காதுகளுக்குள் ஒலிப்பதாகக் காட்சிப் பதிவை இயல்பாகப் பதிவு செய்கிறது 'பூவரசம் பீப்பி’ சிறுகதை. சொந்த ஊரில் செருப்பு அணிய மறுக்கப்பட்ட ஒரு தலித், பட்டாளத்தில் சேர்ந்த பிறகு அணியக்கிடைக்கிற பூட்ஸ்பற்றிப் பேசும் 'குறடு’ சிறுகதையின் முடிவு நெகிழ்வு. தலித் மக்களின் மீதான வன்முறையையும் அவர்களின் இயல்பான வாழ்வின் கொண்டாட்டங்களையும் பதிவு செய்யும் தொகுப்பு!
நெய்ப் பந்தம்
இயக்கம்: ஜி.முரளிஅப்பாஸ் வெளியீடு: வி.வி.கிரியேஷன்ஸ்

சுதந்திரப் போராட்டத்தில் தலைவர்களின் பின்னால் அணிவகுத்த முகம் தெரியாத லட்சக்கணக்கான தியாகிகளுள் ஒருவரைப்பற்றி பேசும் குறும்படம். ஊரே மதிக்கும் தியாகியை அவரது பேரன் மதிக்காமல் இருக்கிறான். வீட்டைக் கவனிக்காமல் நாட்டைப் பார்க்கப் போனதால்தான் நாம் எல்லாரும் இன்று கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பது அவனின் கோபம். இந்நிலையில், தியாகி இறந்துவிடுகிறார். இறுதிச் சடங்கில் பேரன் நெய்ப் பந்தம் பிடிக்க மறுக்க, ஊர் மக்கள் என்ன முடிவு எடுத்தார் கள் என்பது க்ளைமாக்ஸ். சொல்ல வந்ததை சிம்பிளாக, அழகாகச் சொல்கிறார் இயக்குநர்!
கதை கேளு...கதை கேளு!
http://www.stroytimeforme.com

குழந்தைகளுக்குக் கதை சொல்ல உதவும் எளிமையான தளம். நமது விருப்பங்களைப் பட்டியல் இட்டால், அனிமேஷ னுடன் கூடிய கதை ஒளிபரப்பாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை இத் தளத்தில் குழந்தைகள் இலவசமாகப் படிக்கலாம். இதனால், மிக இளம் வயதிலேயே குழந்தைகளின் ஆங்கில அறிவு அபாரமாக வளரும்!
மகாபாரதக் கதைகள்!
http://bagavathgeethai.blogspot.com/

மகாபாரதக் கதைகளின் வழியே அவற்றுள் மறைந்திருக்கும் தத்துவ விசாரங்களை எடுத்துக் கூறும் வலைப்பூ. ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா... என ஆங்காங்கே கொஞ்சம் மலைக்கவைத்தாலும், ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் பொதிந்துவைக்கப்பட்டு இருக்கும் நீதி, ஆயிரம் பொன்னுக்குச் சமம். 'காலத்தின் வலிமை’ என்று இந்திரனுக்கும், பலி என்பவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் கட்டுரை, செல்வத்தை இடைவிடாது சேர்த்துக்கொண்டே இருக்க நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று!
யுவன் யுவதி
இசை: விஜய் ஆண்டனி வெளியீடு: திங்க் மியூஸிக் விலை:

99.00

'ஓ மை ஏஞ்சல்’ என்று ஒரு மெலடியும் 'கொல குத்து’ என்று ஒரு தாளம் போடவைக்கும் பாட்டையும் விஜய் ஆண்டனி பாடியிருக்கிறார். விஜய் பிரகாஷ் - மதுமிதாவின் டூயட் 'மயக்க ஊசி’ சுமார் ரகம். '24 மணி நேரம்’ பாடலில் ஹரிசரணின் குரல் இதம், பதம். கார்த்திக் - ரம்யா குரல்களில் வரும் 'உன் கண்ணைப் பார்த்த பிறகு’ பாடல் 'கேட்கலாம்’ ரகம். தற்காலிகக் கவன ஈர்ப்புக்கான பாடல்கள்!