விகடன் வரவேற்பறை
நாகலிங்க மரம் - ஆர்.சூடாமணி
வெளியீடு: அடையாளம், 1205/1. கருப்பூர் சாலை, புத்தாநத்தம்-621310.
பக்கம்: 328 விலை:

230

சூடாமணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. மனித உறவுகளின் மீதான கரிசனம்தான் சூடாமணியின் படைப்புலகம். அன்பும், தனிமையும், ஆற்றாமையின் இருள்வெளியும்கொண்டவை சூடாமணியின் படைப்புகள். 36 சிறுகதைகளைக்கொண்ட இந்தப் புத்தகத்தில், 'வெளியே நல்ல மழை’, 'டாக்டரம்மா அறை’, 'இறுக மூடிய கதவுகள்’ ஆகிய கதைகள் மிக முக்கியமானவை. எந்தக் குழுவிலும் இடம்பெறாத, யாருடைய தீவிரப் பரிவுக்கும் உள்ளாகாத சூடாமணியின் எழுத்தாளுமையை விவரிக்கும் புத்தகம் இது. இதன் பின் இணைப்பாக அவரது சிநேகிதி பாரதி, எழுத்தாளர் அம்பையின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன!
வந்தான் வென்றான் - இசை: தமன்.எஸ்
வெளியீடு: சோனி மியூஸிக் விலை:

99

தாமரையின் வரிகளில், கார்த்திக், பிரியா ஹேமேஷ் குரல்களில், 'காஞ்சன மாலா’ பாடலின் துள்ளல் இசை தாளமிடவைக்கிறது. தமன் பாடியுள்ள 'நகருதே’வில் இசைக் கோர்வை மனதில் நிற்கிறது. ஹரிஹரனின் குரலில் 'முடிவில்லா மழையோடு’ பாடல் இனிமை. மற்ற பாடல்கள் சுமார் ரகம். ஒரே பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்கிறோமோ என்கிற உணர்வை ஏனோ ஏற்படுத்துகிறது இசைக் கோர்ப்பு. வரிகளை அமுக்கும் இசைக் கருவிகளின் ஆதிக்கத்தைக் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்!
துயரம் படிந்த கரைகள் இயக்கம்: செ.தே.இமயவர்மன்
வெளியீடு: தமிழ்ச் சுவை - தொடர்புக்கு: tamilchuvai@gmail.com

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்படும் கொடூரத்தின் பின்னணியை, மிக ஆழமாக அலசும் படம். நாகப்பட்டினம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் இலங்கைக் கடற்கரையினரின் துப்பாக்கிக் குண்டுகளால் சிதறடிக்கப்படுவதன் காரணங்களை, வரலாற்றுத் தகவல்களோடும், வரைபடங்கள் மூலமாகவும் விளக்குகிறது படம். நெஞ்சை உறையவைக்கும் படுகொலைகளைக் கண்ணால் பார்த்த சாட்சிகளான சில மீனவர்களின் வாக்குமூலங்கள் மனதைக் கலங்கடிக்கின்றன. மத்திய - மாநில அரசுகளின் கண்களுக்குப் புலப்படாமல் அல்லது புலப்பட்டும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் துயரங்களை கேமரா கண்கள் மூலம் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் ஆவணப்படம்!
இணையம் அப்டேட்ஸ்!
http://ponmalars.blogspot.com

இணையம் தொடர்பான அப்டேட்ஸ் தகவல்கள் பகிர்ந்துகொள்ளும் தளம். சிலிக்கான் பள்ளத்தாக்கின் மாற்றங்களைப் புதுப் புது டெக்னிக்கல் வார்த்தைகள் சொல்லிப் புரியவைக்கிறார்கள். 'ஜி-மெயில் கணக்கைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த ஏழு வழிமுறைகள்’, 'உங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பி அடிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய’ போன்ற அனைவருக்கும் உபயோகமான தகவல்களைப் பதிவேற்றி இருப்பது நல்ல விஷயம்!
வெளிநாடு போவோருக்கு!
http://www.numbeo.com/common/

வேலை தேடி வெளிநாடு செல்பவர்களுக்குப் பயனுள்ள தளம். உலக நகரங்களின் 'காஸ்ட் ஆஃப் லிவிங்’ விவரங்கள் விரிவாகப் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. தங்கும் இடத்தில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துச் செலவுகளையும் பட்டியலிடுகிறது. விலையேற்றங்களின்போது அண்டை மாநிலங்களோடு விலைவாசியை ஒப்பிடுபவர்களுக்கு மிகவும் உபயோகமான தளம்!