விகடன் வரவேற்பறை
மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்முட்டி : தமிழில்: கே.வி.ஷைலஜா
வெளியீடு: வம்சி புக்ஸ்,19.டி.எம்.சாரோன், திருவண்ணாமலை பக்கங்கள்: 128 விலை:

80

மம்முட்டி என்கிற ரசனைக் கலைஞனின் வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். மம்மூட்டி என்கிற பெயர் பிடிக்காமல், எகிப்து நடிகர் ஓமர் ஷெரீஃபின் பெயரை வைத்துக்கொண்டு அலைந்தது, வக்கீலாக வாழ்ந்தது, முதல் தர நடிகர் ஆனது வரை வாழ்வில் சந்தித்த மனிதம், அன்பு, நேரம், நட்பு, பாடம் என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் மம்முட்டி. விவாகரத்து வழக்கில் அன்பான கணவனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல முடியாமல் கோர்ட்டில் மயங்கி விழுந்த மனைவி, மம்முட்டியால் காப்பாற்ற முடியாமல் போன முதல் ரசிகன் என அவரது வாழ்க்கைச் சம்பவங்கள், அது கற்றுக்கொடுத்த பாடம் ஆகியவற்றைக் குட்டிக் கதைபோல சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறார்!
அறிவியல் ஆயிரம்!
http://kuruvikal.blogspot.com

மாணவர்களுக்குப் பயனுள்ள வலைப்பூ. முழுக்க முழுக்க அறிவியல் செய்திகள் மட்டும்தான். வெறுமனே வார்த்தைகளில் விவரிக்காமல் படங்கள், காட்சிகள் ஆகியவற்றின் உதவியோடு விளக்கம் சொல்கிறார்கள். அறிவியல் தொடர்பான நிகழ்வுகளை ஓரிரு வார்த்தைகளில் அறிமுகப்படுத்திய பின் பி.பி.சி-யின் உரலியைக் கொடுத்திருக்கிறார்கள். அங்கு அறிவியல் தொடர்பான செய்திகள் இன்னும் விரிவாகக் கிடைக்கின்றன!
சக்தே இந்தியா!
www.indiaagainstcorruption.org

ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் ஆர்வலர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தளம். 02261550789 (அ) 912261550789 என்ற எண்களுக்கு மிஸ்டுகால் கொடுப்பதன் மூலம், லோக்பால் மசோதாவுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு மிஸ்டுகாலும், ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்குவதற்கான முன்னெடுப்பாக இருக்கும். தன்னார்வத் தொண்டர்களும் இந்தத் தளத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இயங்கலாம்!
எனக்கு இல்லையா கல்வி?
இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார் வெளியீடு: மனித உரிமைக் கல்வி நிறுவனம்

வசதியற்ற அரசுப் பள்ளிகள், வகுப்பறை வன்முறை, சமச்சீர்க் கல்வி, பாடத்திட்டம் என்று கல்வித் துறையின் அத்தனைக் கோளாறுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் படம். குழந்தை கள் தங்கள் கல்வி தடைபட்ட காரணத்தைச் சோகமாக கேமரா நோக்கிச் சொல்லும்போது பதறுகிறது மனம். அரசுப் பள்ளிகளில் கழிவறைகூட இல்லாமல் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் படும் அவஸ்தை, அருந்ததிய மாணவர்களைக் கழிப்பறை கழுவச் சொல்லும் ஆசிரியர்களின் சாதிய அழுக்குப் பிடித்த மனம், மலைவாழ் மக்களுக்கு மறுக்கப்படும் கல்வி என்று அனைத்துப் பிரச்னைகளையும் அலசும் படம். தமிழ்நாட்டுக் கல்வித் துறையின் அவல நிலைக்குச் சாட்சியாக நிற்கிறது!
ரௌத்திரம்
இசை: பிரகாஷ் நிக்கி வெளியீடு: ஸ்டார் மியூஸிக் விலை:

75

உதித் நாராயணன், சாதனா சர்கம் குரல்களில் 'அடியே உன் கண்கள்’ பாடல் வித்தியாசமான வரிகளால் ஈர்க்கிறது. பாம்பே ஜெயஸ்ரீயின் குரலைப்போலவே இருக்கும் ரெனினா ரெட்டியின் குரலில் 'மாலை மங்கும் நேரம்’... மயங்கிக் கிறங்கவைக்கும் இசை. 'செங்காந்தள் கையாலே’ வழக்கமான காதல் பாடல்தான் என்றாலும், ஹரிசரணின் குரல் சுவாரஸ்யம்!